YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 1

1
இஸ்ரவேலரை வழிநடத்துவதற்கு கர்த்தர் யோசுவாவைத் தெரிந்தெடுத்தல்
1மோசே கர்த்தருடைய ஊழியனாக இருந்தான். நூனின் குமாரனாகிய யோசுவா மோசேயின் உதவியாளனாக இருந்தான். மோசே மரித்த பிறகு, கர்த்தர் யோசுவாவிடம் பேசினார். கர்த்தர், 2எனது ஊழியனாகிய மோசே மரித்துவிட்டான். இப்போது நீயும் இந்த ஜனங்களும் யோர்தான் நதியைத் தாண்டி, நான் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குள் நீங்கள் செல்லவேண்டும். 3நான் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக மோசேக்கு வாக்களித்திருந்தேன். எனவே நீங்கள் காலடி எடுத்து வைக்கும் இடத்தையெல்லாம் உங்களுக்கே கொடுப்பேன். 4பாலைவனத்திலிருந்தும், லீபனோனிலிருந்தும் பெரிய நதியாகிய ஐபிராத்து வரைக்குமான ஏத்திய ஜனங்களுக்குரிய, தேசம் உங்களுக்குரியதாகும். மற்றும் உங்கள் எல்லைக்குள் இங்கிருந்து (சூரியன் மறைகிற இடமாகிய) மேற்கில் மத்தியதரைக் கடல் வரைக்குமுள்ள தேசம் இருக்கும். 5நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடும் இருப்பேன். உன் ஆயுள் உள்ளமட்டும் உன்னை யாரும் எதிர்க்கவோ தடுக்கவோ முடியாது. நான், உன்னைக் கைவிடமாட்டேன். ஒருபோதும் உன்னைவிட்டு விலகமாட்டேன்.
6“யோசுவா, நீ வல்லமையும், தைரியமும் உள்ளவனாக இருக்கவேண்டும்! இந்த ஜனங்கள் தமக்குரிய தேசத்தைப் பெறும்படி நீ அவர்களை வழிநடத்த வேண்டும். இந்நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக நான் அவர்கள் முன்னோர்களுக்கு வாக்களித்தேன். 7ஆனால் நீயும் மற்றொரு காரியத்தில் உறுதியோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். எனது ஊழியனாகிய மோசே உனக்குக் கொடுத்த கட்டளைகளுக்குக் கண்டிப்பாக நீ கீழ்ப்படியவேண்டும். நீ அவற்றைச் சரியாகப் பின்பற்றினால், நீ செய்கிற எல்லாவற்றிலும் வெற்றி அடைவாய். 8சட்ட புத்தகத்தில் எழுதியிருப்பவற்றை எப்போதும் நினைவுகூர்ந்து, இரவும் பகலும் அதைப்படி. அப்போது அப்புத்தகத்தில் எழுதியிருப்பவைகளுக்கு நீ கீழ்ப்படிய முடியும். இதைச் செய்தால், நீ செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் ஞானமுள்ளவனாய் வெற்றி காண்பாய். 9நீ உறுதியும், தைரியமும் உடையவனாய் இருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதை நினைவில் வைத்துக்கொள். எனவே பயப்படாதே, நீ போகுமிடங்களில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருப்பார்” என்றார்.
யோசுவா பதவி ஏற்குதல்
10யோசுவா, ஜனங்களின் தலைவர்களுக்கு ஆணைகளைக் கொடுத்தான். 11அவன், “முகாம்களுக்குச் சென்று ஜனங்களிடம் தயாராகும்படி கூறுங்கள், மேலும் ஜனங்களிடம் ‘கொஞ்சம் உணவைத் தயாரியுங்கள். இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் நாம் யோர்தான் நதியைக் கடக்கப் போகிறோம். தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குப் போய் அதைச் சுதந்தரிப்போம்’ எனச் சொல்லுங்கள்” என்றும் சொன்னான்.
12பின் ரூபன், காத், ஆகிய கோத்திரத்தாரிடமும், மனாசே கோத்திரத்தின் பாதிப்பேர்களிடமும் யோசுவா பேசினான். 13அவன், “கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கூறியதை நினைவுகூருங்கள். தேவனாகிய கர்த்தர் நீங்கள் தங்குவதற்காக ஓரிடத்தை உங்களுக்குக் கொடுப்பார் என்று அவன் கூறினான். கர்த்தர் அத்தேசத்தை உங்களுக்குத் தருவார்! 14உண்மையில், யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை கர்த்தர் ஏற்கெனவே கொடுத்துவிட்டார். உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும், உங்கள் மிருகங்களோடு உங்களுக்குச் சொந்தமான இத்தேசத்தில் தங்கியிருக்கலாம். ஆனால் போர் வீரர்கள் உங்கள் சகோதரரோடு யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நீங்கள் போருக்குத் தயாராகி உங்கள் சகோதரர் அத்தேசத்தைக் கைப்பற்ற உதவவேண்டும். 15கர்த்தர் நீங்கள் தங்கியிருப்பதற்கு ஓர் இடத்தைக் கொடுத்தார். அதையே உங்கள் சகோதரருக்கும் செய்வார். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குத் தருகின்ற தேசத்தைக் கைப்பற்றுவதற்கு நீங்கள் உதவவேண்டும். பிறகு நீங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள உங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பி வரலாம். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்கு அத்தேசத்தைப் பிரித்துக் கொடுத்தான்” என்றான்.
16அப்போது ஜனங்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குக் கட்டளையிடுகின்ற எல்லாக் காரியங்களையும் செய்வோம்! நீர் சொல்கின்ற இடங்களுக்கெல்லாம் போவோம்! 17நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தபடியே, நீர் கூறுகின்றவற்றிற்கும் கீழ்ப்படிவோம். நாங்கள் கர்த்தரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறோம். மோசேயோடு இருந்தபடியே, உங்களோடும் இருக்க வேண்டுமென தேவனாகிய கர்த்தரிடம் கேட்கிறோம். 18மேலும், உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய யாராவது மறுத்தால், அல்லது உமக்கு எதிராக யாராவது எழும்பினால், அப்போது அவன் கொல்லப்படுவான். உறுதியோடும் தைரியத்தோடும் இரும்!” என்றனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யோசுவாவின் புத்தகம் 1