YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 25

25
ஆபிரகாமின் குடும்பம்
1ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள். 2கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள். 3யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான். தேதானுடைய சந்ததி அசூரீம், லெத்தூசீம், லெயூமீம், என்பவர்கள். 4மீதியானுக்கு ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்ற குமாரர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் பிள்ளைகள். 5-6ஆபிரகாம் மரிப்பதற்குமுன், அவன் தன் வேலைக்காரப் பெண்களின் பிள்ளைகளுக்குப் பரிசுகளைக் கொடுத்து கிழக்கு நாடுகளுக்கு ஈசாக்கை விட்டு அப்பால் அவர்களை அனுப்பி வைத்தான். பின் ஆபிரகாம் தனக்குரிய எல்லாவற்றையும் ஈசாக்குக்கு உரிமையாக்கினான்.
7ஆபிரகாமுக்கு 175 வயது ஆனது. 8அதனால் அவன் மெலிந்து பலவீனமாகி மரணமடைந்தான். அவன் ஒரு நீண்ட திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தான். அவன் தனது பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். 9அவனது குமாரர்களான ஈசாக்கும் இஸ்மவேலும் அவனை மக்பேலா குகையிலே அடக்கம் செய்தனர். அந்தக் குகை எப்பெரோனின் வயலில் இருந்தது. எப்பெரோன் சோகாரின் குமாரன். அந்த இடம் மம்ரேக்குக் கிழக்கே இருந்தது. 10இந்தக் குகையைத்தான் ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தான். சாராளோடு சேர்த்து ஆபிரகாமை அடக்கம் செய்துவிட்டனர். 11ஆபிரகாம் மரித்துப் போனபின் தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஈசாக்கு தொடர்ந்து பெயர்லகாய்ரோயியில் வாழ்ந்து வந்தான்.
12பின்வருவது இஸ்மவேலின் குடும்பப் பட்டியல்: இஸ்மவேல் ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவன். (ஆகார் சாராளின் எகிப்தியப் பணிப்பெண்.) 13இஸ்மவேலின் பிள்ளைகளது பெயராவன: மூத்தகுமாரன் பெயர் நெபாயோத், பின் கேதார், தொடர்ந்து அத்பியேல், மிப்சாம். 14மிஷ்மா, தூமா, மாசா, 15ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள் பிறந்தார்கள். இவை அனைத்தும் இஸ்மவேலின் ஜனங்களின் பெயர்கள் ஆகும். 16ஒவ்வொரு குமாரனும் தங்கள் குடியிருப்புகளை நகரங்களாக்கிக்கொண்டனர். பன்னிரண்டு பிள்ளைகளும் தம் ஜனங்களுடன் பன்னிரண்டு ராஜகுமாரர்களைப்போல வாழ்ந்தனர். 17இஸ்மவேல் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். பின் அவன் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். 18இஸ்மவேலின் சந்ததிகள் பாலைவனப் பகுதி முழுவதும் பரவி குடியேறினார்கள். அப்பகுதி ஆவிலா முதல் சூர் வரை இருந்தது. சூர் எகிப்துக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து அசிரியா வரை பரவிற்று. இஸ்மவேலின் சந்ததிகள் அவ்வப்போது அவனுடைய சகோதரர்களின் ஜனங்களைத் தாக்கினார்கள்.
ஈசாக்கின் குடும்பம்
19இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன். 20ஈசாக்கிற்கு 40 வயதானபோது அவன் ரெபெக்காளை மணந்துகொண்டான். ரெபெக்காள் பதான் அராம் என்னும் ஊரைச் சேர்ந்த பெத்துவேலின் குமாரத்தி. லாபானுக்குச் சகோதரி. 21ஈசாக்கின் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே, அவன் தன் மனைவிக்காக கர்த்தரிடம் ஜெபித்தான். ஈசாக்கின் ஜெபத்தைக் கேட்டு, கர்த்தர் ரெபெக்காள் கர்ப்பமடையச் செய்தார்.
22அவள் கர்ப்பமாக இருந்தபோது, கருவிலுள்ள குழந்தைகள் மோதிக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் கர்த்தரிடம் ஜெபித்து, “ஏன் எனக்கு இவ்வாறு ஏற்படுகிறது?” என்று கேட்டாள். 23அதற்கு கர்த்தர்,
“உனது கர்ப்பத்தில் இரண்டு நாடுகள் உள்ளன.
இரண்டு குடும்பங்களின் ராஜாக்கள் உனக்குப் பிறப்பார்கள்.
அவர்கள் பிரிக்கப்பட்டு ஒருவனைவிட இன்னொருவன் பலவானாக இருப்பான்.
மூத்தவன் இளையவனுக்குச் சேவை செய்வான்” என்றார்.
24சரியான நேரம் வந்தபோது ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 25முதல் குழந்தை சிவப்பாக இருந்தது. அவனது உடல் ரோம அங்கி போர்த்தது போல இருந்தது. எனவே அவன் ஏசா என்று பெயர் பெற்றான். 26இரண்டாவது குழந்தை பிறந்தபோது, அவன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டனர். யாக்கோபும் ஏசாவும் பிறக்கும்போது ஈசாக்குக்கு 60 வயது.
27பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா திறமை மிக்க வேட்டைக்காரன் ஆனான். அவன் எப்போதும் வெளியே அலைவதிலேயே விருப்பப்பட்டான். ஆனால் யாக்கோபு அமைதியானவன், தன் கூடாரத்திலேயே தங்கியிருந்தான். 28ஈசாக்கு ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடிய மிருகங்களை உண்ண ஈசாக்கு விரும்பினான். ஆனால் ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள்.
29ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். 30எனவே ஏசா யாக்கோபிடம், “நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு” என்று கேட்டான் (இதனாலே அவனுக்கு ஏதோம் என்றும் பெயராயிற்று.)
31ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: “முதல் குமாரன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்” என்று கேட்டான்.
32ஏசாவோ, “நான் பசியால் மரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மரித்துப் போனால் என் தந்தையின் சொத்துக்கள் எல்லாம் எனக்கு உதவுவதில்லை. எனவே நான் எனது பங்கை உனக்குத் தருகிறேன்” என்றான்.
33ஆனால் யாக்கோபு, “முதலில் உன் பங்கைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான். ஆகையால் ஏசாவும் சத்தியம் செய்தான். அவன் மூதாதையர் சொத்தாக தனக்குக் கிடைக்கவிருந்த பங்கை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். 34பிறகு யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அவற்றை உண்டு, விலகிப் போனான். இவ்வாறு ஏசா தனது பிறப்புரிமையைப்பற்றி கவலைப்படாமல் இருந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ஆதியாகமம் 25