YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 4

4
பெண் நியாயாதிபதியும் தீர்க்கதரிசியுமான தெபோராள்
1ஏகூத் மரித்த பின்பு, தீயவை என கர்த்தரால் குறிக்கப்பட்டச் செயல்களை மீண்டும் ஜனங்கள் செய்ய ஆரம்பித்தனர். 2எனவே கர்த்தர் கானானின் ராஜாவாகிய யாபீன் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடிக்க அனுமதித்தார். யாபீன் ஆத்சோர் பட்டணத்தில் ஆண்டு வந்தான். யாபீனின் சேனைக்குச் சிசெரா என்பவன் தலைவனாக இருந்தான். அரோசேத் ஆகோயிம் என்ற நகரில் சிசெரா வசித்து வந்தான். 3சிசெராவிற்கு 900 இரும்பு இரதங்கள் இருந்தன, 20 ஆண்டுகள் அவன் இஸ்ரவேலரைக் கொடுமையாக ஆண்டுவந்தான். எனவே அவர்கள் கர்த்தரிடம் முறையிட்டனர்.
4அங்கு தெபோராள் என்ற பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் லபிதோத்தின் மனைவி. அவள் அக்காலத்தில் இஸ்ரவேலின் பெண் தீர்க்கதரிசியாக இருந்தாள். 5ஒரு நாள், தன் பேரீச்சமரத்தின் கீழ் தெபோராள் உட்கார்ந்திருந்தாள். எப்பிராயீம் மலைநாட்டில் ராமா, பெத்தேல் ஆகிய நகரங்களின் நடுவே அம்மரம் இருந்தது. சிசெராவை என்ன செய்வதென்று அவளிடம் கேட்டறிவதற்காக இஸ்ரவேலர் கூடி வந்தனர். 6தெபோராள் பாராக் என்பவன் தன்னை வந்து சந்திக்குமாறு அவனுக்கு செய்தியை சொல்லி அனுப்பினாள். பாராக் அபினோகாமின் குமாரன். பாராக் நப்தலியிலுள்ள, கேதேஷ் நகரில் வசித்தான். தெபோராள் பாராக்கை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டு: ‘நப்தலி, செபுலோன் கோத்திரத்தில் இருந்து 10,000 ஆட்களைத் திரட்டு. அவர்களைத் தாபோர் மலைக்கு வழி நடத்து. 7நான் யாபீனின் படைத்தலைவனாகிய சிசெராவை உன்னிடம் வரச்செய்வேன். சிசெராவையும், அவனது இரதங்களையும், படைகளையும் கீசோன் நதிக்கு வரச்செய்வேன். அங்கு சிசெராவைத் தோற்கடிப்பதற்கு உனக்கு உதவுவேன்’ என்றார்” என்று சொன்னாள்.
8பாராக் தெபோராவிடம், “நீ என்னோடு வருவதாக இருந்தால் நான் போய், இதைச் செய்வேன். நீ என்னோடு வராவிட்டால் நான் போகமாட்டேன்” என்றான்.
9அதற்கு தெபோராள், “கண்டிப்பாக நான் உன்னோடு வருவேன், ஆனால் உன் மனப்பான்மையால் சிசெரா தோற்கடிக்கப்படும்போது உனக்கு அந்தப் புகழ் சேராது. கர்த்தர், ஒரு பெண் சிசெராவைத் தோற்கடிக்க அனுமதிப்பார்” என்று பதிலுரைத்தாள்.
எனவே, கேதேஸ் நகரத்திற்குத் தெபோராள் பாராக்குடன் சென்றாள். 10கேதேஷ் நகரத்தில் பாராக் நப்தலி, செபுலோன் கோத்திரத்தினரை வரவழைத்தான். அக்கோத்திரத்திலிருந்து தன்னைப் பின்தொடர்ந்து செல்வதற்கு 10,000 ஆட்களைத் தெரிந்துகொண்டான். தெபோராளும் பாராக்கோடு சென்றாள்.
11கேனியரில் ஒருவனான ஏபேர் என்பவன் இருந்தான், அவன் கேனியரை விட்டு பிரிந்து சென்றான். (கேனியர் மோசேயின் மாமனாரான ஓபாபின் சந்ததியார்.) கேதேஸ் நகருக்கருகில் சானானீம் என்னுமிடத்திலுள்ள கர்வாலி மரத்தினருகே அவன் தங்கியிருந்தான்.
12அபினோகாமின் குமாரனாகிய பாராக்தாபோர் மலையிலிருக்கிறான் என்று சிலர் சிசெராவுக்குக் கூறினார்கள். 13எனவே சிசெரா அவனது 900 இரும்பு ரதங்களையும் ஒருமித்து வரச்செய்ததுடன், தனது போர் வீரர்களையும் ஒன்று திரட்டினான். அவர்கள் அரோசேத் நகரத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கு வரைக்கும் அணிவகுத்துச் சென்றார்கள்.
14அப்போது தெபோராள் பாராக்கிடம், “இன்று சிசெராவைத் தோற்கடிக்க கர்த்தர் உனக்கு உதவுவார். கர்த்தர் உனக்காக வழியை ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருக்கிறார் என்பதை அறிவாய்” என்றாள். எனவே பாராக் 10,000 ஆட்களையும் தாபோர் மலையிலிருந்து கீழே வழிநடத்திச் சென்றான். 15பாராக்கும் அவனது ஆட்களும் சிசெராவைத் தாக்கினார்கள். யுத்தத்தின் போது, கர்த்தர் சிசெராவையும் அவனது படைகளையும், இரதங்களையும் குழப்பமடையச் செய்தார். அவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. பாராக்கும் அவனது ஆட்களும் சிசெராவின் படையைத் தோற்கடித்தனர். சிசெரா அவனது இரதத்தை விட்டுக் கீழிறங்கி ஓட ஆரம்பித்தான். 16பாராக் சிசெராவின் படையோடு போரிடுவதைத் தொடர்ந்தான். பாராக்கும் அவனது ஆட்களும் சிசெராவின் படைகளை அரோசேத் வரைக்கும் துரத்திச் சென்று சிசெராவின் ஆட்களை வாளால் கொன்றார்கள். சிசெராவின் ஆட்களில் ஒருவனும் உயிரோடு விடப்படவில்லை.
17ஆனால் சிசெரா தப்பி ஓடிவிட்டான். அவன் ஏபேர் என்பவனின் மனைவி யாகேல் இருந்த கூடாரத்தை வந்தடைந்தான். ஏபேர் கேனியர்களில் ஒருவன். ஆசோரின் ராஜாவாகிய யாபீனோடு ஏபேரின் குடும்பம் அமைதியான உறவு கொண்டிருந்தது, எனவே சிசெரா யாகேலின் கூடாரத்திற்கு ஓடினான். 18யாகேல் சிசெரா வருவதைக் கண்டாள். எனவே அவனைச் சந்திப்பதற்காக வெளியே வந்தாள். யாகேல் சிசெராவைப் பார்த்து, “ஐயா, கூடாரத்திற்கு உள்ளே வாருங்கள், அஞ்சவேண்டாம். வாருங்கள்” என்றாள். எனவே சிசெரா யாகேலின் கூடாரத்திற்குள் சென்றான். அவள் அவனை ஒரு விரிப்பால் மூடினாள்.
19சிசெரா யாகேலிடம், “நான் தாகமாயிருக்கிறேன். குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று கேட்டான். மிருகத்தின் தோலினாலாகிய பை ஒன்று யாகேலிடம் இருந்தது. அவள் அதில் பால் வைத்திருந்தாள். யாகேல் சிசெராவுக்குக் குடிப்பதற்கு அந்தப் பாலைக் கொடுத்தாள். பின் சிசெராவைத் துணியால் மூடிவிட்டாள்.
20பின் சிசெரா யாகேலை நோக்கி, “கூடாரத்தின் வாசலில் நின்றுகொள். யாரேனும் வந்து உன்னிடம், ‘உள்ளே யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்று பதில் சொல்” என்றான்.
21ஆனால் யாகேல் ஒரு கூடார ஆணியையும் சுத்தியலையும் எடுத்தாள். சத்தமெழுப்பாது சிசெராவிடம் சென்றாள். சிசெரா மிகவும் களைப்புற்றிருந்ததால், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். யாகேல் கூடார ஆணியைச் சிசெராவின் தலையின் ஒரு பக்கத்தில் வைத்துச் சுத்தியால் ஓங்கி அடித்தாள். கூடார ஆணி சிசெராவின் தலைப் பக்கத்தில் புகுந்து நிலத்தினுள் இறங்கியது! சிசெரா மரித்துப் போனான்.
22அப்போது பாராக் சிசெராவைத் தேடியபடி யாகேலின் கூடாரத்தை வந்தடைந்தான். பாராக்கைச் சந்திப்பதற்கு யாகேல் வெளியே வந்து, “உள்ளே வாருங்கள், நீங்கள் தேடும் மனிதனை நான் காட்டுகிறேன்” என்றாள். பாராக் யாகேலோடு கூடாரத்தினுள் நுழைந்தான். தலைப்பக்கத்தில் ஆணி செருகப்பட்ட நிலையில் நிலத்தில் மரித்துக் கிடந்த சிசெராவைப் பாராக் பார்த்தான்.
23அன்று இஸ்ரவேலருக்காக தேவன் கானானிய ராஜாவாகிய யாபீனைத் தோற்கடித்தார். 24அவர்கள் கானானிய ராஜாவாகிய யாபீனைத் தோற்கடிக்கும் மட்டும் பெலன் பெற்று அவனை அழித்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நியாயாதிபதிகளின் புத்தகம் 4