YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 11

11
சோப்பார் யோபுவிடம் பேசுகிறான்
1அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான்.
2“இவ்வார்த்தைப் பெருக்குக்குப் பதில் தரப்பட வேண்டும்!
இத்தனை பேச்சுக்களும் யோபுவுக்கு நீதி வழங்குகின்றனவா? இல்லை?
3யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா?
நீ நகைத்து பேசும்போது உன்னை எச்சரிக்க ஒருவருமில்லை என நினைக்கிறாயா?
4யோபுவே, நீ தேவனிடம், ‘என் விவாதங்கள் சரியானவை,
நான் தூயவன் என நீர் காணமுடியும்’ என்கிறாய்.
5யோபுவே, தேவன் உனக்குப் பதில் சொல்லி,
நீ கருதுவது தவறென உனக்குச் சொல்வார் என விரும்புகிறேன்.
6தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும்.
ஏனெனில் ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர் உனக்குச் சொல்வார்.
தேவன் உன்னைத் தண்டிக்க வேண்டிய அளவிற்கு அவர் தண்டிப்பதில்லை.
7“யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா?
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அறிவை நீ புரிந்துகொள்ள முடியுமோ?
8அது பரலோகத்திற்கும் உயர்ந்தது.
மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது.
அதுபற்றி நீர் அறியக்கூடுமோ?
9தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது.
பூமியைக் காட்டிலும் கடல்களைக் காட்டிலும் பெரியது.
10“தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால்,
ஒருவனும் அவரைத் தடுக்க முடியாது.
11உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார்.
தேவன் தீமையைப் பார்க்கும்போது அதை நினைவுக்கூர்கிறார்.
12ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது.
மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான்.
13ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும்.
உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.
14உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும்.
உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே.
15அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும்.
நீ தைரியமாக நின்று, அச்சமில்லாது இருக்க முடியும்.
16அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும்.
வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும்.
17நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்.
வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.
18அப்போது நீ பாதுகாவலை உணர்வாய்.
ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு.
தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார்.
19நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள்.
பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள்.
20தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது.
அவர்களின் நம்பிக்கை அவர்களை மரணத்திற்கு நேராக மட்டுமே வழிநடத்தும்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in