YouVersion Logo
Search Icon

ஓசியா 10

10
இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது
1இஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன்.
ஆனால் இஸ்ரவேல் மேலும், மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான்.
அவனுடைய நாடு மேலும், மேலும் வளம் பெற்றது.
ஆகவே அவன் மேலும், மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான்.
2இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஏமாற்ற முயன்றார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கர்த்தர் அவர்கள் பலிபீடங்களை உடைப்பார்.
அவர் அவர்கள் நினைவு கற்களை அழிப்பார்.
இஸ்ரவேலர்களின் பொல்லாத முடிவுகள்
3இப்போது இஸ்ரவேலர்கள் கூறுகிறார்கள்: “நமக்கு ராஜா இல்லை நாம் கர்த்தரை கௌரவிப்பதில்லை. அவருடைய ராஜா நம்மை ஒன்றும் செய்யமுடியாது!”
4அவர்கள் வாக்குறுதிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்களை மட்டுமே சொல்கின்றனர். அவர்கள் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அவர்கள் மற்ற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்கள். தேவன் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. நீதிபதிகள் உழுத வயல்களில் முளைத்திருக்கும் விஷத் தன்மையுள்ள களைகள் போன்று உள்ளார்கள்.
5சமாரிய ஜனங்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை ஆராதிக்கிறார்கள். அந்த ஜனங்கள் உண்மையில் அழுவார்கள். அந்த ஆசாரியர்கள் உண்மையில் அழுவார்கள். ஏனென்றால் அவர்களது அழகான விக்கிரகம் போய்விட்டது. அது தூக்கிச் செல்லப்பட்டது. 6அசீரியாவின் பேரரசனுக்கு அன்பளிப்பாக அவ்விக்கிரகம் கொண்டுப்போகப்பட்டது. அவன் எப்பிராயீமின் அவமானகரமான விக்கிரகத்தை வைத்துக்கொள்வான். இஸ்ரவேல் அதன் விக்கிரகத்தினிமித்தம் அவமானம் அடையும். 7சமாரியாவின் அந்நிய தெய்வம் அழிக்கப்படும். இது நீர்ப்பரப்பின் மேலே மிதக்கும் மரத்துண்டைப் போன்று இருக்கும்.
8இஸ்ரவேல் பாவம் செய்தது. பல உயர் மேடைகளைக் கட்டியது. ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும். அவர்கள் பலிபீடங்களில் முட்செடிகளும், களைகளும் வளரும். பிறகு அவர்கள் மலைகளிடம், “எங்களை மூடுங்கள்!” என்றும் குன்றுகளிடம் “எங்கள் மேல் விழுங்கள்” என்றும் கூறுவார்கள்.
இஸ்ரவேல் பாவத்துக்கு விலை கொடுக்கும்
9இஸ்ரவேலே நீ கிபியாவின் காலத்திலிருந்து பாவம் செய்தாய். (அந்த ஜனங்கள் அங்கே தொடந்து பாவம் செய்துக்கெண்டிருக்கிறார்கள்.) கிபியாவில் அப்பொல்லாத ஜனங்களை யுத்தம் உண்மையாகவே கைப்பற்றும். 10நான் அவர்களைத் தண்டிக்க வருவேன். படைகள் அவர்களுக்கு எதிராகச் சேர்ந்துவரும். அவர்கள் இஸ்ரவேலர்களை அவர்களது இரண்டு பாவங்களுக்காகத் தண்டிப்பார்கள்.
11எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்ட போரடிக்கும் களத்திலுள்ள தானியங்களின் மேல் நடக்க விரும்பும், இளம் காளையைப் போன்றவன். அவன் கழுத்தில் நான் ஒரு நல்ல நுகத்தடியை மாட்டுவேன். நான் எப்பிராயீமை கயிற்றால் கட்டுவேன். பிறகு யூதா உழவுசெய்யத் தொடங்குவான். யாக்கோபு தானாகவே பரம்படிப்பான்.
12நீ நன்மையை நட்டால் உண்மையான அன்பை அறுவடை செய்வாய். உன் நிலத்தை உழு. கர்த்தரோடு நீ அறுவடை செய்வாய். அவர் வருவார். அவர் உன் மீது நன்மையை மழைப்போன்று பொழியச் செய்வார்.
13ஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய். 14எனவே உனது படைகள் யுத்தத்தின் பேரொலியைக் கேட்கும். உனது எல்லா அரண்களும் அழிக்கப்படும். இது பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல் இருக்கும். அப்போர்க்காலத்தில் தாய்மார்கள் தம் குழந்தைகளோடு கொல்லப்பட்டார்கள். 15உனக்கு அது பெத்தேலில் ஏற்படும். ஏனென்றால் நீ ஏராளமான பாவங்களைச் செய்தாய். அந்த நாள் தொடங்கும்போது இஸ்ரவேலின் ராஜா முழுமையாக அழிக்கப்படுவான்.

Currently Selected:

ஓசியா 10: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ஓசியா 10