YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 1

1
நல்ல மனிதனாகிய யோபு
1ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்னும் பெயருள்ள மனிதன் வாழ்ந்து வந்தான். யோபு நல்லவனும் உண்மையுள்ள மனிதனுமாக இருந்தான். தேவனுக்கு பயந்து தீயக் காரியங்களைச்செய்ய மறுத்தான். 2யோபுவுக்கு ஏழு குமாரர்களும் மூன்று குமாரத்திகளும் இருந்தனர். 3யோபுவுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 1,000 காளைகளும், 500 பெண் கழுதைகளும் இருந்தன. அவனிடம் வேலையாட்கள் பலர் இருந்தனர். கிழக்குப் பகுதியில் யோபுவே பெரிய செல்வந்தனாக இருந்தான்.
4யோபுவின் குமாரர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தங்கள் வீடுகளில் விருந்து வைத்து, அவர்களின் சகோதரிகளை அழைப்பது வழக்கம். 5அவனது பிள்ளைகளின் விருந்து முடிந்தப்பின் யோபு அதிகாலையில் எழுந்தான். ஒவ்வொரு பிள்ளைக்காகவும் அவன் தகனபலியை அளித்தான். அவன், “என் பிள்ளைகள் கவலையீனமாக இருந்து, விருந்தின்போது தேவனுக்கெதிராக தங்கள் இருதயங்களில் தூஷிப்பதினால் பாவம் செய்திருக்கக் கூடும்” என்று எண்ணினான். அவனது பிள்ளைகள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறும்படியாக யோபு எப்போதும் இவ்வாறு செய்தான்.
6தேவதூதர்கள்#1:6 தேவதூதர்கள் “தேவகுமாரர்கள்” எனப் பொருள்படும். கர்த்தரைச் சந்திக்கும் நாள் வந்தது. சாத்தானும் தேவதூதர்களோடு வந்தான்.
7கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தரை நோக்கி, “நான் பூமியைச் சுற்றிப் பார்த்து வந்தேன்” என்றான்.
8அப்போது கர்த்தர் சாத்தானிடம், “நீ எனது தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. யோபு உத்தமனும் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றை விட்டு விலகியிருக்கிறான்” என்றார்.
9சாத்தான், “ஆம்! ஆனால் யோபு தேவனுக்குப் பயப்படுவதற்கு தக்க காரணங்கள் உள்ளன! 10நீர் எப்போதும் அவனையும், அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்தீர். ஆம் நீர் அவனை ஆசீர்வதித்திருக்கிறீர். நாடு முழுவதும் அவனது மந்தைகளும் விலங்குகளும் பெருகி, அவன் மிகுந்த செல்வந்தனாக இருக்கிறான். 11ஆனால் அவனுக்கிருப்பவை அனைத்தையும் நீர் உமது கையை நீட்டி அழித்துவிட்டால் உம் முகத்திற்கு நேராக உம்மை அவன் சபிப்பான் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான்.
12கர்த்தர் சாத்தானிடம், “அப்படியே ஆகட்டும். யோபுக்குச் சொந்தமான பொருள்களின் மேல் உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய். ஆனால் அவன் உடம்மைத் துன்புறுத்தாதே” என்றார். பின்பு சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுச் சென்றுவிட்டான்.
யோபு எல்லாவற்றையும் இழக்கிறான்
13ஒருநாள், மூத்த சகோதரனின் வீட்டில் யோபுவின் குமாரர்களும், குமாரத்திகளும் உண்டு, திராட்சை ரசம் அருந்திக்கொண்டிருந்தார்கள். 14அப்போது ஒருவன் யோபுவிடம் வந்து, “காளைகள் உழுதுக்கொண்டிருந்தன, கழுதைகள் அருகே புல் மேய்ந்துக்கொண்டிருந்தன. 15ஆனால் சபேயர் எங்களைத் தாக்கிவிட்டு உமது மிருகங்களை கவர்ந்துக்கொண்டார்கள்! சபேயர் என்னைத் தவிர எல்லா வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். உம்மிடம் சொல்லும்படியாக தப்பிவர முடிந்தவன் நான் மட்டுமே!” எனச் செய்தியைக் கூறினான்.
16அவன் இதனைக் கூறிக்கொண்டிருக்கும்போது மற்றொருவன் யோபுவிடம் வந்தான். இரண்டாம் ஆள், “வானிலிருந்து மின்னல் மின்னி உமது ஆடுகளையும் வேலையாட்களையும் எரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பினேன். உமக்கு அந்தச் செய்தியை கூறும்படியாக வந்தேன்!” எனக் கூறினான்.
17அந்த ஆள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொருவன் வந்தான். இந்த மூன்றாவது ஆள், “கல்தேயர் மூன்று குழுக்களை அனுப்பி, எங்களைத் தாக்கி, ஒட்டகங்களைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்! அவர்கள் வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். நான் மட்டுமே தப்பினேன் இந்தச் செய்தியை உமக்குச் சொல்லும்படியாக வந்தேன்!” என்றுச் சொன்னான்.
18மூன்றாம் ஆள் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றும் ஒருவன் வந்தான். நான்காவது ஆள், “உமது குமாரர்களும் குமாரத்திகளும் மூத்த சகோதரனின் வீட்டில் உண்டு, திராட்சைரசம் பருகிக்கொண்டிருந்தார்கள். 19அப்போது ஒரு பலத்தக் காற்று பாலைவனத்திலிருந்து வீசி, வீட்டை அழித்தது, உமது குமாரர்களின் மீதும், குமாரத்திகளின் மீதும் வீடு வீழ்ந்ததால், அவர்கள் மரித்துப்போனார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பித்தேன். எனவே உம்மிடம் இந்த செய்தியை தெரிவிக்க வந்தேன்!” என்றான்.
20யோபு இதைக் கேட்டபோது, அவனது துக்கத்தை வெளிப்படுத்தும்பொருட்டு ஆடைகளைக் கிழித்துக்கொண்டான், தலையை மழித்துவிட்டான். பின்பு யோபு தரையில் விழுந்து, தேவனை ஆராதித்தான்.
21“நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை.
நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன்.
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார்.
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!” என்றான்.
22இவையெல்லாம் நிகழ்ந்தாலும், யோபு பாவம் செய்யவில்லை. தேவன் தவறு செய்திருந்தார் என்று யோபு குறை சொல்லவுமில்லை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யோபுடைய சரித்திரம் 1