YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 30

30
யாக்கோபின் குமாரனாகிய ஆகூரின் ஞானமொழிகள்
1இவை அனைத்தும் யாக்கோபின் குமாரனான ஆகூரின் ஞானமொழிகள். இது ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் அளித்த செய்தி:
2பூமியில் நான்தான் மிகவும் மோசமானவன். நான் புரிந்துகொள்ள வேண்டிய விதமாகப் புரிந்துகொள்ளவில்லை. 3ஞானியாக இருக்க நான் கற்றுக்கொள்ளவில்லை. தேவனைப்பற்றியும் எதுவும் அறிந்துகொள்ளவில்லை. 4பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி எவரும் எப்போதும் கற்றுக்கொண்டதில்லை. எவரும் காற்றைக் கையால் பிடித்ததில்லை. எவரும் தண்ணீரை துணியில் கட்டியதில்லை. எவருமே உண்மையில் பூமியின் எல்லையை அறிந்ததேயில்லை. இவற்றை எவராவது செய்யமுடியுமா? யார் அவர்? எங்கே அவரது குடும்பம் இருக்கிறது?
5தேவன் சொல்லுகிற அனைத்தும் பூரணமானவை. தேவன் அவரிடம் செல்லுகிறவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கிறார். 6எனவே தேவன் சொன்னவற்றை மாற்றுவதற்கு முயற்சி செய்யாதே. நீ அவ்வாறு செய்தால், அவர் உன்னைத் தண்டிப்பார். நீ பொய் சொல்கிறாய் என்பதையும் நிரூபிப்பார்.
7கர்த்தாவே, நான் மரித்துப்போவதற்கு முன்பு எனக்காக நீர் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். 8நான் பொய் சொல்லாமல் இருக்க உதவிசெய்யும். மிக ஏழையாகவோ அல்லது மிகச் செல்வந்தனாகவோ என்னை ஆக்கவேண்டாம். அன்றாடம் எது தேவையோ அதை மட்டும் எனக்குத் தாரும். 9ஒருவேளை, என்னிடம் தேவைக்கு அதிகமான பொருட்கள் இருந்தால், நீர் எனக்குத் தேவையில்லை என்று எண்ணத் தொடங்குவேன். ஒருவேளை நான் ஏழையாக இருந்தாலோ திருடலாம். இதனால் நான் தேவனுடைய நாமத்திற்கு அவமானத்தைத் தேடித்தருவேன்.
10எஜமானனிடம் அவனது வேலைக்காரனைப்பற்றிக் குற்றம் சொல்லாதே. நீ அவ்வாறு செய்தால், எஜமான் உன்னை நம்பமாட்டான். உன்னைக் குற்றம் உடையவனாக நினைப்பான்.
11சிலர் தங்கள் தந்தைகளுக்கு எதிராகப் பேசுவார்கள். அவர்கள் தம் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்.
12சிலர் தம்மை நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மிக மோசமாக இருப்பார்கள்.
13சிலர் தம்மை மிகவும் நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களை விடத் தம்மை மிக நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள்.
14சிலரது பற்கள் வாள்களைப்போன்று உள்ளன. அவர்களது தாடைகள் கத்திகளைப்போன்றுள்ளன. அவர்கள் ஏழை ஜனங்களிடமிருந்து எவ்வளவு எடுத்துக்கொள்ளமுடியுமோ அவ்வளவு எடுத்துக்கொள்வார்கள்.
15சிலர் தம்மால் பெற முடிந்ததையெல்லாம் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அவர்கள் சொல்வதெல்லாம், “எனக்குத் தா, எனக்குத் தா, எனக்குத் தா” என்பதே. திருப்தி அடையாதவை மூன்று உண்டு. உண்மையில் போதும் என்று சொல்லாதவை நான்கு உண்டு. 16மரணத்திற்குரிய இடம், மலட்டுப் பெண், மழை தேவைப்படுகிற வறண்ட நிலம், அணைக்க முடியாத நெருப்பு ஆகியவையே அவை.
17தன் தந்தையைக் கேலிச்செய்கிறவனும் தாயின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவனும் தண்டிக்கப்படுவான். அத்தண்டனை அவனது கண்களைக் காகங்களும், கழுகின் குஞ்சுகளும் தின்னும்படியான பயங்கரமுடையது.
18என்னால் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் மூன்று உண்டு. உண்மையில் புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் நான்கு உண்டு. 19வானத்தில் பறக்கும் கழுகு, பாறைமேல் ஊர்ந்து செல்லும் பாம்பு, கடலில் அசையும் கப்பல், ஒரு பெண்ணின் மேல் அன்புகொண்டிருக்கும் ஆண் ஆகிய நான்கையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
20தன் கணவனுக்கு உண்மையில்லாத பெண், தான் எதுவும் தவறு செய்யாதவளைப்போன்று நடிக்கிறாள். அவள் சாப்பிடுகிறாள், குளிக்கிறாள், தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறாள்.
21பூமியில் தொல்லை விளைவிக்கக் கூடியவை மூன்று உண்டு. உண்மையில் பூமியால் தாங்க முடியாதவை நான்கு. 22ராஜாவாகிவிட்ட அடிமை, தனக்குத் தேவைப்படுகிற அனைத்துமுடைய முட்டாள், 23மனதில் முழுமை வெறுப்புடையவளாயிருந்தும் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்படும் பெண், தான் வேலை செய்த எஜமானிக்கே எஜமானியாகிற வேலைக்காரப் பெண் ஆகிய நால்வரையும் பூமி தாங்காது.
24உலகில் உள்ள மிகச் சிறியவை நான்கு, ஆனால் இவை மிகவும் ஞானமுடையவை.
25எறும்புகள் மிகச் சிறியவை, பலவீனமானவை.
எனினும் அவை தங்களுக்குத் தேவையான உணவைக் கோடைக்காலம் முழுவதும் சேகரித்துக்கொள்ளும்.
26குழி முயல்கள் மிகச்சிறிய மிருகம், ஆனாலும் இதுதன் வீட்டைப் பாறைகளுக்கு இடையில் கட்டிக்கொள்ளும்.
27வெட்டுக்கிளிகளுக்கு ராஜா இல்லை.
எனினும் அவை சேர்ந்து வேலைச்செய்கின்றன.
28பல்லி மிகச் சிறிது. அவற்றை நம் கையால் பிடித்துக்கொள்ளலாம்.
எனினும் அவை அரண்மனையிலும் வசிக்கின்றன.
29நடக்கும்போது முக்கியமானவைகளாகத் தோன்றுபவை மூன்று. உண்மையில் அவைகள் நான்காகும்.
30சிங்கம் எல்லா மிருகங்களைவிடவும் மிகவும் பலம் பொருந்தியது.
அது எதைக் கண்டும் ஓடுவதில்லை.
31பெருமையோடு நடக்கும் சேவல், வெள்ளாடு, தம் ஜனங்களிடையே இருக்கும் ஒரு ராஜா.
32உன்னைப்பற்றி நீயே பெருமையாக நினைத்துக்கொண்டு தீங்கு செய்யத் திட்டமிடும் முட்டாளாக இருந்தால், அவற்றை நிறுத்திவிட்டு உன் செயல்களைப்பற்றி சிந்திக்கவேண்டும்.
33பாலைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கும். ஒருவன் இன்னொருவனின் மூக்கில் அடித்தால் இரத்தம் வரும். இது போலவே, நீ ஜனங்களைக் கோபங்கொள்ள வைத்தால், நீ தான் துன்பத்துக்கு காரணமாயிருப்பாய்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நீதிமொழிகள் 30