YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 12

12
யோபு சோப்பாருக்குப் பதிலளிக்கிறான்
1பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக,
2“நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன்.
நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும்.
3நானும் உன்னைப் போன்றே புத்திசாலி.
உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல.
இப்படிப்பட்டவைகளை அறியாதவர்கள் யார்?
4“என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள், ‘அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான்’ என்று சொல்கிறார்கள்.
உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான்.
5தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள்.
6ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை.
தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள்.
அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன்.
7“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும்.
வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும்.
8அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும்.
அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும்.
9கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம்.
10வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும்
தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
11நாவு உணவைச் சுவைப்பதுப்போல
காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும்.
12முதிர்ந்தோர் ஞானவான்கள்,
புரிந்து கொள்ளும் ஆற்றலையுடையவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
13ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை.
ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை.
14தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது.
தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது.
15தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும்.
தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும்.
16தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார்.
ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள்.
17தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார்,
அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார்.
18ராஜாக்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும்,
ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார்.
19தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார்.
அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார்.
20நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார்,
முதிர்ந்தோரின் ஞானத்தை அவர் அகற்றிவிடுகிறார்.
21தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார்,
தலைவர்களின் ஆற்றலை அவர் நீக்கிவிடுகிறார்.
22இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார்,
மரணம் போன்ற இருளுள்ள இடங்களிலும் அவர் ஒளியைப் பாய்ச்சுகிறார்.
23தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார்.
பின்பு அவர் அவற்றை அழிக்கிறார்.
அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார்,
பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார்.
24தேவன் தலைவர்களை மூடராக்குகிறார்,
அவர்கள் குறிக்கோளின்றி பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார்.
25அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள்.
குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in