YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 20

20
எரேமியா மற்றும் பஸ்கூர்
1பஸ்கூர் என்ற பெயருள்ள ஒருவன் ஆசாரியனாக இருந்தான். கர்த்தருடைய ஆலயத்தில் முக்கியமான அதிகாரியாக இருந்தான். பஸ்கூர், இம்மேர் என்ற பெயருடையவனின் குமாரனாக இருந்தான். பஸ்கூர் எரேமியாவின் பிரசங்கத்தை ஆலயப் பிரகாரத்தில் வைத்துக் கேட்டான். 2எனவே அவன் எரேமியா தீர்க்கதரிசியை அடித்தான். ஆலயத்தில் பென்யமீனின் மேல் வாசலருகே அவனது கைகளிலும் கால்களிலும் பெரிய மரத்தடிகளால் விலங்கிட்டான். 3மறுநாள் பஸ்கூர் எரேமியாவை மரக் காவலில் இருந்து வெளியேற்றினான். பிறகு எரேமியா பஸ்கூரிடம் சொன்னான், “கர்த்தருக்கு உன் பெயர் பஸ்கூர் அல்ல. இப்போது கர்த்தர் உனக்கு, ஒவ்வொரு பக்கத்திலும் பயங்கரம் என்ற பெயரை வைத்துள்ளார். 4அதுதான் உனது பெயர். ஏனென்றால் கர்த்தர்: ‘உனக்கு உன்னையே பயங்கரமானவனாக விரைவில் செய்வேன்! நான் உன்னை உனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பயங்கரமாகச் செய்வேன். உனது நண்பர்களை சத்துருக்கள் வாளால் கொல்லுகிறதை நீ பார்ப்பாய். நான் யூதாவின் அனைத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவிடம் கொடுப்பேன். அவன் யூதாவின் ஜனங்களை பாபிலோன் நாட்டுக்குக் கொண்டுச் செல்வான். யூதாவின் ஜனங்களை அவனது படை வாள்களால் கொல்வார்கள். 5எருசலேம் ஜனங்கள் கடினமாக உழைத்து செல்வம் சேர்த்தனர். ஆனால், நான் அவற்றையெல்லாம் அவர்களது பகைவர்களுக்குக் கொடுப்பேன். எருசலேமில் ராஜாவுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால் நான் அந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பகைவர்களுக்குக் கொடுப்பேன். பகைவர்கள் அவற்றை எடுத்து பாபிலோன் நாட்டிற்குக் கொண்டுசெல்வார்கள். 6பஸ்கூர், நீயும் உன்னோடு வீட்டில் உள்ள அனைவரும் கொண்டுசெல்லப்படுவீர்கள். நீங்கள் பலவந்தமாகப் பாபிலோன் நாட்டில் வாழ வைக்கப்படுவீர்கள். நீ பாபிலோனில் மரிப்பாய். அந்த அயல்நாட்டில் நீ புதைக்கப்படுவாய். நீ உனது நண்பர்களுக்குப் பொய்யைப் பிரச்சாரம் செய்தாய். நீ இவை நிகழாது என்று சொன்னாய். ஆனால், உனது அனைத்து நண்பர்களும் மரித்து பாபிலோனில் புதைக்கப்படுவார்கள்.’”
எரேமியாவின் ஐந்தாவது முறையீடு
7கர்த்தாவே, நீர் என்னிடம் தந்திரம் செய்தீர்.
நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.
நீர் என்னைவிட பலமுள்ளவர்.
எனவே நீர் வென்றீர்.
நான் வேடிக்கைக்குரிய பொருளானேன்.
ஜனங்கள் என்னைப் பார்த்து சிரித்தனர்.
நாள் முழுவதும் என்னை வேடிக்கை செய்தனர்.
8ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது கதறுகிறேன்.
நான் எப்பொழுதும் வன்முறை மற்றும் பேரழிவு பற்றி சத்தமிடுகிறேன்.
நான் கர்த்தரிடமிருந்து பெற்ற வார்த்தையைப்பற்றி ஜனங்களிடம் சொல்கிறேன்.
ஆனால், ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்;
என்னை வேடிக்கை செய்கிறார்கள்.
9சில நேரங்களில் நான் எனக்குள் சொல்கிறேன்.
“நான் கர்த்தரைப்பற்றி மறப்பேன்.
நான் மேலும் கர்த்தருடைய நாமத்தால் பேசமாட்டேன்!”
ஆனால் நான் இதனைச் சொன்னால், பிறகு கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது,
எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது!
எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக்கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்!
இறுதியாக அதனை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் ஆகிறது.
10ஜனங்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதை நான் கேட்கிறேன்.
எங்கெங்கும் என்னைப் பயப்படுத்தும் செய்தியைக் கேட்கிறேன்.
என் நண்பர்களும் கூட, “அவனைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நான் தவறு செய்வேன் என்று காத்திருக்கிறார்கள்.
அவர்கள், “எங்களைப் பொய் சொல்லவிடுங்கள்.
அவன் தீயவற்றைச் செய்தான் என்று சொல்லவிடுங்கள்.
நாங்கள் எரேமியாவிடம் தந்திரம்செய்ய முடியும்.
பிறகு அவனைப் பெறுவோம்.
இறுதியாக நாங்கள் அவனைத் தொலைத்து ஒழிப்போம்.
பிறகு அவனை இறுகப்பிடிப்போம்.
அவன் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக்கொள்வோம்” என்றார்கள்.
11ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்;
கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார்.
எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள்.
அவர்கள் ஏமாந்துப் போவார்கள்.
அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள்.
ஜனங்கள் அந்த அவமானத்தை
என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
12சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நீர் நல்ல ஜனங்களை சோதிக்கிறீர்.
ஒருவனின் மனதை நீர் பார்க்கிறீர்.
அந்த ஜனங்களுக்கு எதிரான எனது வாதங்களை நான் உம்மிடம் சொன்னேன்.
எனவே அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நீர் அளிப்பதை என்னைப் பார்க்கப்பண்ணும்.
13கர்த்தரிடம் பாடுங்கள்! கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் ஏழைகளின் வாழ்வைக் காப்பாற்றுவார்!
அவர் அவர்களைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றுவார்!
எரேமியாவின் ஆறாவது முறையீடு
14நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக!
என் தாய் என்னைப் பெற்ற நாளை ஆசீர்வதிக்க வேண்டாம்.
15நான் பிறந்துவிட்ட செய்தியை என் தந்தையிடம் சொன்னவன் சபிக்கப்படட்டும்.
“உனக்கொரு குமாரன் பிறந்திருக்கிறான்,
அவன் ஒரு ஆண்பிள்ளை” என்று அவன் சொன்னான்.
அவன் அந்தச் செய்தியைச் சொல்லி
என் தந்தையை மிகவும் மகிழச் செய்தான்.
16கர்த்தர் அழித்துப்போட்ட பட்டணங்களைப் போன்று அந்த மனிதன் ஆவானாக.
கர்த்தர் அந்தப் பட்டணங்கள் மீது எவ்வித இரக்கமும் கெள்ளவில்லை.
காலையில் அம்மனிதன் போரின் ஒலிகளைக் கேட்கட்டும்.
மதிய வேளையில் அவன் போர்க்கதறல்களைக் கேட்கட்டும்.
17ஏனென்றால், நான் எனது தாயின் கருவில் இருக்கும்போது
அம்மனிதன் என்னைக் கொல்லவில்லை.
அந்த நேரத்தில் அவன் என்னைக் கொன்றிருந்தால்
என் தாயின் கர்ப்பப்பையே கல்லறை ஆகியிருக்கும்.
நான் பிறந்திருக்கவேமாட்டேன்.
18நான் ஏன் அந்த உடலைவிட்டு வந்தேன்?
நான் பார்த்திருப்பதெல்லாம் தொல்லையும் துன்பமும்தான்.
என் வாழ்க்கை அவமானத்தில் முடியும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 20