YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 5

5
1ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் ஏனைய மனிதர்களுக்கு உதவும் பொருட்டு மனிதரின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவான். காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும், மற்றும் மக்கள் தேவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அவன் செலுத்துகிறான். 2அறியாமை உடையவர்களிடமும், தவறு செய்கிறவர்களிடமும் அந்தப் பிராதான ஆசாரியனால் மென்மையாக இருக்க முடிகிறது. ஏனெனில் அவனும் பலவீனத்துக்குட்பட்டவனே ஆவான். 3இதனால் தான், மற்றவர்களுக்காகக் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு முன்னால், தன் சொந்தப் பாவங்களுக்காக அவன் காணிக்கை செலுத்த வேண்டும்.
4பிரதான ஆசாரியனாக இருப்பது ஒரு கௌரவமாகும். ஆனால் தன்னைத் தானே யாரும் பிரதான ஆசாரியனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை. தேவன் ஆரோனைத்#5:4 ஆரோன் யூதர்களில் முதல் தலைமை ஆசாரியன். இவன் மோசேயின் சகோதரன். தேர்ந்தெடுத்ததைப் போல், தேவனே அவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 5கிறிஸ்துவின் செயலும் அப்படித்தான். பிரதான ஆசாரியன் ஆகும் பெருமைக்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். அவர் கிறிஸ்துவிடம்,
“நீர் எனது குமாரன்.
இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்” என்று கூறினார்.#சங்கீ. 2:7
6இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்,
“நீர் எப்பொழுதும் மெல்கிசேதேக்கைப்
போன்று ஆசாரியராக இருப்பீர்”#சங்கீ. 110:4
7கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் தேவனிடம் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் பிரார்த்தனை செய்தார். மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற வல்ல ஒருவரிடம் அவர் பிரார்த்தனை செய்தார். தேவன் மீது இயேசுவுக்கு இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக தேவன் அப்பிரார்த்தனையை பின்னர் கேட்டார். 8அவர் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் கூட அவர் துன்பங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9இயேசு முழுமையானவரான பின்னர் தமக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர இட்சிப்பின் காரணரானார். 10இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழாதிருக்க எச்சரிக்கை
11இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். 12இப்போதைக்கு, நீங்கள் போதகராக ஆகி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் தேவனுடைய போதனைகள் என்னும் அடிப்படைப் பாடங்களை உங்களுக்கே யாராவது போதிக்கத் தேவையாய் இருக்கிறது. இன்னும் உங்களுக்குப் பால் உணவே தேவைப்படுகிறது. திட உணவுக்கு நீங்கள் தயாராயில்லை. (அதாவது இன்னும் கடினமான போதனைகள் அல்ல, எளிய போதனைகளே உங்களுக்குத் தேவைப்படுகிறது). 13இன்னும் பால் தேவையாய் இருக்கிற குழந்தையைப்போல் அடிப்படைப் போதனை தேவையாய் இருக்கிற ஒருவன் சரியாக வாழ்வது பற்றிய சிரமமான போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவன் இன்னும் ஒரு குழந்தையே! 14திட உணவானது குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களுக்கு உரியது. நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அனுபவத்தின் வாயிலாக அடையாளம் கண்டுகொள்ள அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 5