YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 20

20
மிரியாமின் மரணம்
1இஸ்ரவேல் ஜனங்கள் முதல் மாதத்தில் சீன் பாலைவனத்தை அடைந்தனர். ஜனங்கள் காதேசில் தங்கியிருந்தபோது மிரியாம் மரணமடைந்தாள். அவள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.
மோசேயின் தவறு
2அந்த இடத்தில் ஜனங்களுக்குப் போதுமான தண்ணீர் இல்லை. எனவே ஜனங்கள் ஒன்று கூடி வந்து இதைப்பற்றி மோசேயிடமும் ஆரோனிடமும் முறையிட்டனர். 3அவர்கள், மோசேயிடம் விவாதித்து, “எங்கள் சகோதரர்களைப் போலவே நாங்களும் இந்த இடத்தில் கர்த்தர் முன்னால் மரித்துப்போயிருக்கவேண்டும்? 4எதற்காக கர்த்தருடைய ஜனங்களை இந்தப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தீர்கள்? நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கேயே மரித்துப் போகவேண்டும் என்று விரும்புகின்றீரா? 5எங்களை எகிப்திலிருந்து இந்த மோசமான இடத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே தானியங்கள் இல்லை. அத்திமரமும், திராட்சை செடிகளும், மாதளஞ் செடியும், குடிக்க தண்ணீர் கூட இல்லையே” என்றனர்.
6எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
7கர்த்தர் மோசேயோடு பேசினார். 8அவர், “சிறப்புக்குரிய உன் கைத் தடியை எடுத்துக்கொள். உனது சகோதரன் ஆரோனையும் ஜனங்கள் கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு பாறையின்மீது போ. ஜனங்கள் முன்னால் பாறையோடு பேசு. பிறகு பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும். அந்த தண்ணீரை நீ ஜனங்களுக்கும் மிருகங்களுக்கும் தரலாம்” என்றார்.
9பரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான். 10மோசேயும், ஆரோனும் ஜனங்களிடம் பாறையின் முன்னால் கூடுமாறு சொன்னார்கள். பிறகு மோசே, “நீங்கள் எப்போதும் முறையிடுகிறீர்கள். இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் இந்த பாறையிலிருந்து தண்ணீர் வரும்படி செய்வேன்” என்றான். 11மோசே தன் கையை உயர்த்தி பாறையின் மீது தனது கோலால் இருமுறை அடித்தான். தண்ணீர் பாறையிலிருந்து பீறிட்டு வெளியே வந்தது. ஜனங்களும் மிருகங்களும் அந்த தண்ணீரைக் குடித்தனர்.
12ஆனால் கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே கூடியுள்ளனர். ஆனால் நீங்கள் என்னை கனப்படுத்தவில்லை. தண்ணீரை பெறும் வல்லமை என்னிடமிருந்து வந்ததை நீங்கள் ஜனங்களுக்கு காண்பிக்கவில்லை. நீங்கள் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஜனங்களிடம் காட்டவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு கொடுக்கப்போகும் தேசத்திற்குள் நீங்கள் ஜனங்களை அழைத்துக்கொண்டு செல்லமாட்டீர்கள்!” என்றார்.
13இந்த இடம் மேரிபாவின் தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது! இங்குதான் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரோடு தர்க்கம் பண்ணினார்கள். அங்கே கர்த்தர் தம்மை பரிசுத்தர் என்று அவர்களுக்குக் காட்டினார்.
ஏதோம் இஸ்ரவேல் ஜனங்களைத் தடைசெய்தல்
14மோசே காதேசில் இருக்கும்போது, சிலரை ஏதோமின் ராஜாவிடம் பின்வரும் செய்தியோடு அனுப்பினான்:
“உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் உங்களுக்குச் சொல்லியது என்னவென்றால்: நாங்கள் அடைந்த துன்பங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 15வெகு காலத்திற்கு முன்னர் நமது முற்பிதாக்கள் எகிப்துக்குள் சென்றனர். அங்கே நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்தோம். எகிப்து ஜனங்கள் எங்களிடம் கொடூரமாக நடந்துகொண்டனர். 16ஆனால் நாங்கள் கர்த்தரிடம் உதவி செய்யுமாறு கேட்டோம். கர்த்தர் எங்கள் குறையைக் கேட்டு தேவதூதனை அனுப்பி உதவினார். கர்த்தர் எங்களை எகிப்தைவிட்டு வெளியே அழைத்து வந்தார்.
“இப்போது நாங்கள் உங்கள் நாடு தொடங்குகிற காதேசில் இருக்கிறோம். 17நாங்கள் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்ல எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நாங்கள் வயல் அல்லது திராட்சை தோட்டத்தின் வழியாக நடந்து செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீர் மொண்டு குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே செல்வோம். நாங்கள் அந்தச் சாலையிலிருந்து வலது புறமாகவோ இடதுபுறமாகவோ நகரமாட்டோம். நாங்கள் உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை சாலையிலேயே தங்குவோம்” என்றனர்.
18ஆனால் ஏதோம் ராஜாவோ, “நீங்கள் எங்கள் நாட்டின் வழியாக பயணம் செய்ய முயன்றால், பிறகு நாங்கள் வந்து உங்களோடு வாளால் சண்டையிடுவோம்” என்று பதில் அளித்தான்.
19இஸ்ரவேல் ஜனங்களோ, “நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே பயணம் செய்வோம். உங்களுக்கு சொந்தமான தண்ணீரை நாங்களோ எங்கள் மிருகங்களோ குடித்தால் அதற்குரிய தொகையைத் தந்துவிடுவோம். நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக நடந்து செல்லவே விரும்புகிறோம். நாங்கள் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்றனர்.
20ஆனால் மீண்டும் ஏதோம் ராஜா, “எங்கள் நாட்டின் வழியாக நீங்கள் நடந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றான்.
பிறகு ஏதோம் ராஜா மிகப் பெரியதும், பலமுள்ளதுமான படையைக் கூட்டினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட வந்தனர். 21ஏதோம் ராஜா இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டான். அவர்கள் திரும்பி அந்த நாட்டைச் சுற்றிக்கொண்டு சென்றனர்.
ஆரோனின் மரணம்
22இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர். 23அது ஏதோம் நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது. கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 24“இது ஆரோன் மரிப்பதற்குரிய நேரம். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நாட்டிற்குள் அவன் நுழையமாட்டான். ஏனென்றால் நீயும் ஆரோனும் எனது ஆணைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. மேரிபாவின் தண்ணீர் பற்றிய நிகழ்ச்சியில் தவறு செய்து விட்டீர்கள்.
25“இப்போது, ஆரோனையும் அவனது குமாரன் எலெயாசாரையும் ஓர் என்னும் மலை மீது அழைத்து வா. 26ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அவனது குமாரன் எலெயாசாருக்கு அணிவித்து அழைத்து வா. ஆரோன் மலைமீது மரித்துப்போவான். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான்” என்றார்.
27கர்த்தருடைய ஆணைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஓர் என்னும் மலையின் மீது மோசே, ஆரோன், எலெயாசார் ஆகியோர் ஏறினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவர்கள் செல்வதைப் பார்த்தனர். 28மோசே, ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அகற்றி அதனை ஆரோனின் குமாரனான எலெயாசாருக்கு அணிவித்தான். பிறகு மலை உச்சியிலேயே ஆரோன் மரித்துப்போனான். மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தனர் 29ஆரோன் மரித்துப்போனதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் 30 நாட்களுக்குத் துக்கம் கொண்டாடினார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in