YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5

5
தேவனுக்கேற்ற நீதிமான்
1நமது விசுவாசத்தால் நாம் தேவனுக்கேற்ற நீதிமான்களாக்கப்பட்டோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். 2நமது விசுவாசத்தின் மூலமாக நாம் இன்று மகிழ்கிற தேவனுடைய கிருபைக்குள் நம்மை கர்த்தர் கொண்டு வந்திருக்கிறார். தேவனுடைய மகிமையைப் பங்கிட்டுக்கொள்வதில் உள்ள நம்பிக்கையால் நாம் மிகவும் மகிழ்கிறோம். 3நமக்கு ஏற்படுகிற துன்பங்களுக்காகவும் நாம் மகிழ்கிறோம். துன்பங்களுக்காக நாம் ஏன் மகிழ்கிறோம்? ஏனென்றால் இத்துன்பங்கள் தான் நம்மைப் பொறுமை உடையவர்களாக ஆக்குகிறது. 4நாம் பலமுடையவர்கள் என்பதற்கு இப்பொறுமையே சான்று. இச்சான்று நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. 5இந்நம்பிக்கை எப்போதும் நம்மை ஏமாற்றத்துக்குள்ளாக்காது. தோற்கவும் செய்யாது. ஏனென்றால் தேவன் நமது இதயங்கள் நிறைய தன் அன்பைப் பொழிந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் மூலமாகத் தன் அன்பைக் கொடுத்தார். தேவனிடமிருந்து வந்த பெரிய வரமே பரிசுத்த ஆவியானவர்.
6நாம் பலவீனர்களாக இருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்தார். நாம் தேவனுக்கு எதிராக வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சரியான நேரத்தில் கிறிஸ்து நமக்காக மரித்தார். 7ஒருவன் எவ்வளவுதான் நீதிமானாக இருந்தாலும், மிகச் சிலரே அவனது வாழ்வைப் பாதுகாப்பதற்காக தம் உயிரைக் கொடுப்பர். ஒருவன் மிக நல்லவனாக இருந்தால்தான் இன்னொருவன் அவனுக்காக உயிரைக் கொடுக்கிறான். 8ஆனால் நாம் பாவிகளாக இருக்கும்போதே நமக்காக கிறிஸ்து உயிரைவிட்டார். இதன் மூலம் தேவன் நம்மீதுகொண்ட பேரன்பை நிரூபித்துவிட்டார்.
9கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் தேவனுக்கேற்ற நீதிமான்களாகிவிட்டோம். எனவே, மிக உறுதியாகக் கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனுடைய கோபத்திலிருந்து இரட்சிக்கப்படுவோம். 10நாம் தேவனுக்குப் பகைவர்களாக இருந்தபோது, தேவனோ கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நம்மை நண்பர்களாக்கிக் கொண்டார். எனவே, இப்போது உறுதியாக நாமனைவரும் அவரது நண்பர்களே. தேவன் தனது குமாரனின் உயிர் மூலம் நம்மை இரட்சிப்பார். 11இப்போது நாம் இரட்சிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே தேவனிடம் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏனென்றால் இயேசுவின் மூலமே நாம் தேவனுடைய நண்பர்களானோம்.
ஆதாமும்-கிறிஸ்துவும்
12ஆதாம் என்கிற மனிதனின் செயலால்தான் உலகத்துக்குப் பாவம் வந்தது. பாவத்தோடு மரணமும் வந்தது. அதனால்தான் அனைவரும் தம் பாவத்தால் இறந்து போகிறார்கள். 13மோசேயின் சட்டங்களுக்கு முன்னரே உலகில் பாவம் ஏற்பட்டுவிட்டது. சட்டம் இல்லாததால் தேவன் மக்களை அவர்கள் பாவங்களுக்காகக் குற்றவாளி ஆக்கவில்லை. 14ஆனால் ஆதாம் காலத்திலிருந்து மோசே வரைக்கும் மரணமானது எல்லோரையும் ஆட்கொண்டது. தேவனுக்குக் கீழ்ப்படியாது பாவம் செய்ததால் ஆதாம் மரணமுற்றான், ஆனாலும் ஆதாமைப்போல பாவம் செய்யாமலிருந்தும் பலர் மரணமடைந்தனர்.
பின்னால் வந்த இயேசுவைப் போன்றவனே ஆதாம். 15ஆனால் தேவனுடைய வரமானது ஆதாமின் பாவத்தைப் போன்றதல்ல. அந்த ஆதாமின் பாவத்தால் பலர் மாண்டு போனார்கள். ஆனால் தேவனிடமிருந்து பெற்ற கிருபையானது மிகவும் உயர்ந்தது. இயேசு கிறிஸ்து என்கிற ஒருவரின் கிருபையின் மூலமாகவே பலரும் தேவனுடைய வரத்தைப் பெற்றனர்.
16ஒருமுறை ஆதாம் பாவம் செய்த பிறகு, அவன் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டான். ஆனால் தேவனுடைய கிருபையோ வேறு தன்மையானது. இந்த வரம் மக்களை தேவனுக்கேற்ற நீதிமான்களாக்கிற்று. 17ஒருவன் செய்த பாவத்தால் மரணம் அனைவருக்கும் விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது சிலர் தேவனுடைய கிருபையை பெற்றார்கள். தேவனுடைய வரம் அவர்களை தேவனுக்கு வேண்டியவர்களாக்கியது. நிச்சயமாக அவர்கள் ஒரு மனிதரான இயேசு கிறிஸ்துவினாலே உண்மையான வாழ்வைப் பெற்று ஆளுவார்கள்.
18எனவே ஆதாம் செய்த ஒரு பாவமானது மரணம் எனும் தண்டனையை அனைவருக்கும் தந்தது. அதுபோல் ஒரு மனிதரான இயேசுவின் நீதியானது அனைவரையும் நீதிமான்களாக்கும். அதோடு உண்மையான வாழ்வையும் அவர்களுக்குத் தந்தது. 19ஒருவன் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அனைவரும் பாவிகளாயினர். இது போல் ஒருவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் பலர் நீதிமான்களாகுவர். 20நியாயப்பிரமாணம் வந்த பிறகு பாவங்களும் அதிகரித்தன. மக்கள் மிகுதியாகப் பாவம் செய்யும்போது தேவனும் தமது கிருபையை அதிகமாகக் காட்டுகிறார். 21ஒரு முறை பாவம் ஆட்சி செய்து மரணத்துக்கு ஏதுவாயிற்று. இதே வழியில் கிருபையானது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5