YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 102

102
துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளை கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது.
1கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
2கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.
3என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
4என் வலிமை போயிற்று.
நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன்.
நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
5என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
6பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
7என்னால் தூங்க இயலவில்லை.
கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
8என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
9என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
10ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.
11பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
12ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
13நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
14உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
15ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
தேவனே, பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
16கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
17தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
18வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
19மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
20சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
21அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
22தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
23என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
என் ஆயுள் குறைந்தது.
24எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
25பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
26உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
அவையெல்லாம் மாறிப்போகும்.
27ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
நீர் என்றென்றும் வாழ்வீர்!
28நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீத புத்தகம் 102