YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 28

28
1ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தான். அவனுக்கு ஒரு ஆணையிட்டான். “நீ ஒரு கானானியப் பெண்ணை மனைவியாக்கக் கூடாது. 2எனவே நீ இந்த இடத்தைவிட்டுப் பதான் ஆராமுக்குப் போ. உன் தாயின் தந்தையான பெத்துவேல் வீட்டிற்குப் போ. உன் தாயின் சகோதரனான லாபான் அங்கு வாழ்கிறான். அவனது குமாரத்திகளில் ஒருத்தியை மணந்துகொள். 3சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். உனக்கு நிறைய குழந்தைகள் பிறப்பார்கள். ஒரு பெரிய தேசத்தின் தந்தையாவாய். 4தேவன் உன்னையும் உன் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பார். ஆபிரகாமையும் அப்படித்தான் ஆசீர்வதித்தார். நீ வாழ்கிற நாடு உனக்குச் சொந்தமாகும். தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த நாடு இது” என்றான்.
5ஆகவே ஈசாக்கு யாக்கோபை பதான் ஆராமுக்கு அனுப்பி வைத்தான். யாக்கோபும் லாபானிடம் போனான். பெத்துவேல் லாபானுக்கும் ரெபெக்காளுக்கும் தந்தை. ரெபெக்காள் ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் தாய்.
6தன் தந்தை யாக்கோபை ஆசீர்வதித்ததையும் ஒரு மனைவியைத் தேட யாக்கோபை பதான் ஆராமுக்கு தன் தந்தை அனுப்பியதையும், கானானியப் பெண்களை மணந்துகொள்ளக் கூடாது என்று ஆணை இட்டதையும் ஏசா அறிந்துகொண்டான். 7யாக்கோபு தன் தாயும், தந்தையும் சொன்னதைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்து பதான் ஆராமுக்குப் போனதையும் அறிந்தான். 8இதனால் ஈசாக்கு தம் பிள்ளைகள் கானானியப் பெண்களை மணந்துகொள்வதை விரும்பவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். 9அவனுக்கு ஏற்கெனவே இரண்டு மனைவியர் இருந்தனர். ஆனாலும் அவன் இஸ்மவேலிடம் போய் அவன் குமாரத்தியாகிய மகலாத்தை மணந்துக்கொண்டான். இஸ்மவேல் ஆபிரகாமின் குமாரன். மகலாத் நெபாயோத்தின் சகோதரி.
பெத்தேல் – தேவனுடைய வீடு
10யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்குப் போனான். 11அவன் பயணத்தின்போது சூரியன் மறைந்தது. அன்றைய இரவு தங்கும்பொருட்டு ஒரு இடத்துக்குச் சென்றான். அங்கே ஒரு கல்லை எடுத்து அதை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 12யாக்கோபு ஒரு கனவு கண்டான். கனவில் வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாய் இருந்த ஒரு ஏணியைக் கண்டான். தேவதூதர்கள் அதில் ஏறி மேலும் கீழும் வந்து போய்க்கொண்டிருந்தனர். 13கர்த்தர் ஏணியின் அருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டான். கர்த்தர், “நானே தேவன். உன் தாத்தாவான ஆபிரகாமுக்கும் நானே தேவன். நான் ஈசாக்குக்கும் தேவன். இப்போது நீ படுத்திருக்கிற பூமியையே உனக்குக் கொடுப்பேன். இது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் உரியதாகும். 14உனக்கு எண்ணிறந்த சந்ததிகள் உருவாகுவார்கள். பூமியில் உள்ள தூளைப்போன்று அவர்கள் எண்ணிக்கையில் நிறைந்திருப்பார்கள். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமாக வடக்கிலும் தெற்கிலுமாகப் பரவுவார்கள். உன்னாலும் உன் சந்ததிகளாலும் உலகிலுள்ள குடும்பங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
15“நான் உன்னோடு இருக்கிறேன். நீ போகிற ஒவ்வொரு இடத்திலும் உன்னைக் காப்பாற்றுவேன். நான் மீண்டும் உன்னை இங்கே கொண்டுவருவேன். எனது வாக்குறுதியை முடிக்கும்வரை உன்னை விட்டு விலகமாட்டேன்” என்றார்.
16உடனே யாக்கோபு தனது தூக்கத்திலிருந்து எழுந்தான். “கர்த்தர் இங்கேதான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் தூங்கும்வரை இதை அறிந்துகொள்ளவில்லை” என்றான்.
17அவனுக்கு பயம் வந்தது, “இது மிகச் சிறந்த இடம். இது தேவனுடைய வீடு, பரலோகத்தின் வாசல்” என்றான்.
18யாக்கோபு அதிகாலையில் எழுந்ததும் தலைக்கு வைத்துப்படுத்த கல்லை நிமிர்த்தி வைத்து, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். இவ்வாறு அவன் அந்தக் கல்லை நினைவுச் சின்னமாக ஆக்கினான். 19இந்த நகரத்தின் பெயர் லூஸ். ஆனால் யாக்கோபு அதற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்.
20பின் யாக்கோபு: “தேவன் என்னோடு இருந்து, எங்கு போனாலும் என்னைத் தேவன் காப்பாற்று வாரானால், உண்ண உணவும் அணிய ஆடையும் தேவன் கொடுப்பாரானால், 21என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார். 22இந்த இடத்தில் இக்கல்லை ஞாபகார்த்தக் கல்லாக நிறுத்துவேன். தேவனுக்கான பரிசுத்த இடம் இது என்று அடையாளம் காட்டும். தேவன் எனக்குக் கொடுக்கும் அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பேன்” என்று பொருத்தனை செய்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ஆதியாகமம் 28