YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 55

55
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்.
1தேவனே, என் ஜெபத்தைக் கேளும்.
இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும்.
2தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.
என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன்.
3என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான்.
கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.
என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள்.
என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள்.
4என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது.
நான் மரணபயம் அடைந்தேன்.
5நான் அஞ்சி நடுங்கினேன்.
பயத்தால் தாக்குண்டேன்.
6ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன்.
அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன்.
7நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.
8நான் ஓடி தப்பித்துக்கொள்வேன்.
துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
9-10என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும்.
இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன்.
என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன.
இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.
11தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன.
ஜனங்கள் பொய்களைக்கூறி, எங்கும் ஏமாற்றுகிறார்கள்.
12ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன்.
என் பகைவர்கள் என்னைத் தாக்கினால் நான் ஒளிந்துக்கொள்வேன்.
13ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும்,
என் நண்பனுமாகிய நீயே எனக்குத் தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறாய்.
14நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.
15என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன்.
அவர்கள் உயிரோடே புதைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்!
ஏனெனில் அவர்கள் தங்கள் வீடுகளில் மிகப் பயங்கரமான காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
16உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.
கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
17நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.
என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
18நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.
ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
19தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.
நித்திய ராஜா எனக்கு உதவுவார்.
20என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
21என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.
அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள்.
அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை.
ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.
22உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார்.
23உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!
உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீத புத்தகம் 55