YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 16

16
1நீங்கள் நாட்டின் ராஜாவுக்கு அன்பளிப்பை அனுப்பவேண்டும். நீங்கள் சேலாவிலிருந்து வனாந்தரம் வழியாக சீயோன் குமாரத்தியின் மலைக்கு (எருசலேம்) ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்புங்கள்.
2மோவாபின் பெண்கள் அர்னோன் ஆற்றை கடக்க முயன்றனர்.
அவர்கள் உதவிக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடுகிறார்கள்.
மரத்திலிருந்து கூடு விழுந்த பிறகு, அதை இழந்த பறவைகளைப்போன்றிருக்கின்றனர்.
3“எங்களுக்கு உதவுங்கள்!
என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்!
மதிய வெயிலிலிருந்து நிழலானது எங்களைக் காப்பாற்றுவது போன்று எங்கள் பகைவரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
நாங்கள் எங்கள் பகைவர்களிடமிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்.
எங்களை ஒளித்து வையுங்கள்.
எங்களை எமது பகைவர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள்
4மோவாபிலிருந்த ஜனங்கள் தங்கள் வீடுகளிலிருந்து விலக பலவந்தப்படுத்தப்பட்டனர்.
எனவே, அவர்கள் உங்கள் நாட்டில் வாழட்டும்.
அவர்களின் பகைவர்களிடமிருந்து அவர்களை மறைத்துவையுங்கள்”
என்று அவர்கள் சொல்கிறார்கள்.
கொள்ளையானது நிறுத்தப்படும்.
பகைவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.
மற்ற ஜனங்களைக் காயப்படுத்திய மனிதர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியே போவார்கள்.
5பிறகு, புதிய ராஜா வருவார்.
அந்த ராஜா தாவீதின் குடும்பத்திலிருந்து வருவார். அவர் உண்மையுள்ளவராக இருப்பார்.
அவர் அன்பும் கருணையும் உள்ளவராக இருப்பார்.
அந்த ராஜா சரியாக நியாயந்தீர்ப்பார்.
அவர் சரியாகவும் நல்லதாகவும் உள்ளவற்றையே செய்வார்.
6மோவாபிலுள்ள ஜனங்கள் பெருமையும் மேட்டிமையும் கொண்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்.
அவர்கள் பிடிவாதமும் தற்பெருமையும் உடையவர்கள்.
அவர்களின் தற்பெருமைகள் வெற்று வார்த்தைகளாக உள்ளன.
7மோவாப் நாடு முழுவதுமே இந்த அகங்காரத்தால் துன்புறும்.
மோவாபிலுள்ள அனைத்து ஜனங்களும் அலறுவார்கள், ஜனங்கள் துக்கம் அடைவார்கள்.
அவர்கள் கடந்துபோன காலத்தில் தாங்கள் கொண்டிருந்தவற்றின்மேல் ஆவல் கொள்வார்கள்.
அவர்கள் கிராரேசேத் ஊரில் செய்யப்பட்ட அத்தி அப்பங்களை விரும்புவார்கள்.
8எஸ்போன் வயல்களும் சிப்மா ஊர் திராட்சைத் தோட்டங்களும் வளர முடியவில்லையே என்று வருத்தப்படுவார்கள்.
வெளிநாட்டு ராஜாக்கள் திராட்சைக் கொடிகளை வெட்டிப்போட்டனர்.
பகைப் படைகள் யாசேர் நகரம் வரையும் வானந்திரத்திலும் பரவி இருக்கின்றன.
அவர்கள் கடல் வரையிலும்கூடப் பரவி இருந்தனர்.
9“நான் யாசேர் மற்றும் சிப்மா ஜனங்களோடு அழுவேன்,
ஏனென்றால், திராட்சைகள் அழிக்கப்பட்டுவிட்டன.
நான் எஸ்போனே மற்றும் எலெயாலே ஜனங்களோடு அழுவேன்.
ஏனென்றால், அங்கே அறுவடை நடைபெறாது.
கோடைகாலப் பழங்களும் இல்லாமல் போகும்.
மகிழ்ச்சி ஆரவாரங்களும் இல்லாமல் போகும்.
10கர்மேலில் மகிழ்ச்சியும் பாடலும் இராது.
அறுவடைக் காலத்தில் அனைத்து மகிழ்ச்சியையும் நிறுத்துவேன்.
திராட்சையானது இரசமாக தயாராக உள்ளது.
ஆனால் அவை வீணாகப்போகும்.
11எனவே நான் மோவாபுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.
நான் கிர்கேரேசுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.
நான் இந்த நகரங்களுக்காக மிக, மிக வருத்தமாக இருக்கிறேன்.
12மோவாபிலுள்ள ஜனங்கள் தொழுதுகொள்ளும் தம் இடங்களுக்குச் செல்வார்கள்.
ஜனங்கள் ஜெபம் செய்ய முயல்வார்கள்.
ஆனால், என்ன நடைபெறும் என்று பார்ப்பார்கள்.
அவர்கள் ஜெபம் செய்யக்கூட முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பார்கள்.”
13பலமுறை, கர்த்தர் மோவாபைப்பற்றிய இச்செய்திகளைச் சொன்னார். 14இப்பொழுதும் கர்த்தர் கூறுகிறார்: “மூன்று ஆண்டுகளில், (ஒரு கூலிக்காரன் தனது காலத்தை எண்ணுவதுபோன்று) அந்த ஜனங்கள் அனைவரும் அவர்களின் தற்பெருமைக்குரிய பொருட்களும் அழிந்துபோகும். அங்கு சிலரே மீதியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் பலராக இருக்கமாட்டார்கள்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 16