YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 39

39
எருசலேமின் வீழ்ச்சி
1எருசலேம் கைப்பற்றப்பட்டது இப்படித்தான்: யூதாவின் ராஜா சிதேக்கியாவின் ஒன்பதாவது ஆண்டின் பத்தாவது மாதத்தில் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகத் தனது முழுப்படையுடன் புறப்பட்டான். அந்நகரைத் தோற்கடிக்க முற்றுகையிட்டனர். 2சிதேக்கியாவின் பதினொன்றாவது ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் எருசலேமின் சுவர் உடைக்கப்பட்டது. 3பிறகு பாபிலோன் ராஜாவின் அதிகாரிகள் எருசலேம் நகருக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே வந்து மத்திய வாசலில் உட்கார்ந்துக்கொண்டனர். அந்த அதிகாரிகளின் பெயர்கள் இவை: நெர்கல் சரேத்சேர், சம்கார் நேபோ மாவட்டத்து ஆளுநர், ஒரு மிக உயர்ந்த அதிகாரி, நெபோசர்சேகிம், இன்னொரு உயர் அதிகாரி மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகளும் இருந்தனர்.
4யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் அதிகாரிகளைப் பார்த்தான். அவன் தனது படை வீரர்களோடு ஓடிப்போனான். அவர்கள் இரவில் எருசலேமை விட்டனர். அவர்கள் ராஜாவின் தோட்டத்தின் வழியாகச் சென்றனர். இரண்டு சுவர்களுக்கு இடையில் இருந்த வாசல் வழியாகச் சென்றனர். பிறகு அவர்கள் வனாந்தரத்தை நோக்கிப் போனார்கள். 5பாபிலோனியப் படை சிதேக்கியாவையும் அவனோடு சென்ற வீரர்களையும் துரத்தியது. எரிகோவின் சமவெளியில் அவர்கள் சிதேக்கியாவைப் பிடித்தனர். அவனை பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுபோனார்கள். நேபுகாத்நேச்சார் ஆமாத் தேசத்து ரிப்லா பட்டணத்தில் இருந்தான். அந்த இடத்தில் நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை என்ன செய்யலாம் என்று முடிவு செய்தான். 6அங்கே ரிப்லா பட்டணத்தில், பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரனை சிதேக்கியா பார்க்கும்போதே கொன்றான். நேபுகாத்நேச்சார் யூதாவின் அரச அதிகாரிகளை சிதேக்கியா பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொன்றான். 7பிறகு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களை குருடாக்கினான். அவனுக்கு வெண்கலச் சங்கிலியைப் போட்டு பாபிலோனுக்குக் கொண்டுப்போனான்.
8பாபிலோன் படையானது ராஜாவின் வீட்டையும் எருசலேம் ஜனங்களின் வீட்டையும் நெருப்பிட்டனர். அவர்கள் எருசலேமின் சுவர்களை உடைத்தனர். 9நேபுசராதான் பாபிலோனிய ராஜாவின் சிறப்புக் காவலர்களின் தளபதியாக இருந்தான். எருசலேமில் மீதியிருந்த ஜனங்களைப் பிடித்துக்கொண்டுபோய் சிறையிலிட்டான். அவர்களைப் பாபிலோனுக்குக் கொண்டுப்போனான். ஏற்கனவே, அவனிடம் சரணடைந்த எருசலேம் ஜனங்களையும் கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டுப்போனான். 10ஆனால் சிறப்புக் காவலர்களின் தளபதியான நேபுசராதான் யூதாவின் சில ஏழை ஜனங்களை விட்டுவிட்டுச் சென்றான். அந்த ஜனங்கள் சொந்தமாக எதுவும் இல்லாதவர்கள். எனவே, அந்த நாளில் நேபுசராதான் அவ்வேழை ஜனங்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்தான்.
11ஆனால், நேபுகாத்நேச்சார் நேபுசராதானுக்கு எரேமியாவைப்பற்றி சில கட்டளைகளைக் கொடுத்தான். நேபுசராதான் நேபுகாத்நேச்சாரின் சிறப்புக் காவலர்களின் தலைவன். இவைதான் கட்டளைகள்: 12“எரேமியாவைக் கண்டுபிடி. அவனை கவனித்துக் கொள். அவனைத் தாக்காதே. அவன் என்ன கேட்கிறானோ அவற்றைக் கொடு.”
13எனவே ராஜாவின் சிறப்புக் காவலர் தளபதியான நேபுசராதான், பாபிலோனின் தலைமைப் படை அதிகாரியான நேபுசராதானையும் ஒரு உயர் அதிகாரியான நெர்கல்சரேத்சேரையும் மற்றும் மற்றப் படை அதிகாரிகளையும் எரேமியாவைத் தேட அனுப்பினான். 14அவர்கள் எரேமியாவைக் கண்டனர். ஆலய முற்றத்திலிருந்து யூதா ராஜாவின் காவலரிடமிருந்து வெளியே எடுத்தனர். பாபிலோனது படையின் அவ்வதிகாரிகள் எரேமியாவை கெதலியாவினிடம் ஒப்படைத்தனர். கெதலியா அகிக்காமின் குமாரன். அகிக்காம் சாப்பானுடைய குமாரன். கெதலியா எரேமியாவை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுப்போகும் கட்டளைகளைப் பெற்றிருந்தான். எனவே, எரேமியா வீட்டிற்குக் கொண்டுப்போகப்பட்டான். அவன் தன் சொந்த மனிதர்களோடு தங்கினான்.
எபெத்மெலேக்குவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி
15எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவலர் பாதுகாப்பில் இருந்தபோது கர்த்தரிடமிருந்து வார்த்தை அவனுக்கு வந்தது. 16“எரேமியா, போய் எத்தியோப்பியனான எபெத்மெலேக்குவிடம் இதைச் சொல்! ‘இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார். மிக விரைவில் எருசலேம் நகரைப்பற்றி நான் சொன்ன செய்திகள் உண்மையாகும்படிச் செய்வேன். எனது செய்தி பேரழிவின் மூலமே உண்மையாகுமே தவிர நல்லவற்றின் மூலம் அன்று. நீ உனது சொந்தக் கண்களால் அது உண்மையாவதை பார்ப்பாய். 17ஆனால், அந்நாளில் எபெத்மெலேக்கே நான் உன்னைக் காப்பாற்றுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘நீ பயப்படுகிற ஜனங்களிடம் கொடுக்கப்படமாட்டாய். 18நான் உன்னைக் காப்பாற்றுவேன். எபெத்மலேக்கே, நீ வாளால் மரிக்கமாட்டாய். ஆனால் நீ தப்பித்து வாழ்வாய். இது நிகழும். ஏனென்றால் நீ என்னிடம் நம்பிக்கை வைத்தாய்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 39