YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 19

19
யோபு பதில் கூறுகிறான்
1அப்போது யோபு பதிலாக:
2“எத்தனை காலம் நீங்கள் என்னைத் துன்புறுத்தி,
உங்கள் வார்த்தைகளால் என்னை உடைப்பீர்கள்?
3நீங்கள் இப்போது என்னைப் பத்துமுறை இழிவுப்படுத்தியிருக்கிறீர்கள்.
நீங்கள் என்னைத் தாக்கும்போது வெட்கமடையவில்லை.
4நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும்.
அது உங்களைத் துன்புறுத்தாது.
5என்னைக் காட்டிலும் உங்களைச் சிறந்தவர்களாகக் காட்ட நீங்கள் விரும்புகிறீர்கள்.
என் தொல்லைகள் என் சொந்தத் தவறுகளால் நேர்ந்தவை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
6ஆனால் தேவனே எனக்குத் தவறிழைத்தார்.
என்னைப் பிடிப்பதற்கு அவர் ஒரு கண்ணியை வைத்தார்.
7‘அவர் என்னைத் துன்புறுத்தினார்!’ என நான் கத்துகிறேன். ஆனால் எனக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை.
நான் உரக்க உதவிக்காகக் கூப்பிட்டாலும், நியாயத்திற்காக வேண்டும் என் குரலை ஒருவரும் கேட்கவில்லை.
8தேவன் என் வழியை அடைத்ததால் நான் தாண்டிச்செல்ல முடியவில்லை.
அவர் என் பாதையை இருளால் மறைத்திருக்கிறார்.
9தேவன் என் பெருமையை எடுத்துப்போட்டார்.
அவர் என் தலையின் கிரீடத்தை (முடியை) எடுத்தார்.
10தேவன் நான் அழியும்வரைக்கும் என்னை எல்லா பக்கங்களிலுமிருந்து தாக்குகிறார்.
வேரோடு வீழ்ந்த மரத்தைப்போன்று அவர் என் நம்பிக்கையை அகற்றினார்.
11தேவனுடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது.
அவர் என்னைத் தமது பகைவன் என்று அழைக்கிறார்.
12தேவன் தமது படையை என்னைத் தாக்குவதற்கு அனுப்புகிறார்.
என்னைத் தாக்குவதற்கு என்னைச் சுற்றிலும் கோபுரங்களை எழுப்புகிறார்கள்.
என் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
13“என் சகோதரர்கள் என்னை வெறுக்கும்படி தேவன் செய்தார்.
என் நண்பர்களுக்கு நான் ஒரு அந்நியனானேன்.
14என் உறவினர்கள் என்னை விட்டு சென்றார்கள்.
என் நண்பர்கள் என்னை மறந்துப்போனார்கள்.
15என்னை ஒரு அந்நியனைப்போலவும் வெளிநாட்டினனைப்போலவும்
என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் பணிவிடைப் பெண்களும் பார்க்கிறார்கள்.
16நான் என் பணியாளைக் கூப்பிடும்போது, அவன் பதில் தருவதில்லை.
நான் உதவிக்காகக் கெஞ்சும்போதும் என் பணியாள் பதில் தரமாட்டான்.
17என் மனைவி என் மூச்சின் வாசனையை வெறுக்கிறாள்.
என் சொந்த சகோதரர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
18சிறு குழந்தைகளும் என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
நான் அவர்கள் அருகே வரும்போது அவர்கள் கெட்டவற்றைச் சொல்கிறார்கள்.
19என் நெருங்கிய நண்பர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
நான் நேசிக்கும் ஜனங்கள் கூட எனக்கெதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
20“நான் மிகவும் மெலிந்துபோனேன்.
என் தோல் எலும்போடு ஒட்டித் தொங்குகிறது.
எனக்குச் சற்றே உயிர் மீந்திருக்கிறது.
21“என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்!
எனக்கு இரங்குங்கள்!
ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
22தேவன் செய்வதைப் போன்று நீங்கள் ஏன் என்னைத் தண்டிக்கிறீர்கள்?
என்னைத் துன்புறுத்துவதால் நீங்கள் தளர்ந்துப் போகவில்லையா?
23“நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா?
என விரும்புகிறேன்.
என் வார்த்தைகள் ஒரு சுருளில் எழுதப்படாதா?
என விரும்புகிறேன்.
24நான் சொல்பவை என்றென்றும் நிலைக்கும்படி
ஈயத்தின்மேல் ஒரு இரும்புக் கருவியால் பொறிக்கப்படவோ அல்லது பாறையில் செதுக்கப்படவோ வேண்டுமென விரும்புகிறேன்.
25என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்!
முடிவில் அவர் பூமியின்மேல் எழுந்து நின்று என்னைக் காப்பாற்றுவார்!
26நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும்,
பின்பு நான் என் தேவனைக் காண்பேன் என அறிவேன்!
27என் சொந்த கண்களால் நான் தேவனைக் காண்பேன்!
நானே, வேறெவருமல்ல, தேவனைக் காண்பேன்!
நான் எத்தனை உணர்ச்சிவசப்பட்டவனாக உணருகிறேன் என்பதை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது.
28“நீங்கள், ‘நாம் யோபுவைத் துன்புறுத்துவோம்.
அவனைக் குற்றம்சாட்ட ஒரு காரணத்தைக் காண்போம்’ என்று கூறலாம்.
29ஆனால் நீங்களே அஞ்சுவீர்கள்.
ஏனெனில், தேவன் குற்றவாளிகளைத் தண்டிக்கிறார்.
தேவன் வாளைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிப்பார்.
அப்போது நியாந்தீர்க்கும் காலம் ஒன்று உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யோபுடைய சரித்திரம் 19