YouVersion Logo
Search Icon

லேவியராகமம் 9

9
தேவன் ஆசாரியர்களை ஏற்றுக்கொள்ளுதல்
1எட்டாவது நாள் மோசே ஆரோனையும் அவனது குமாரர்களையும், இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களையும் அழைத்தான். 2மோசே ஆரோனிடம், “பழுதற்ற ஒரு காளையையும், ஆட்டுக் கடாவையும் எடுத்துக் கொண்டு வா. பாவப் பரிகாரப் பலியாக காளையும், தகன பலியாக ஆட்டுக்கடாவும் இருக்கட்டும். கர்த்தருக்கு இந்த மிருகங்களைப் பலியாக அளிக்க வேண்டும். 3நீ இஸ்ரவேலரிடம் ஒரு வயதுள்ளதும், ‘பழுது இல்லாததுமான ஆட்டுக்கடாவைப் பாவப்பரிகார பலியாகவும், தகனபலியாகக் கன்றுகுட்டியையும், ஆட்டுக்குட்டியையும் 4சமாதானப் பலியாக ஒரு காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் கொண்டு வரும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. அந்த மிருகங்களையும், எண்ணெயிலே பிசைந்த தானியக் காணிக்கையையும் கர்த்தருக்குக் கொண்டு வாருங்கள்; ஏனென்றால் இன்று உங்களுக்கு கர்த்தர் தரிசனமாவார்’ என்று சொல்” என்றான்.
5எனவே, அனைத்து ஜனங்களும் மோசே கட்டளையிட்டபடியே அவர்கள் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஆசரிப்புக் கூடாரத்துக்கு வந்து, கர்த்தரின் சந்நிதானத்தில் நின்றனர். 6மோசே அவர்களிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி நீங்கள் இவற்றைச் செய்ய வேண்டும், பின்னர் கர்த்தரின் மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான்.
7பிறகு மோசே ஆரோனிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி செய்வதற்காக பலிபீடத்தின் அருகில் போய் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்து. அது உன்னையும் ஜனங்களையும் தூய்மைப்படுத்தும். ஜனங்களின் பலிப் பொருட்களை எடுத்து அவர்களைச் சுத்தப்படுத்தும் செயல்களைச் செய்” என்றான்.
8எனவே ஆரோன் பலிபீடத்தின் அருகில் சென்று தனது பாவப்பரிகார பலிக்காக காளையைப் பலியிட்டான். 9பிறகு ஆரோனின் குமாரர்கள் அதின் இரத்தத்தை ஆரோனிடம் கொண்டு வந்தனர். ஆரோன் அந்த இரத்தத்தில் தன் விரலை விட்டு பலிபீடத்தின் மூலைகளில் தடவியதுடன், மீந்திருந்த இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். 10பின் காளையின் கொழுப்பு, சிறுநீரகங்கள், கல்லீரலில் உள்ள ஜவ்வு ஆகியவற்றை எடுத்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவற்றைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் எரித்தான். 11பிறகு அவன் அதன் இறைச்சியையும் தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.
12அடுத்து, தகன பலிக்கான மிருகத்தைக் கொன்று அதனைத் துண்டுகளாக வெட்டினான். ஆரோனின் குமாரர்கள் அவனிடம் அதன் இரத்தத்தை எடுத்து வந்தனர். ஆரோன் அந்த இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றி தெளித்தான். 13ஆரோனின் குமாரர்கள் தகன பலிக்குரிய துண்டுகளையும், தலையையும் ஆரோனிடம் கொடுத்தனர். ஆரோன் அவற்றை பலிபீடத்தின் மேல் எரித்தான். 14ஆரோன் தகன பலிக்குரிய மிருகத்தின் உட்பகுதிகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவி அவற்றையும் பலிபீடத்தின் மேல் எரித்தான்.
15பிறகு ஆரோன் ஜனங்களின் பலிகளை கொண்டு வந்து, ஜனங்களுக்கான பாவப் பரிகார பலிக்குரிய ஒரு வெள்ளாட்டைக் கொன்றான். 16ஆரோன் தகன பலிக்குரியதையும் கொண்டு வந்து கர்த்தர் கட்டளையிட்டபடியே பலி செலுத்தினான். 17ஆரோன் தானியக் காணிக்கையை கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் வைத்தான். அதில் ஒரு கையளவு எடுத்து காலையில் செலுத்தும் பலியோடு பலிபீடத்தின் மேல் வைத்தான்.
18காளையையும், ஆட்டுக் கடாவையும் ஆரோன் கொன்றான். இது ஜனங்களுக்குரிய சமாதானப் பலிகள் ஆகும். ஆரோனின் குமாரர்கள் அவற்றின் இரத்தத்தை ஆரோனிடம் கொண்டு வந்தனர். ஆரோன் அதனைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். 19ஆரோனின் குமாரர்கள் அம்மிருகங்களின் கொழுப்பு, வால், குடல்களை மூடிய ஜவ்வு, சிறுநீரகங்கள், கல்லீரலின் மேலிருந்த ஜவ்வு ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். 20ஆரோனின் குமாரர்கள் இக்கொழுப்புப் பாகங்களை மார்புக்கண்டங்களின் மீது வைத்தனர். ஆரோன் அந்த கொழுப்புப் பகுதிகளை பலிபீடத்தின் மீது வைத்து எரித்தான். 21மோசே கட்டளையிட்டபடியே ஆரோன் மார்புக்கண்டங்களையும் வலதுகால் தொடையையும் அசைவாட்டும் பலியாக கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டினான்.
22பிறகு ஆரோன் தனது கைகளை ஜனங்களை நோக்கி உயர்த்தி ஆசீர்வாதம் செய்தான். பாவப் பரிகார பலி, தகனபலி, சமாதானப் பலி அனைத்தையும் ஆரோன் செலுத்தி முடித்த பிறகு பலிபீடத்திலிருந்து கீழே இறங்கி வந்தான்.
23மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே சென்றனர். பின் அவர்கள் வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தனர். பிறகு கர்த்தரின் மகிமையானது அனைத்து ஜனங்களுக்கும் காணப்பட்டது. 24கர்த்தருடைய சந்நிதியிருந்து நெருப்பு எழும்பி வந்து பலிபீடத்தின் மேல் இருந்த தகனபலிப் பொருட்களையும் கொழுப்பையும் எரித்தது. ஜனங்கள் இதனைப் பார்த்து ஆரவாரம் செய்தனர். தங்கள் முகங்களைத் தரையை நோக்கி தாழ்த்தினர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for லேவியராகமம் 9