YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 14

14
1ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களும் ஜனங்களுக்கு எந்தெந்த தேசத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தனர். 2ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு விரும்பிய வகையை அவர் முன்னரே மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரவருக்கு எந்தெந்த நிலப்பகுதி வேண்டுமென்பதை ஒன்பதரை கோத்திரத்தாரும் சீட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தனர். 3இரண்டரை கோத்திரத்தாருக்கு மோசே ஏற்கெனவே யோர்தானுக்குக் கீழக்கேயுள்ள நிலத்தைப் பிரித்துக் கொடுத்திருந்தான். ஆனால் லேவியின் கோத்திரத்தார் எந்த நிலத்தையும் பெறவில்லை. 4பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் அவர்களுக்குரிய நிலம் கொடுக்கப்பட்டது. யோசேப்பின் ஜனங்கள் மனாசே, எப்பிராயீம் என்று இரண்டு கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு கோத்திரமும் நிலத்தைப் பெற்றனர். லேவி கோத்திரத்துக்கு எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வசிப்பதற்கு சில ஊர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு கோத்திரத்தின் நடுவிலும் இந்த ஊர்கள் இருந்தன. அவர்களுடைய மிருகங்களுக்காக வயல்வெளி கொடுக்கப்பட்டிருந்தது. 5இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் நிலத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பதென்று கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தார். கர்த்தர் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் நிலத்தைப் பங்கிட்டனர்.
காலேப் அவனுக்குரிய நிலத்தைப் பெறுதல்
6ஒருநாள் கில்காலில் யோசுவாவிடம் யூதா கோத்திரத்திலிருந்து சிலர் வந்தனர். கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், அவர்களில் ஒருவன். காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் கர்த்தர் அவரது ஊழியனாகிய, மோசேயிடம், உம்மையும் என்னையும் குறித்துச் சொன்னவற்றை நினைவுகூர்ந்து பாரும். 7நாம் போகப்போகிற தேசத்தைப் பார்த்து வரும்படியாக கர்த்தருடைய ஊழியனாகிய மோசே என்னை அனுப்பினான். எனக்கு அப்போது நாற்பது வயது. அத்தேசத்தைப் பற்றிய எனது எண்ணங்களை நான் திரும்பி வந்தபோது மோசேக்குக் கூறினேன். 8என்னோடு வந்த மற்றவர்கள் தாம் பார்த்து அஞ்சியவற்றைக் குறித்துச் சொன்னார்கள். ஆனால் நாம் அத்தேசத்தைப் பெறுவதற்கு கர்த்தர் நிச்சயம் உதவி செய்வார் என நான் உண்மையாகவே நம்பினேன். 9எனவே அந்நாளில், ‘நீ செல்லும் தேசம் உனக்குரியதாகும். உனது பிள்ளைகளுக்கு எப்போதும் அத்தேசம் சொந்தமாகும். எனது தேவனாகிய கர்த்தரை, நீ உண்மையாகவே நம்பியதால் உனக்கு அத்தேசத்தைக் கொடுப்பேன்’ என்று மோசே எனக்கு வாக்குறுதி அளித்தான்.
10“கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தர் எனக்குச் கூறியபடியே இன்றும் என்னை உயிரோடு வைத்திருக்கிறார். நாம் பாலைவனங்களில் இதுவரைக்கும் அலைந்தோம். இப்போது எனக்கு, 85 வயது. 11மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் பெலமுள்ளவனாக இருக்கிறேன். அன்று போலவே இன்றும் என்னால் போரிட முடியும். 12முன்பு, கர்த்தர் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த மலைப்பிரதேசத்தை இப்போது எனக்குக் கொடும். வலிமை பொருந்திய ஏனாக்கியர் அந்நாளில் அங்கு வாழ்ந்தனர் என்பதையும், அவர்களுடைய நகரங்கள் பெரியதாகவும் பாதுகாப்புடையதாகவும் இருக்கின்றன என்பதையும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். இப்போதும், கர்த்தர் என்னோடிருக்கிறபடியால், அவர்களை வெளியேற்றி விட்டு கர்த்தர் கூறியபடி அந்த நிலப்பகுதியை நான் உரிமையாக்கிக்கொள்வேன்” என்றான்.
13எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை யோசுவா ஆசீர்வதித்தான். அவனுக்குச் சொந்தமாக எபிரோன் நகரை யோசுவா கொடுத்தான். 14கேனாசியனான, எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குடும்பத்தாருக்கு இன்றும் அந்நகரம் உரியதாக இருக்கிறது. ஏனென்றால் அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம் நம்பிக்கை கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தான். 15முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for யோசுவாவின் புத்தகம் 14