YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 4

4
எலிப்பாஸ் பேசுகிறான்
1-2தேமானிலுள்ள எலிப்பாஸ்,
“யாராவது உன்னுடன் பேச முயன்றால் உன்னைக் கலக்கமுறச் செய்யுமா?
ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ள யாரால் கூடும்?
3யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய்.
நீ பெலவீனமான கரங்களுக்கு பெலனைத் தந்தாய்.
4வீழ்பவர்களுக்கு உன் சொற்கள் உதவின.
தாமாக நிற்க முடியாதவர்களுக்கு நீ பெலனளித்தாய்.
5ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன,
நீ துணிவிழக்கிறாய்.
தொல்லைகள் உன்னைத் தாக்குகின்றன,
நீ கலங்கிப்போகிறாய்!
6நீ தேவனை கனம்பண்ணுகிறாய்.
அவரை நம்புகிறாய்.
நீ நல்லவன்.
எனவே, அதுவே உன் நம்பிக்கையாயிருக்க வேண்டுமல்லவா?
7யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்:
களங்கமற்றவன் எவனும் அழிக்கப்பட்டதில்லை.
8நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன்.
அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடைச் செய்வதைக் கண்டிருக்கின்றேன்!
9தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது.
தேவனுடைய நாசியின் காற்று அவர்களை அழிக்கிறது.
10தீயோர் கெர்ச்சித்துச் சிங்கங்களைப்போல் முழங்குகிறார்கள்.
தீயோர் அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், தேவன் அவர்களின் பற்களை நொறுக்குகிறார்.
11ஆம், அத்தீயோர், கொல்வதற்கு மிருகங்களைக் காணாத சிங்கங்களைப் போன்றிருக்கிறார்கள்.
அவர்கள் இறக்கிறார்கள், அவர்கள் ஜனங்கள் அலைந்து திரிகிறார்கள்.
12“இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது.
என் காதுகள் அதனை மெல்லிய குரலில் கேட்டன.
13இரவின் கெட்ட கனவாய்,
அது என் தூக்கத்தைக் கெடுத்தது.
14நான் பயந்து நடுங்கினேன்.
என் எலும்புகள் எல்லாம் நடுங்கின.
15ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது.
என் உடலின் மயிர்கள் குத்திட்டு நின்றன.
16ஆவி அசையாது நின்றது, என்னால் அது என்னவென்று பார்க்க முடியவில்லை.
என் கண்களின் முன்னே ஒரு உருவம் நின்றது, அப்போது அமைதியாயிருந்தது.
அப்போது மிக அமைதியான ஒரு குரலைக் கேட்டேன்:
17‘மனிதன் தேவனைவிட நீதிமானாக இருக்க முடியுமா?
தன்னை உண்டாக்கினவரைக் காட்டிலும் மனிதன் தூய்மையாக இருக்க முடியுமா?
18பாரும், தேவன் அவரது பரலோகத்தின் பணியாட்களிடம்கூட நம்பிக்கை வைப்பதில்லை.
தேவன் தனது தேவதூதர்களிடமும் குற்றங்களைக் காண்கிறார்.
19எனவே நிச்சயமாக ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள்!
அவர்கள் களிமண் வீடுகளில்#4:19 களிமண் வீடு இதற்கு மனித சரீரம் எனப் பொருள்படும். வசிக்கிறார்கள்.
இக்களிமண் வீடுகளின் அஸ்திபாரங்கள் புழுதியேயாகும்.
பொட்டுப்பூச்சியைக் காட்டிலும் எளிதாக அவர்கள் நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள்.
20ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை.
அவர்கள் மரித்து என்றென்றும் இல்லாதபடி மறைந்துப்போகிறார்கள்,
21அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன.
அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள்.’

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யோபுடைய சரித்திரம் 4