YouVersion Logo
Search Icon

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 19

19
பரலோகத்தில் தேவனைப் புகழ்தல்
1இதற்குப்பிறகு பரலோகத்தில் உள்ள ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன், அவர்கள்,
“அல்லேலூயா!
தேவனைத் துதியுங்கள், வெற்றியும், மகிமையும், வல்லமையும் நம் தேவனுக்கு உரியது.
2அவரது நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நேர்மையுமானவை.
நமது தேவன் மாபெரும் வேசியைத் தண்டித்துவிட்டார்.
இந்த உலகத்தை தன் வேசித்தனத்தால் கெடுத்தவள் அவளே.
அவள் கொன்ற தமது ஊழியர்களின் இரத்தத்துக்கு தேவன் பழிவாங்கினார்”
என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
3பரலோகத்திலுள்ள மக்கள்,
“அல்லேலூயா!
அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள்.
4பிறகு இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பணிந்து வணங்கி, சிம்மாசனத்தில் வீற்றிருந்த தேவனை வழிபட்டனர்.
“ஆமென் அல்லேலூயா”
என அவர்கள் சொன்னார்கள்.
5பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது,
“நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள்.
நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!”
என்று கூறியது.
6அதற்குப் பிறகு ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன். அது பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியோசை போலவும் கேட்டது. அவர்கள் சொன்னார்கள்:
“அல்லேலூயா!
நமது தேவனாகிய கர்த்தர் ஆளுகிறார்.
அவரே சர்வ வல்லமையுள்ளவர்.
7நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம்.
தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது.
ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள்.
8மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன.
அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.”
(மெல்லிய ஆடை என்பது தேவனுடைய பரிசுத்தமான மக்களின் நற்செயலைக் குறிக்கும்.)
9பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.
10பிறகு நான் அந்தத் தூதனை வணங்குவதற்காகக் குனிந்தேன். ஆனால் அந்தத் தூதன் என்னிடம், “என்னை வணங்கவேண்டாம். இயேசுவின் உண்மையைக் கைக்கொண்டுள்ள உன்னைப்போலவும் உன் சகோதரர்களைப் போலவும் நான் ஒரு ஊழியக்காரன். தேவனை வணங்கு. ஏனென்றால் இயேசுவின் உண்மை தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது” என்றான்.
வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்பவர்
11பிறகு, நான் பரலோகம் திறப்பதைக் கண்டேன். எனக்கு முன்னால் ஒரு வெள்ளைக் குதிரை நின்றது. அதன்மீது இருந்தவர் நம்பிக்கை என்றும் உண்மையென்றும் அழைக்கப்படுகிறார். அவர் நியாயம் தீர்ப்பதிலும் போர் செய்வதிலும் மிகச் சரியாக இருக்கிறார். 12அவரது கண்கள் எரிகிற நெருப்புபோல ஜொலித்தது. அவரது தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரது பெயர் அவருக்கு மேல் எழுதப்பட்டிருந்தது. அப்பெயர் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வேறு எவருக்கும் அப்பெயர் தெரியாது. 13அவர் இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்த அங்கியை அணிந்திருந்தார். அவர் பெயரே தேவனுடைய வார்த்தை ஆகும். 14பரலோகத்தின் படைகள் அவரைப் பின்தொடர்ந்தன. அவர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் வந்தனர். அவர்கள் வெள்ளையும் சுத்தமுமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். 15அவரது வாயிலிருந்து கூர்மையான வாள் வெளியே வருகிறது. அவர் பிற நாடுகளை வெல்ல அதனைப் பயன்படுத்துவார். அவர் இரும்புக் கோலால் அத்தேசங்களை ஆள்வார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கோபமாகிய ஆலையிலுள்ள திராட்சையை மிதிப்பார். 16அவரது ஆடையின் மேலும் தொடையின் மேலும்
“ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்”
என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது.
17பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்கக் கண்டேன். வானத்தில் பறந்துகொண்டிருந்த அனைத்துப் பறவைகளிடமும் அவன் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். “தேவனுடைய சிறந்த விருந்துக்கு அனைவரும் சேர்ந்து வாருங்கள். 18ராஜாக்கள், சேனைத் தலைவர்கள், புகழ்பெற்ற மனிதர்கள் ஆகியோரின் சரீரங்களை உண்ணமுடியும் வண்ணம் ஒருங்கிணைந்து வாருங்கள். குதிரைகள் மற்றும், குதிரைகளின் மேல் சவாரி செய்தவர்களின் உடல்களைத் தின்னவும், சுதந்தரமானவர்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய மக்கள் அனைவரின் சரீரங்களைத் தின்னவும் வாருங்கள்” என்றான்.
19பிறகு நான் அந்தக் குதிரையின் மேல் ஏறி இருக்கிறவரையும் அவரது படையையும் எதிர்த்துப் போரிட அந்த மிருகமும் தன் படைகளுடன் பூமியின் ராஜாக்களும் ஒருங்கிணைந்ததைக் கண்டேன். 20ஆனால், அந்த மிருகம் பிடிபட்டது. போலித் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இவனே அந்த மிருகத்திற்காக அற்புதங்களை செய்தவன். மிருகத்தின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்களையும் மிருக விக்கிரகத்தை வழிபட்டவர்களையும் இவ்வற்புதங்களால் அவன் வஞ்சித்தான். போலித் தீர்க்கதரிசியும் மிருகமும் கந்தகம் எரிகிற நெருப்புக் கடலில் உயிரோடு போடப்பட்டார்கள். 21குதிரையின் மேல் வந்தவரின் வாயிலிருந்து வெளிவந்த வாளால் அவர்களுடைய படைகள் கொல்லப்பட்டன. அவர்களின் சரீரங்களைப் பறவைகள் திருப்தியுறும்வரை தின்றன.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 19