YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 5

5
இஸ்ரவேல் தேவனுடைய விசேஷமான தோட்டம்
1இப்பொழுது, நான் எனது நண்பருக்காக (தேவன்) ஒரு பாடல் பாடுவேன். இப்பாடல் என் நண்பர் திராட்சைத் தோட்டத்தின் (இஸ்ரவேல்) மேல் வைத்த அன்பைப்பற்றியது.
எனது நண்பருக்கு வளமான வெளியில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
2எனது நண்பர் அதனைச் சுத்தப்படுத்தினார்.
அதில் சிறந்த திராட்சைக் கொடிகளை நட்டார்.
அதன் நடுவில் ஒரு கோபுரம் அமைத்தார். அதில் நல்ல திராட்சை வளரும் என்று நம்பினார்
ஆனால் அதில் கெட்ட திராட்சைகளே இருந்தன.
3எனவே தேவன் சொன்னார், “எருசலேமில் வாழும் ஜனங்களே யூதாவில் உள்ள மனிதர்களே
என்னையும் என் திராட்சைத் தோட்டத்தையும் எண்ணிப் பாருங்கள்.
4எனது திராட்சைத் தோட்டத்திற்காக நான் இன்னும் என்ன செய்ய முடியும்?
என்னால் முடிந்தவற்றை நான் செய்துவிட்டேன்.
நல்ல திராட்சை வளரும் என்று நம்பினேன்.
ஆனால் கெட்ட திராட்சைகளே உள்ளன. ஏன் இவ்வாறு ஆயிற்று?
5இப்பொழுது, எனது திராட்சைத் தோட்டத்தில் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வேன்.
நான் முட்புதர்களை விலக்குவேன். அவை வயலைக் காக்கின்றன. அவற்றை எரித்துப்போடுவேன்.
கற்சுவர்களை இடித்துப்போடுவேன்.
அது மிதியுண்டு போகும்.
6என் திராட்சைத் தோட்டத்தை காலியாக வைப்பேன்.
எவரும் கொடிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். எவரும் தோட்டத்தில் வேலை செய்யமாட்டார்கள். முட்களும், புதர்களும் வளரும்.
தோட்டத்தில் மழைபொழியவேண்டாம் என்று
நான் மேகங்களுக்குக் கட்டளை இடுவேன்.”
7சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கான திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கும். கர்த்தருடைய மனமகிழ்ச்சியின் செடியானது யூதாவின் ஜனங்களே.
கர்த்தர் நியாயத்துக்குக் காத்திருந்தார்.
ஆனால் கொலைகளே நடைபெற்றன.
கர்த்தர் நீதிக்காகக் காத்திருந்தார்.
ஆனால் அழுகைகளே இருந்தன. மோசமாக நடத்தப்பட்வர்கள் முறையிட்டார்கள்.
8ஜனங்களாகிய நீங்கள் மிக நெருங்கி வாழ்கிறீர்கள். வேறு எவருக்கும் இடமில்லாதபடி உங்கள் வீடுகளை கட்டுங்கள். ஆனால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். உங்களைத் தனித்து வாழும்படி செய்வார். முழு நாட்டில் நீங்கள் மட்டும் தனியாக வாழுவீர்கள்!
9சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதை என்னிடம் சொன்னார். அவர் அவரிடம், “இப்பொழுது ஏராளமான வீடுகள் உள்ளன. உறுதியாகச் சொல்கிறேன், எல்லா வீடுகளும் அழிக்கப்படும். இப்பொழுது அழகான பெரிய வீடுகள் உள்ளன. ஆனால் அவை காலியாகிப்போகும். 10அப்போது, பத்து ஏக்கர் அளவுள்ள பெரிய திராட்சைத் தோட்டம் குறைந்த திராட்சை ரசத்தை தரும். பல மூட்டை நிறைந்த விதைகள் சிறிய அளவு தானியங்களையே விளைவிக்கும்.”
11ஜனங்களாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, மதுபானம் குடிக்கப்போகிறீர்கள். இரவு நெடுநேரம் தூங்காமல் மதுவைக் குடித்து களிக்கிறீர்கள். 12நீங்கள் மது, சுரமணடலம், தம்புரு, மேளம், நாகசுரம் போன்றவற்றோடு விருந்து கொண்டாடுகிறீர்கள். கர்த்தர் செய்த செயல்களை நீங்கள் பார்ப்பதில்லை. கர்த்தருடைய கைகள் பலவற்றைச் செய்துள்ளன. ஆனால் நீங்கள் அவற்றைக் கவனிக்கவில்லை. அதனால், இவை உங்களுக்குக் கேடு தரும்.
13கர்த்தர், “என் ஜனங்கள் சிறை பிடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.” ஏனென்றால், அவர்கள் என்னை உண்மையில் அறிந்துகொள்ளவில்லை. இஸ்ரவேலில் வாழ்கின்ற சிலர் இப்பொழுது முக்கியமானவர்களாக உள்ளனர். அவர்கள் தம் எளிமையான வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தாகத்தாலும், பசியாலும் துன்பமடைவார்கள்.
14பிறகு அவர்கள் மரித்து கல்லறைக்குப்போவார்கள். பாதாளம் மேலும், மேலும் ஜனங்களைப் பெறும். அது அளவில்லாமல் தன் வாயைத் திறந்து வைத்திருக்கும். அனைவரும் பாதாளத்துக்குப்போவார்கள் என்றார்.
15ஜனங்கள் பணிவுள்ளவர்களாக இருப்பார்கள். அப்பெரியவர்கள் தலை தரையை பார்த்தவாறு, தலை குனிந்து வணங்குவார்கள்.
16சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீதி வழங்குவார். ஜனங்கள் அவரை உயர்வானவர் என்று அறிந்துகொள்வார்கள். பரிசுத்தமான தேவன் சரியானவற்றை மட்டுமே செய்வார். ஜனங்கள் அவருக்கு மரியாதை செய்வார்கள். 17தேவன், இஸ்ரவேல் ஜனங்களைத் தம் நாட்டை விட்டு போகும்படி செய்வார். நாடு காலியாக இருக்கும். ஆடுகள் தாம் விரும்பிய இடத்துக்குப்போகும். செல்வந்தர்கள் ஒருகாலத்தில் வைத்திருந்த நிலங்களில் பரதேசிகள் நடந்து திரிவார்கள்.
18அந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம் குற்றங்களையும் பாவங்களையும் வண்டிகளைக் கயிறு கட்டி இழுத்துச் செல்வதுபோன்று இழுத்துத் செல்கிறார்கள். 19அந்த ஜனங்கள், “தேவன் சீக்கிரமாய் செயல் புரிய விரும்புகிறோம். அவர் திட்டமிட்டபடி செய்துமுடிக்கட்டும். பிறகு, அவை நிறைவேறவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். கர்த்தருடைய விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று விரும்புகிறோம். பின்னரே அவரது திட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
20அந்த ஜனங்கள், நல்லதைக் கெட்டதென்றும் கெட்டதை நல்லது என்றும் கூறுகிறார்கள். அவர்கள் இருளை வெளிச்சம் என்றும் வெளிச்சத்தை இருள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் இனிப்பைக் கசப்பு என்றும் கசப்பை இனிப்பு என்றும் எண்ணுகிறார்கள். 21அந்த ஜனங்கள் தங்களை ஞானிகள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார்கள். 22அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரமசாலிகள். 23நீங்கள் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால், அவர்கள் குற்றவாளிகளை விடுவிப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களுக்கு நியாயமாக நீதி வழங்கமாட்டார்கள். 24அவர்கள் அனைவருக்கும் கேடு ஏற்படும். அவர்களின் சந்ததி முழுமையாக அழிக்கப்படும். அவர்கள் காய்ந்த புல் நெருப்பில் எரிவதுபோன்று அழிவார்கள். அவர்களின் சந்ததி வேர் வாடி, தூசியைப்போல் பறந்துபோகும். அவர்கள் நெருப்பில் எரியும் பூக்களைப்போன்று எரிந்து, காற்றில் சாம்பல் பறப்பது போன்று ஆவார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய போதனைகளுக்கு அடிபணிய அவர்கள் மறுத்துவிட்டனர். இஸ்ரவேலரின் பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் செய்தியை அவர்கள் வெறுத்தனர்.
25எனவே இந்த ஜனங்கள் மீது கர்த்தர் மிகுந்த கோபமாயிருக்கிறார். கர்த்தர் தன் கையை உயர்த்தி அவர்களைத் தண்டிப்பார். மலைகள் கூட அவருக்குப் பயப்படும். மரித்துப்போன உடல்கள் தெருக்களில் குப்பைபோன்று குவியும். ஆனாலும் தேவன் மேலும் கோபமாக இருப்பார். அவரது கை மேலும் உயர்ந்து அவர்களைத் தண்டிக்கும்.
இஸ்ரவேலர்களைத் தண்டிக்க தேவன் படைகளைக் கொண்டுவருவார்
26பாருங்கள்! தேவன் தூர நாடுகளுக்கு ஒரு அடையாளம் காட்டிவிட்டார். தேவன் ஒரு கொடியை உயர்த்திவிட்டார். அவர் அவர்களைச் சத்தமிட்டு அழைப்பார். அவர்கள் தூர நாடுகளில் இருந்து வந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் விரைவில் நாட்டுக்குள் நுழைவார்கள். அவர்கள் வேகமாக நகருவார்கள். 27பகைவர்கள் எப்பொழுதும் சோர்ந்து விழுவதில்லை. அவர்கள் தூக்கம் வந்து தூங்குவது இல்லை. அவர்களின் ஆயுதக் கச்சைகள் எப்போதும் தயாராக இருக்கும். அவர்களது பாதரட்சைகளின் கயிறுகள் அவிழ்வது இல்லை. 28பகைவரின் அம்புகள் கூர்மையானதாக இருக்கும். அவர்களது வில்லுகள் எய்யத் தயாராக இருக்கும். குதிரைகளின் குளம்புகள் பாறையைப்போன்று கடுமையாக இருக்கும். அவர்களின் இரதங்களுக்குப் பின்னே புழுதி மேகங்கள் எழும்பும்.
29பகைவர்கள் சத்தமிடுவார்கள். அச்சத்தம் சிங்கம் கெர்ச்சிப்பதுபோல் இருக்கும். அது இளஞ் சிங்கத்தின் சத்தம்போல் இருக்கும். பகைவர்கள் தமக்கு எதிராகச் சண்டையிடுபவர்களை பிடித்துக்கொள்வார்கள். ஜனங்கள் போராடி தப்ப முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. 30ஆகவே, “சிங்கங்களின்” சத்தமானது கடலலைகளின் இரைச்சல் போல் கேட்கும். கைப்பற்றப்பட்ட ஜனங்கள் தரையைப் பார்ப்பார்கள். அதில் இருள் மட்டுமே இருக்கும். கெட்டியான மேகத்தால் வெளிச்சம் கூட இருட்டாகிவிடும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 5