YouVersion Logo
Search Icon

லூக்கா 14

14
பரிசேயனின் வீட்டில் இயேசு
1ஒரு சபத் ஓய்வுநாளிலே, பரிசேயரின் தலைவன் ஒருவனுடைய வீட்டிலே, இயேசு உணவருந்தப் போயிருந்தார். அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். 2அங்கே அவருக்கு முன்பாக, நீர்க்கோவை#14:2 நீர்க்கோவை – உடலில் அளவுக்கு அதிகமாக நீர் சேர்ந்து, உடல் வீக்கமுறும் ஒரு நோய். வியாதியினால் உடல் வீக்கமுற்று துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் இருந்தான். 3இயேசு பரிசேயரையும் நீதிச்சட்ட அறிஞரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணமாக்குவது நீதிச்சட்டத்திற்கு ஏற்றதா, இல்லையா?” என்று கேட்டார். 4அவர்களோ ஒன்றும் பேசாதிருந்தார்கள். எனவே அவர் அவனைக் கையால் பிடித்து, அவனைக் குணமாக்கி அனுப்பிவிட்டார்.
5அப்போது அவர் அவர்களிடம், “உங்களில் ஒருவனுடைய மகனோ, மாடோ#14:5 மாடோ – சில பிரதிகளில் கழுதை என்றுள்ளது ஓய்வுநாளிலே கிணற்றில் விழுந்தால், நீங்கள் உடனடியாக அவனையோ, மாட்டையோ வெளியே தூக்கிவிட மாட்டீர்களா?” என்று கேட்டார். 6அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
7உணவுப் பந்தியிலே விருந்தாளிகள் முதன்மையான இடங்களைத் தேடியதை அவர் கவனித்தபோது, அவர்களிடம் இந்த உவமையைச் சொன்னார்: 8“யாராவது உங்களை ஒரு திருமண விருந்துக்கு அழைக்கும்போது, முதன்மையான இடத்தில் போய் உட்கார வேண்டாம். ஏனெனில், உங்களைவிட மதிப்புக்குரிய வேறொருவரும் அழைக்கப்பட்டிருக்கலாம். 9எனவே, உங்கள் இருவரையும் அழைத்தவன் உங்களிடத்தில் வந்து, ‘நீ உட்கார்ந்திருக்கும் இடத்தை இந்த மனிதனுக்குக் கொடு’ என்று உங்களிடம் சொல்லக் கூடும். அப்போது நீங்கள் வெட்கத்துக்குள்ளாகி, கடைசி இடத்தில் போய் உட்கார நேரிடும். 10ஆகவே நீங்கள் எங்கேயாவது அழைக்கப்படும்போது, கடைசி இடத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள். அப்போது உங்களை அழைத்தவன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, உயர்வான இடத்தில் வந்து உட்கார்ந்துகொள்’ என்று சொல்வான். அப்போது உங்களுடன்கூட வந்திருக்கும் எல்லா விருந்தாளிகளின் முன்னிலையிலும் நீங்கள் மதிப்பைப் பெறுவீர்கள். 11ஏனெனில், தன்னைத் தானே உயர்த்துகின்ற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தானே தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்” என்றார்.
12பின்பு இயேசு தம்மை அழைத்தவனிடம், “நீ ஒரு மதிய உணவையோ இரவு உணவையோ, கொடுக்கும்போது, உனது நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அல்லது செல்வந்தர்களான உன் அயலவரையோ அழைக்க வேண்டாம்; அப்படி நீ அழைத்தால், அவர்களும் உன்னைத் திரும்ப அழைப்பார்கள். இவ்விதமாய் அவர்கள் உனக்குக் கைம்மாறு செய்துவிடுவார்கள். 13எனவே நீ ஒரு விருந்தைக் கொடுக்கும்போது, ஏழைகளையும், ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழைப்பாயாக; 14அப்போது நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களால் அதற்கான கைம்மாறு எதையும் உனக்குச் செய்ய முடியாது. ஆனால் நீதிமான்களின் உயிர்த்தெழுதலில், அதற்கான பிரதிபலனைப் பெற்றுக்கொள்வாய்” என்றார்.
பெரிய விருந்தின் உவமை
15அவரோடு உணவுப் பந்தியில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் இதைக் கேட்டபோது, அவன் இயேசுவிடம், “இறைவனுடைய அரசின் விருந்தில் உண்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றான்.
16அதற்கு மறுமொழியாக இயேசு சொன்னதாவது: “ஒரு மனிதன் பெரிய விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி, அதற்குப் பல விருந்தினர்களை அழைத்திருந்தான். 17விருந்துக்கான நேரம் வந்தபோது, அழைக்கப்பட்டவர்களிடம், ‘வாருங்கள் விருந்து ஆயத்தமாகிவிட்டது’ என்று சொல்லும்படி, தனது வேலைக்காரனை அனுப்பினான்.
18“ஆனால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஒருமித்து சாக்குப்போக்கு சொல்லத் தொடங்கினார்கள். முதலாவது ஆள், ‘இப்போதுதான், நான் ஒரு வயலை வாங்கியிருக்கிறேன். நான் அதைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
19“இன்னொருவன், ‘இப்போதுதான், நான் ஐந்து சோடி எருதுகளை வாங்கியிருக்கிறேன். நான் அவற்றை வேலையில் ஈடுபடுத்திப் பார்க்கப் போகின்றேன். தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
20“மற்றவனோ, ‘இப்போதுதான், நான் திருமணம் செய்து கொண்டேன். எனவே என்னால் வர முடியாது’ என்றான்.
21“அந்த வேலைக்காரன் திரும்பி வந்து, தனது எஜமானிடம் நடந்தவற்றைச் சொன்னான். அப்போது அந்த வீட்டுச் சொந்தக்காரன் கோபமடைந்தான். அவன் தனது வேலைக்காரனிடம், ‘நீ விரைவாய் புறப்பட்டுப் போய், பட்டணத்து வீதிகளிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் அழைத்துக்கொண்டு வா’ என உத்தரவிட்டான்.
22“அந்த வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீர் உத்தரவிட்டபடியே செய்தாயிற்று. ஆனால் இன்னும் இடம் இருக்கின்றது’ என்றான்.
23“அப்போது அந்த எஜமான் தன் வேலைக்காரனிடம், ‘நீ புறப்பட்டுப் போய் நாட்டுப்புறத்தின் தெருக்களிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஆட்களை வற்புறுத்தி உள்ளே கொண்டுவா. அவ்விதமாகவே என் வீடு நிறையட்டும். 24நான் உனக்குச் சொல்கின்றேன், முதலில் அழைக்கப்பட்டவர்களில் ஒருவனாவது எனது விருந்தில் சிறிதளவைக்கூட சுவை பார்க்கப் போவதில்லை’ என்றான்.”
சீடராக விரும்புகின்றவர்களுக்கான சவால்
25மக்கள் பெரும் கூட்டமாய் இயேசுவுடன் போய்க் கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைத் திரும்பிப் பார்த்துச் சொன்னதாவது: 26“ஒருவன் என்னிடம் வந்து, தனது தகப்பனையும் தாயையும், தன் மனைவியையும் பிள்ளைகளையும், தன் சகோதரர்களையும் சகோதரிகளையும் வெறுக்காவிட்டால், ஏன், தனது வாழ்வையும்கூட வெறுக்காவிட்டால், அவன் என் சீடனாய் இருக்க முடியாது. 27ஒருவன் தனது சிலுவையைச் சுமந்துகொண்டு, என்னைப் பின்பற்றாவிட்டால், எனக்குச் சீடனாய் இருக்க முடியாது.
28“உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் அவன் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிப்பதற்குத் தன்னிடம் போதிய பணம் இருக்கின்றதா என்று கணக்குப் பார்க்காமல் இருப்பானோ? 29ஏனெனில், அத்திவாரத்தைப் போட்டுவிட்டு, அதைக் கட்டி முடிக்க அவனால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவனைக் கேலி செய்வார்கள். 30‘இவன் கட்டத் தொடங்கினான். ஆனாலும் இவனால் அதைக் கட்டி முடிக்க முடியவில்லை’ என்பார்கள்.
31“அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் அவன் உட்கார்ந்து, இருபதாயிரம் வீரர்களோடு தன்னை எதிர்த்து வருபவனை, தன்னிடமுள்ள பத்தாயிரம் வீரர்களைக் கொண்டு தோற்கடிக்க முடியுமோ என்று யோசித்துப் பார்க்க மாட்டானோ? 32அவனால் அப்படி முடியாவிட்டால், எதிரி தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, தனது பிரதிநிதிகளை அனுப்பி, சமாதான உடன்பாட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்வான். 33அவ்விதமாகவே, உங்களில் ஒருவன் தன்னிடமுள்ள அனைத்தையும் விட்டுவிடாவிட்டால், எனக்கு சீடனாக இருக்க முடியாது.
34“உப்பு நல்லதே. ஆனால் அது தன் சாரத்தை இழந்து போனால், திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்? 35அது மண்ணுக்கும் நல்லதல்ல அதை உரமாகவும் பாவிக்க முடியாது; அதை வெளியேதான் எறிந்துவிட வேண்டும்.
“காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.

Currently Selected:

லூக்கா 14: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for லூக்கா 14