YouVersion Logo
Search Icon

நாகூம் 1

1
1இந்தப் புத்தகம் எல்கோசனாகிய நாகூமின் தரிசனம். இது நினிவே நகரத்தைப் பற்றிய துயரமான இறைவாக்கு.
கர்த்தர் நினிவே மேல் கோபமாயிருக்கிறார்
2கர்த்தர் ஒரு எரிச்சலுள்ள தேவன், கர்த்தர் குற்றமுடையவர்களைத் தண்டிக்கிறார்.
கர்த்தர் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறவரும்,
மிகவும் கோபமானவருமாயிருக்கிறார்!
கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கிறார்.
அவர் தனது பகைவர்கள் மீது கோபத்தை வைத்திருக்கிறார்.
3கர்த்தர் பொறுமையானவர்.
ஆனால் அவர் வல்லமையுடையவராகவும் இருக்கிறார்.
கர்த்தர் குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பார்.
அவர் அவர்களை விடுதலை பெற விடமாட்டார்.
கர்த்தர் தீயவர்களைத் தண்டிக்க வந்துக்கொண்டிருக்கிறார்.
அவர் தமது ஆற்றலைக் காட்டுவதற்காகப் புயலையும் சுழற்காற்றையும் பயன்படுத்துவார்.
ஒரு மனிதன் தரையின் மேலும் புழுதியின் மேலும் நடக்கிறான்.
ஆனால் கர்த்தரோ மேகங்களின்மேல் நடக்கிறார்.
4கர்த்தர் கடலிடம் அதட்டி பேசுவார் அது வறண்டுப்போகும்.
அவர் அனைத்து ஆறுகளையும் வற்றச்செய்வார்.
வளமான நிலமுடைய பாசானும் கர்மேலும் வறண்டுப்போகும்.
லீபனோனின் மலர்கள் வாடிப்போகும்.
5கர்த்தர் வருவார்,
குன்றுகள் அச்சத்தால் நடுங்கும்,
மலைகள் உருகிப்போகும்.
கர்த்தர் வருவார், பூமி அச்சத்தால் நடுங்கும்.
உலகமும் அதிலுள்ள ஒவ்வொருவரும் அச்சத்தால் நடுங்குவார்கள்.
6கர்த்தருடைய பெருங்கோபத்திற்கு எதிராக எவரும் நிற்கமுடியாது.
எவராலும் அவரது பயங்கரக் கோபத்தைத் தாங்க முடியாது.
அவரது கோபம் நெருப்பைப்போன்று எரியும்.
அவர் வரும்போது கல்மலைகள் பேர்க்கப்படும்.
7கர்த்தர் நல்லவர்.
அவர் இக்கட்டான காலங்களில் நாம் செல்லக்கூடிய பாதுகாப்பான இடம்.
அவர் தன்னை நம்புகிறவரைக் கவனிக்கிறார்.
8ஆனால் அவர் அவரது எதிரிகளை முழுவதுமாக அழிப்பார்.
அவர் ஒரு வெள்ளத்தைப்போன்று அவர்களை அழிப்பார்.
அவர் தமது எதிரிகளை இருளுக்குள் துரத்துவார்.
9நீங்கள் ஏன் கர்த்தருக்கு எதிராகத் திட்டமிடுகிறீர்கள்.
அவர் முழுமையான அழிவைக் கொண்டுவருவார்,
எனவே நீங்கள் மீண்டும் துன்பங்களுக்கு காரணராகமாட்டீர்கள்.
10முட்செடிகள் பானையின் கீழ் எரிந்து அழிவது போல
நீங்கள் முற்றிலும் அழிக்கப்படுவீர்கள்.
காய்ந்துப்போன பதர் வேகமாக எரிவதுப்போன்று
நீங்கள் வெகு விரைவாக அழிக்கப்படுவீர்கள்.
11அசீரியாவே, உன்னிடமிருந்து ஒரு மனிதன் வந்தான்.
அவன் கர்த்தருக்கு எதிராகத் தீயவற்றை திட்டமிட்டான்.
அவன் தீய ஆலோசனைகளைத் தந்தான்.
12கர்த்தர் யூதாவுக்கு இதனைச் சொன்னார்:
“அசீரியாவின் ஜனங்கள் முழுபலத்தோடு இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் வெட்டி எறியப்படுவார்கள். அவர்கள் அனைவரும் முறியடிக்கப்படுவார்கள்.
என் ஜனங்களே, நான் உங்களைத் துன்புறுத்தினேன்.
ஆனால் நான் இனிமேல் உங்களைத் துன்புறுத்தமாட்டேன்.
13இப்பொழுது நான் உங்களை அசீரியாவின் அதிகாரத்தில் இருந்து விடுதலை செய்வேன்.
நான் உங்கள் கழுத்தில் உள்ள அந்த நுகத்தை எடுப்பேன்.
நான் உங்களைக் கட்டியிருக்கிற சங்கிலிகளை அறுப்பேன்.”
14அசீரியாவின் ராஜாவே, கர்த்தர் உன்னைக் குறித்து இந்தக் கட்டளையை கொடுத்தார்:
“உன் பெயரை வைத்துக்கொள்ள சந்ததியார் யாரும் உனக்கு இருக்கமாட்டார்கள்.
நான் உன் தெய்வங்களின் ஆலயங்களில் உள்ள செதுக்கப்பட்ட
விக்கிரகங்களையும் உலோகச் சிலைகளையும் அழிப்பேன்.
நான் உனக்காக உனது கல்லறையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.
உனது முடிவு விரைவில் வர இருக்கிறது.”
15யூதாவே, பார்!
அங்கே பார், குன்றுகளுக்கு மேல் வருவதைப் பார்.
இங்கே நல்ல செய்தியைத் தாங்கிக்கொண்டு தூதுவன் வருகிறான்.
அங்கே சமாதானம் இருக்கிறது என்று அவன் சொல்கிறான்.
யூதாவே, உனது விடுமுறை நாட்களைக் கொண்டாடு.
யூதாவே, நீ வாக்களித்தவற்றைச் செய்.
தீய ஜனங்கள் உன்னை மீண்டும் தாக்கித் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனெனில் அந்தத் தீய ஜனங்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.

Currently Selected:

நாகூம் 1: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நாகூம் 1