YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 11

11
வடக்குப் பகுதியின் பட்டணங்களைத் தோற்கடித்தல்
1ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன், நடந்த எல்லா காரியங்களையும் குறித்துக் கேள்விப்பட்டான். எனவே பல ராஜாக்களின் சேனைகளையும் திரட்ட முடிவு செய்தான். மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபாவின் ராஜாவிடத்திற்கும், 2வடக்கிலும், மலைநாடுகளிலும், பாலைவனங்களிலும் உள்ள மற்ற ராஜாக்களுக்கும் செய்தியனுப்பினான். கின்னரோத், நெகேவ், மேற்கிலுள்ள மலையடிவாரங்களிலுள்ள ராஜாக்களுக்கும் யாபீன் செய்தியனுப்பினான். மேற்கிலுள்ள நாபோத், தோரின் ராஜாவுக்கும் யாபீன் செய்தி அனுப்பினான். 3கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கானானியரின் ராஜாக்களுக்கும் யாபீன் செய்தியைத் தெரிவித்தான். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், எர்மோன் மலைக்குக் கீழே மிஸ்பாவிற்கு அருகிலுள்ள ஏவியர் ஆகியோருக்கும் செய்தி கூறினான். 4எனவே இந்த ராஜாக்களின் படைகள் அனைத்தும் ஒன்று கூடி போர் வீரர்களும், குதிரைகளும், இரதங்களும் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தபடியால், அது மிகவும் பெரிய படையாக இருந்தது. கடற்கரையின் மணலைப் போன்று ஆட்கள் ஏராளமாக இருந்தனர்.
5மோரோம் என்கிற சிறு நதிக்கருகே எல்லா ராஜாக்களும் சந்தித்தனர். அவர்கள் தங்கள் படைகளை எல்லாம் ஒன்றிணைத்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போர் செய்யத் திட்டமிட்டனர்.
6அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அப்படையைக் கண்டு அஞ்சாதே. நீ அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். நாளை இதே வேளையில், நீ அவர்களையெல்லாம் கொன்றிருப்பாய். நீங்கள் குதிரையின் கால்களை வெட்டி, அவர்களின் இரதங்களை எரித்துப் போடுவீர்கள்” என்று சொன்னார்.
7யோசுவாவும் அவனது படையினரும் பகைவரை வியப்படையச் செய்தனர். மேரோம் நதிக்கரையில் அவர்கள் பகைவர்களைத் தாக்கினார்கள். 8பிறகு இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். இஸ்ரவேல் படையினர் அவர்களைத் தோற்கடித்து பெரிய சீதோன், மிஸ்ர போத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பா பள்ளத்தாக்கு வரைக்கும் துரத்தினார்கள். பகைவரில் ஒருவரும் உயிரோடிராதபடிக்கு இஸ்ரவேல் படையினர் போர் செய்தார்கள். 9கர்த்தர் செய்யும்படியாகக் கூறியவற்றையெல்லாம் அவன் செய்தான். யோசுவா அவர்களது குதிரைகளின் கால்களை வெட்டி, அவர்களது தேர்களை எரித்தான்.
10பின் யோசுவா திரும்பிச் சென்று ஆத்சோரைக் கைப்பற்றினான். ஆத்சோரின் ராஜாவைக் கொன்றான். (இஸ்ரேவலுக்கு எதிராகப் போர் செய்த எல்லா அரசுகளுக்கும் ஆத்சோர் தலைமை தாங்கி இருந்தான்.) 11இஸ்ரவேல் படை நகரிலிருந்த ஒவ்வொருவரையும் கொன்றழித்தது. எல்லா ஜனங்களையும் அவர்கள் அழித்துப்போட்டனர். எதுவும் உயிரோடு விடப்பட்டிருக்கவில்லை. பிறகு அவர்கள் அந்த நகரை எரித்தனர்.
12யோசுவா எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். அவற்றின் ராஜாக்களையும், நகரங்களில் இருந்த எல்லாவற்றையும் அழித்தான். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, கட்டளையிட்டபடியே யோசுவா செய்தான். 13ஆனால் இஸ்ரவேல் படை மலைகளின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களை எரிக்கவில்லை. மலையின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களில் அவர்கள் எரித்தழித்த ஒரே நகரம் ஆத்சோர் ஆகும். யோசுவா இந்நகரத்தை எரித்தான். 14நகரங்களில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்காக வைத்துக்கொண்டனர். நகரத்திலிருந்த மிருகங்களையும் அவர்களுக்காக எடுத்துக்கொண்டனர். ஆனால் மனிதர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டனர். அவர்கள் ஒருவரையும் உயிரோடிருக்க அனுமதிக்கவில்லை. 15வெகு நாட்களுக்கு முன்னரே கர்த்தர் அவரது ஊழியனாகிய மோசேக்கு இவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டார். பின் மோசே யோசுவாவிற்கு இவ்வாறு செய்யக் கட்டளை தந்தான். ஆகையால் யோசுவா தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டவற்றையெல்லாம் யோசுவா செய்தான்.
16அந்நாடு முழுவதிலுமுள்ள ஜனங்கள் எல்லாரையும் யோசுவா தோற்கடித்தான். மலை நாடுகள், பாலைவனங்கள், கோசேனின் பகுதிகள், மேற்கு மலையடிவாரத்தின் பகுதிகள், யோர்தான் பள்ளத்தாக்கு, இஸ்ரவேலின் பர்வதங்கள், அருகேயுள்ள மலைகள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தினான். 17சேயீருக்கு அருகிலுள்ள ஆலாக் மலையிலிருந்து லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால் காத்வரைக்குமுள்ள இடங்களிலும் யோசுவாவுக்கு அதிகாரம் செலுத்த முடிந்தது. அங்குள்ள எல்லா ராஜாக்களையும் பிடித்து அவர்களைக் கொன்றான். 18நீண்டகாலம் அந்த ராஜாக்களோடு யோசுவா போர் செய்தான். 19அப்பகுதியில் இருந்த ஒரே ஒரு நகரம் மட்டுமே இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. கிபியோனிலுள்ள ஏவியரின் நகரமே அது. மற்ற நகரங்களெல்லாம் போரில் தோல்வி கண்டன. 20அந்த ஜனங்கள் தங்களை வலியவர்களாக கருதும்படி கர்த்தர் செய்தார். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலரோடு போர் செய்யக் கருதக்கூடும், இரக்கமின்றி அந்த ஜனங்களை அழிப்பதற்கு யோசுவாவிற்கு வழியுண்டாகும். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவன் அவர்களை அழிக்கமுடியும்.
21எபிரோன், தெபீர், ஆனாப், யூதா ஆகிய மலை நாடுகளில் ஏனாக்கியர் வாழ்ந்து வந்தனர். யோசுவா அவர்களோடு போர் தொடுத்து அவர்களையும், அவர்களது ஊர்களையும் முற்றிலும் அழித்தான். 22இஸ்ரவேல் நாட்டில் ஏனாக்கியர் ஒருவரும் வாழவில்லை. காசா, காத், ஆஸ்தோத் நாடுகளில் மட்டுமே ஏனாக்கியர் உயிரோடு விடப்பட்டனர். 23முன்பே கர்த்தர் மோசேக்குக் கூறியிருந்தபடி, யோசுவா இஸ்ரவேல் நாட்டின் மீது ஆதிக்கம் உடையவனானான். வாக்களித்தபடியே கர்த்தர் இஸ்ரவேலருக்கு அத்தேசத்தைக் கொடுத்தார். இஸ்ரவேலின் கோத்திரங்கள் அனைத்திற்கும் அத்தேசத்தை யோசுவா பிரித்துக் கொடுத்தான். இறுதியில் போர் முடிந்து, அத்தேசத்தில் அமைதி நிலவிற்று.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for யோசுவாவின் புத்தகம் 11