YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 33

33
எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களின் பயணம்
1மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைக் குழுக் குழுவாக எகிப்தை விட்டு அழைத்துச் சென்றனர். அவர்கள் கீழ்க்கண்ட இடங்களின் வழியாகப் பயணம் செய்தனர். 2மோசே தாம் பயணம் செய்த இடங்களைப்பற்றி எழுதினான். கர்த்தருடைய விருப்பப்படியே மோசே எழுதினான். அவர்கள் எகிப்தை விட்டு பயணம் செய்த இடங்கள் பின் வருவனவாகும்:
3முதல் மாதத்தின் 15வது நாளில் அவர்கள் ராமசேசை விட்டனர். அன்று காலை பஸ்காவுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெற்றி முழக்கங்களோடு வெளியேறினார்கள். அவர்களை எகிப்து ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். 4கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.
5இஸ்ரவேல் ஜனங்கள் ராமசேசை விட்டு சுக்கோத்திற்குப் பயணம் செய்தனர். 6சுக்கோத்திலிருந்து அவர்கள் ஏத்தாமிற்குச் சென்றனர். ஜனங்கள் பாலைவனத்தின் ஓரத்தில் தம் முகாம்களை ஏற்பாடு செய்துகொண்டனர். 7அவர்கள் ஏத்தாமை விட்டு ஈரோத்துக்குச் சென்றனர். அது பாகால் செபோனுக்கு அருகில் இருந்தது. அவர்கள் மிக்தோலுக்கு அருகில் தம் முகாமை அமைத்தனர்.
8ஜனங்கள் ஈரோத்தைவிட்டு கடல் நடுவே நடந்து பாலைவனத்தை நோக்கிச் சென்றனர். பின் அவர்கள் மூன்று நாள் பயணம் செய்து மாராவிலே தம் முகாமை அமைத்தனர்.
9ஜனங்கள் மாராவை விட்டு ஏலிமிற்குச் சென்று அங்கே கூடாரமிட்டனர். அங்கே 12 நீருற்றுகளும், 70 பேரீச்சம் மரங்களும் இருந்தன.
10பின் ஏலிமிலிருந்து விலகி செங்கடலுக்கு அருகே முகாமிட்டனர்.
11பின் செங்கடலைவிட்டு சீன் பாலைவனத்தில் முகாமிட்டனர்.
12பின் சீன் பாலைவனத்தை விட்டு தொப்காவில் முகாமிட்டனர்.
13பின் தொப்காவை விட்டு ஆலூசிலே முகாமிட்டனர்.
14பின் ஆலூசைவிட்டு ரெவிதீமிலே முகாமிட்டனர். அந்த இடத்தில் ஜனங்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாதிருந்தது.
15பின் ரெவிதீமை விட்டு சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டனர்.
16பின் சீனாயை விட்டு கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டனர்.
17பின் கிப்ரோத் அத்தாவை விட்டு ஆஸ்ரோத்திலே முகாமிட்டனர்.
18பின் ஆஸ்ரோத்தை விட்டு ரித்மாவிலே முகாமிட்டனர்.
19பின் ரித்மாவை விட்டு ரிம்மோன் பேரேசிலே முகாமிட்டனர்.
20பின் ரிம்மோன்பேரேசை விட்டு லிப்னாவிலே முகாமிட்டனர்.
21பின் லிப்னாவை விட்டு ரீசாவிலே முகாமிட்டனர்.
22பின் ரீசாவை விட்டு கேலத்தாவிலே முகாமிட்டனர்.
23பின் கேலத்தாவை விட்டு சாப்பேர் மலையில் முகாமிட்டனர்.
24பின் சாப்பேர் மலையை விட்டு ஆரதாவிலே முகாமிட்டனர்.
25பின் ஆரதாவை விட்டு மக்கெலோத்திலே முகாமிட்டனர்.
26பின் மக்கெலோத்தாவை விட்டு தாகாத்திலே முகாமிட்டனர்.
27பின் தாகாத்தை விட்டு தாராகிலே முகாமிட்டனர்.
28பின் தாராகியை விட்டு மித்காவிலே முகாமிட்டனர்.
29பின் மித்காவை விட்டு அஸ்மோனாவில் முகாமிட்டனர்.
30பின் அஸ்மோனாவை விட்டு மோசெரோத்திலே முகாமிட்டனர்.
31பின் மோசெரோத்தை விட்டு பெனேயாக்கானிலே முகாமிட்டனர்.
32பின் பெனெயாக்கானை விட்டு கித்காத் மலையிலே முகாமிட்டனர்.
33பின் கித்காத் மலையை விட்டு யோத்பாத்தாவிலே முகாமிட்டனர்.
34பின் யோத்பாத்தாவை விட்டு எப்ரோனாவிலே முகாமிட்டனர்.
35பின் எப்ரோனாவை விட்டு எசியோன் கேபேரிலே முகாமிட்டனர்.
36பின் எசியோன் கேபேரிலை விட்டு காதேசாகிய சீன் என்னும் பாலைவனத்திலேயே முகாமிட்டனர்.
37பின் காதேசாகிய சீன் பாலைவனத்தை விட்டு ஓர் என்னும் மலையில் முகாமிட்டனர். இது ஏதோம் தேசத்தின் எல்லையில் உள்ளது. 38ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, ஓர் என்னும் மலை மீது ஏறினான். பின் அங்கேயே மரணமடைந்தான். அவன் ஐந்தாவது மாதத்தில் முதல் நாளன்று மரித்துப்போனான். அது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டு வந்த 40வது ஆண்டு. 39அப்போது ஆரோனுக்கு 123 வயது.
40கானான் நாட்டில் நெகேவ் என்ற பாலைவனத்தில் ஆராத் என்ற நகரம் ஒன்று இருந்தது. கானானிய ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் வருவதைப் பற்றி அறிந்தான்.
41இஸ்ரவேல் ஜனங்கள் ஓர் மலையை விட்டு சல்மோனாவில் முகாமிட்டனர்.
42பின் சல்மோனாவை விட்டு பூனோனில் முகாமிட்டனர்.
43பின் பூனோனை விட்டு ஓபோத்தில் முகாமிட்டனர்.
44பின் ஓபோத்தை விட்டு அபாரீமின் மேடுகளில் முகாமிட்டனர். இது மோவாபின் எல்லையில் இருந்தது.
45பின் அபாரீமினை விட்டு தீபோன் காத்திலே முகாமிட்டனர்.
46பின் தீபோன்காத்தை விட்டு அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டனர்.
47பின் அல்மோன் திப்லாத்தாயிமை விட்டு நேபோவுக்கு அருகிலுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டனர்.
48பின் அபாரீம் மலைகளை, விட்டு மோவாபிலே உள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர். இது யோர்தான் நதியைக்கடந்து எரிகோவின் அருகிலே உள்ளது. 49பின் யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டனர். அவர்களது பாளையம் பெத்யெசிமோத்தைத் தொடங்கி ஆபேல் சித்தீம்வரை இருந்தது.
50அந்த இடத்தில் மோசேயோடு கர்த்தர் பேசினார். அவர், 51“இஸ்ரவேல் ஜனங்களிடம் இவற்றை கூறு: நீங்கள் யோர்தான் நதியை கடந்து கானான் நாட்டிற்குள் நுழைவீர்கள். 52நீங்கள் அங்கே காணும் ஜனங்களிடமிருந்து அந்நாட்டை எடுத்துக்கொள்வீர்கள். அவர்களின் செதுக்கப்பட்ட சிலைகளையும், விக்ரகங்களையும் அழித்துவிடுவீர்கள். அவர்களின் மேடைகளையும் நீங்கள் அழிக்க வேண்டும். 53நீங்கள் அந்நாட்டைக் கைப்பற்றி அங்கேயே குடியிருப்பீர்கள். ஏனென்றால் நான் இந்த நாட்டை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். இது உங்கள் குடும்பத்தாருக்கு உரியது. 54உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இந்நாட்டின் பங்கைப் பெறுவார்கள். எந்தக் குடும்பத்தினர் எந்தப் பகுதியைப் பெறுவது என்பதைச் சீட்டுக் குலுக்கல் மூலம் அறிந்துகொள்வீர்கள். பெரிய குடும்பத்தினர் பெரும் பகுதியைப் பெறுவார்கள். சிறிய குடும்பத்தினர் சிறியப் பகுதியைப் பெறுவார்கள். எந்தக் குடும்பம் நாட்டின் எந்தப் பகுதியைப் பெறும் என்பதை சீட்டுக் குலுக்கல் மூலம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் இந்த தேசத்தின் பங்கைச் சுதந்தரிக்கும்.
55“நீங்கள் அந்த அந்நிய ஜனங்களை இந்நாட்டை விட்டுத் துரத்த வேண்டும். அவர்களை இந்நாட்டிலே தங்கவிட்டால் பிறகு அவர்கள் உங்களுக்கு மிகுந்த தொந்தரவுகளை கொண்டுவருவார்கள். அவர்கள் உங்கள் கண்களில் முள்ளாகவும், விலாக்களில் கூராகவும் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பல பிரச்சனைகளைக் கொண்டுவருவார்கள். 56நான் அப்போது அவர்களுக்குச் செய்ய திட்டமிட்டதை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in