YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 45

45
பரிசுத்த பயன்பாட்டிற்காக நிலம் பிரிக்கப்படுதல்
1“நீங்கள் சீட்டுப்போட்டு இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நிலங்களைப் பங்கு வைத்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நிலத்தின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிக்க வேண்டும். இது கர்த்தருக்குரிய பரிசுத்தமான பகுதியாகும். அந்நிலம் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். இந்நிலம் முழுவதும் பரிசுத்தமானதாக இருக்கும். 2500 முழம் (875') சதுரமுள்ள இடம் ஆலயத்துக்குரியது, 50 முழம் (875') அகலமுடைய திறந்த வெளி இடம் ஆலயத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். 3பரிசுத்தமான இடத்தில் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் கொண்ட இடம் அளந்தெடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் ஆலயம் அமைக்க வேண்டும். ஆலயப் பகுதி மிகவும் பரிசுத்தமான இடமாக இருக்கும்.
4“நிலத்தின் பரிசுத்தமான பகுதியானது, ஆசாரியர்களுக்கும் கர்த்தருக்கு அருகில் போய் ஆராதனை செய்யும் ஆலயப் பணியாளர்களுக்கும் உரியது. இது ஆசாரியர்களின் வீடுகளுக்கும் ஆலயத்திற்கும் உரியது. 5இன்னொரு பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையதாக ஆலயத்தில் பணிபுரியும் லேவியர்களுக்காக இருக்கவேண்டும். இந்த நிலமும் லேவியர்கள் வாழ்வதற்குரிய இடமாக இருக்கும்.
6“நீங்கள் நகரத்துக்கென்று 5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட இடம் தரவேண்டும். இது பரிசுத்தமான பகுதிக்கு அருகிலேயே இருக்கவேண்டும். இது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் உரியதாக இருக்கும். 7அதிபதி பரிசுத்தமான பகுதியின் இருபக்கங்களிலுள்ள நிலத்தையும் நகரத்திற்குச் சொந்தமான நிலத்தையும் பெறுவான். இது பரிசுத்தமான பகுதிக்கும் நகரப்பகுதிக்கும் இடையில் இருக்கும். இது வம்சத்தாருக்குரிய பகுதியின் பரப்பைப் போன்ற அளவுடையதாக இருக்க வேண்டும். இதன் நீளம் மேல் எல்லை தொடங்கி கீழ் எல்லை மட்டும் இருக்கும். 8இது இஸ்ரவேலில் அதிபதியின் சொத்தாக இருக்கும். எனவே அதிபதி எனது ஜனங்களை என்றைக்கும் துன்பப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால், அவர்கள் அந்த நிலத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களின் கோத்திரங்களுக்குத் தக்கதாகக் கொடுப்பார்கள்!”
9எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “போதும் இஸ்ரவேல் அதிபதிகளே! கொடூரமாக இருப்பதை நிறுத்துங்கள்! ஜனங்களிடம் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்! நேர்மையாக இருங்கள். நன்மையைச் செய்யுங்கள். என் ஜனங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தாதீர்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
10“ஜனங்களை ஏமாற்றுவதை விடுங்கள். சரியான படிக்கற்களையும் அளவு கோல்களையும் பயன்படுத்துங்கள்! 11மரக்காலும் அளவு குடமும் ஒரே அளவாய் இருக்கட்டும். மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் அளவுக்குடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கட்டும். கலத்தின்படியே அதன் அளவு நிர்ணயிக்கப்படட்டும். 12ஒரு சேக்கல் இருபது கேரா, ஒரு மினா 60 சேக்கலுக்கு இணையாக வேண்டும். 20 சேக்கலுடன் 25 சேக்கலைச் சேர்த்து, அதோடு 15 சேக்கலைச் சேர்த்தால், அதற்கு இணையாக வேண்டும்.
13“இது நீங்கள் கொடுக்கவேண்டிய சிறப்புக் காணிக்கை.
ஒரு கலம் (6 சேக்கல்) கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கையும் (14 கோப்பைகள்),
ஒரு கலம் (6 சேக்கல்) வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கைப் (14 கோப்பைகள்) படைக்க வேண்டும்:
14அளவு குடத்தால் அளக்கவேண்டிய எண்ணெயின் கட்டளை:
பத்து குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி (55 கேலன்) எண்ணெயில் 1/10 பங்கை (1/2 கேலன்) படைக்க வேண்டும்.
15இஸ்ரவேல் நாட்டிலே நல்ல மேய்ச்சல் மேய்கிற மந்தையிலே 200 ஆடுகளில் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.
“இச்சிறப்பு காணிக்கை தானிய காணிக்கைக்காகவும் தகனபலியாகவும் சமாதான பலியாகவும் அமையும். இக்காணிக்கைகள் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த உதவும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறினார்.
16“நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் அதிபதிக்கு இக்காணிக்கைகளைக் கொடுக்கவேண்டும். 17ஆனால் அதிபதி சிறப்பான பரிசுத்த விடுமுறைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்கவேண்டும். அதிபதி தகனபலிகள், தானியக் காணிக்கைகள், பானங்களின் காணிக்கைகள் ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். இவற்றைப் பண்டிகை நாட்களிலும் அமாவாசை (மாதப் பிறப்பு) நாட்களிலும், ஓய்வு நாட்களிலும், இஸ்ரவேல் குடும்பத்தாரின் மற்ற எல்லாச் சிறப்புப் பண்டிகை நாட்களிலும் கொடுக்கவேண்டும். அதிபதி பாவப்பரிகாரக் பலிகளையும், தானியக் காணிக்கைகளையும், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் இஸ்ரவேல் வம்சத்தாரை பரிசுத்தப்படுத்துவதற்காகக் கொடுக்கவேண்டும்.”
18எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “முதல் மாதத்தின், முதல் நாளில், பழுதற்ற ஒரு இளங்காளையை எடுக்கவேண்டும். நீங்கள் அதனை ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தவேண்டும். 19ஆசாரியன் பாவப் பரிகார இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆலயத்தின் வாசல் தூண்களிலும் பலிபீடத்தின் சட்டத்து நான்கு மூலைகளிலும் உட்பிரகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். 20நீங்கள் இதேபோன்று மாதத்தின் ஏழாவது நாளிலும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ பாவம் செய்த ஒருவனுக்காகச் செய்யலாம். இவ்வாறு நீங்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தலாம்.
பஸ்கா பண்டிகையின்போது கொடுக்கவேண்டிய காணிக்கைகள்
21“முதல் மாதத்தின் 14வது நாளன்று நீங்கள் பஸ்காவைக் கொண்டாடவேண்டும். இந்த நேரத்தில் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை தொடங்கும். அப்பண்டிகை ஏழுநாட்கள் தொடரும். 22அந்த நேரத்தில் அதிபதி தானே ஒரு இளங்காளையை அவனுக்காகவும், எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் பாவப்பரிகாரம் செய்வதற்காகக் கொடுப்பான். 23ஏழு நாள் பண்டிகையின்போது அதிபதி ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பழுதற்றதாகக் கொடுக்க வேண்டும். அவை கர்த்தருக்குரிய தகனபலியாக அமையும். ஏழு நாள் பண்டிகையில் ஒவ்வொரு நாளும் ஒரு இளங்காளையைக் கொடுப்பான். அவன் ஒவ்வொரு நாளும் ஒரு ஆட்டுக்கடாவை பாவப் பரிகார பலியாக கொடுப்பான். 24ஒவ்வொரு காளையோடும் ஒரு மரக்கால் மாவையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடு ஒரு எப்பா வாற் கோதுமை மாவையும் கொடுப்பான். அதிபதி ஒருபடி (1 கேலன்) எண்ணெயையும் கொடுப்பான். 25ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் தொடங்குகிற கூடாரப் பண்டிகையிலே அவன் அப்படியே ஏழு நாளும் அதற்குச் சரியானபடிச் செய்ய வேண்டும். அப்பலிகள் பாவப்பரிகாரப் பலியாகவும் தகனபலியாகவும் தானியக் காணிக்கையாகவும் எண்ணெய் காணிக்கையாகவும் அமைய வேண்டும்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 45