யோவான் எழுதிய சுவிசேஷம் 1:1-18
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:1-18 TAERV
உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை. யோவான் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். அவன் அந்த ஒளியைப் (கிறிஸ்து) பற்றி மக்களிடம் சொல்வதற்காக வந்தான். எனவே மக்கள் அனைவரும் யோவான் மூலமாக அந்த ஒளியைப்பற்றிக் கேள்விப்படவும் நம்பிக்கை வைக்கவும் முடிந்தது. யோவான் ஒளியல்ல. ஆனால் அவன் அந்த ஒளியைப்பற்றி மக்களிடம் சொல்லவே வந்தவன். அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது. அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர். வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே குமாரனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று. அவரைப்பற்றி யோவான் மக்களிடம், “நான் சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்தான். ‘எனக்குப் பின்னால் வருகிறவர் என்னிலும் மேலானவர். இவர் எனக்கு முன்னரே இருப்பவர்’” என்று சாட்சி சொன்னான். அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். மோசே மூலம் சட்டங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே கிருபையும், உண்மையும் வந்தன. எந்த மனிதனும் ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் இயேசுவாகிய ஒரே குமாரனே தேவன். அவர் பிதாவுக்கு (தேவனுக்கு) மிகவும் நெருக்கமானவர். அத்துடன் குமாரனே தேவனின் தன்மையை நமக்கு வெளிக்காட்டினார்.