YouVersion Logo
Search Icon

லூக்கா 8

8
விதைக்கிறவனின் உவமை
1அதன்பின், இயேசு பட்டணம் பட்டணமாக, கிராமம் கிராமமாகப் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். அந்தப் பன்னிரண்டு பேரும் அவருடனே போனார்கள். 2அத்துடன் தீய ஆவிகளின் பிடிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் குணமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பேய்கள் துரத்தப்பட்டிருந்த மகதலேனா என அழைக்கப்பட்ட மரியாளும் அவர்களுடன் இருந்தாள். 3ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசா என்பவனின் மனைவி யோவன்னாளும், சூசன்னாளும் தங்களுடைய வருமானத்திலிருந்து அவர்களுக்கு#8:3 அவர்களுக்கு – சில பிரதிகளில் அவருக்கு என்று உள்ளது. ஆதரவளித்து உதவி செய்த வேறு பல பெண்களும் அவருடன் இருந்தார்கள்.
4பல்வேறு பட்டணங்களிலிருந்து, மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவிடம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர், அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: 5“ஒரு விவசாயி தனது விதைகளை விதைப்பதற்குச் சென்றான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில் சில விதைகள் பாதையருகே விழுந்து மிதியுண்டன, ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. 6சில விதைகள் கற்பாறையின் மேல் விழுந்தன; அவை முளைத்தபோது ஈரம் இல்லாததனால், அப்பயிர்கள் வாடிப் போயின. 7வேறு சில விதைகளோ முட்செடிகளின் இடையே விழுந்தன, அவை முளைத்து வளர்ந்தபோது, முட்களும்கூட வளர்ந்து பயிர்களை மூடி நெருக்கிவிட்டன. 8இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு அதிகமான விளைச்சலைக் கொடுத்தன.”
அவர் இதைச் சொல்லி முடித்த பின்பு, சத்தமாய் அழைத்து, “காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.
9பின்பு அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இந்த உவமையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார்கள். 10அதற்கு அவர், “இறைவனுடைய அரசின் இரகசியம் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்றவர்களுடனோ, நான் உவமைகள் மூலமாகவே பேசுகின்றேன். இதனால் அவர்கள்,
“ ‘கண்டும் அதை அறியாதவர்களாகவும்
கேட்டும் அதை புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.’#8:10 ஏசா. 6:9
11“இந்த உவமையின் அர்த்தமாவது: விதை இறைவனுடைய வார்த்தை. 12பாதையருகே விதைகள் விழுந்ததானது, வார்த்தையைக் கேட்கும் மக்களில் சிலருக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடி பிசாசு வந்து, அவர்களின் இருதயத்திலிருந்து அந்த வார்த்தையை எடுத்து விடுகிறான். 13கற்பாறையின் மேல் விதைகள் விழுந்ததானது, வார்த்தையைக் கேட்கும் மக்களில் வேறு சிலருக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கும்போது மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாலும், வேரற்றவர்களாய் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் சிறிது காலம் விசுவாசிக்கின்றார்கள்; பரீட்சிக்கப்படும் காலத்திலே, விழுந்து போகின்றார்கள். 14முட்செடிகளுக்குள் விதைகள் விழுந்ததானது, வார்த்தையைக் கேட்ட மற்றும் சிலருக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில், தமது சொந்த வழியில் போய்க் கொண்டிருக்கும்போது, வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும் செல்வங்களினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு முதிர்ச்சியடையாது#8:14 முதிர்ச்சியடையாது என்பது நல்ல பழங்களைக் கொடாத மரங்களைப் போல போகின்றார்கள். 15நல்ல நிலத்தில் விதைகள் விழுந்ததானதோ, நற்குணமுள்ள நல்ல உள்ளம் உள்ளவர்களுக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் வார்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொண்டு, விடாமுயற்சியுடன் செயற்பட்டு, பலன் கொடுக்கின்றார்கள்” என்றார்.
தண்டின் மேல் வைக்கப்பட்ட விளக்கு
16“எவரும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பானைக்குள்ளோ அல்லது கட்டிலின் கீழோ மறைத்து வைப்பதில்லை. உள்ளே வருகின்றவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை ஒரு விளக்குத் தண்டின் மேலேயே வைப்பார்கள். 17எனவே, மூடிமறைக்கப்பட்டது எதுவும் வெளிவராமல் இருக்க மாட்டாது. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் தெரியவராமலும், பகிரங்கமாகாமலும் இருக்க மாட்டாது. 18ஆகையால் நீங்கள் கேட்கின்ற விதத்தைக் குறித்து அவதானமாய் இருங்கள். உள்ளவனுக்கு இன்னும் அதிகம் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்தோ, அவன் தன்னிடத்தில் இருக்கின்றதாக நினைத்துக் கொண்டிருப்பதுவும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
இயேசுவின் தாயும் சகோதரர்களும்
19ஒருமுறை இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைப் பார்ப்பதற்கு வந்தார்கள். ஆயினும் மக்கள் திரளாய்க் கூடியிருந்தபடியால், அவர்களால் அவருக்கு அருகே போக முடியவில்லை. 20அப்போது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
21அதற்கு அவர், “இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கின்றவர்களே, என் தாயும் என் சகோதரர்களுமாய் இருக்கின்றார்கள்” என்றார்.
இயேசு புயலை அடக்குதல்
22ஒரு நாள் இயேசு தமது சீடர்களைப் பார்த்து, “ஏரியின் மறுகரைக்குப் போவோம் வாருங்கள்” என்றார். அப்படியே அவர்கள் ஒரு படகில் ஏறிப் புறப்பட்டார்கள். 23அவர்கள் போய்க் கொண்டிருக்கையில், அவர் தூங்கிவிட்டார். அப்போது புயல் காற்று ஏரியின் மேல் வீசியது. படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், அவர்கள் பெரும் ஆபத்துக்குள்ளானார்கள்.
24அப்போது சீடர்கள், இயேசுவிடம் போய் அவரை எழுப்பி, “ஐயா, ஐயா, நாங்கள் மூழ்கப் போகின்றோம்” என்றார்கள்.
அவர் எழுந்து காற்றையும், கொந்தளிக்கும் தண்ணீரையும் கடிந்து கொண்டார்; புயல் தணிந்து, எல்லாம் அமைதியாயிற்று. 25அப்போது அவர் தமது சீடர்களிடம், “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார்.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவர் யாரோ? காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார். அவையும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன” என்று பயத்துடனும் வியப்புடனும் பேசிக்கொண்டார்கள்.
பேய் பிடித்தவன் குணமடைதல்
26அவர்கள் கலிலேயாவின் மறுகரையிலுள்ள, கதரேனருடைய#8:26 கதரேனருடைய – சில மூலபதிவுகளில் கெரசேனர் என்றும் உள்ளது பிரதேசத்திற்குப் படகில் சென்றார்கள். 27இயேசு கரையில் இறங்கியபோது, அந்தப் பட்டணத்திலிருந்து பேய் பிடித்த ஒருவன், அவருக்கு எதிர்ப்பட்டான். அவன், நீண்ட காலமாக உடைகள் உடுத்தாதவனும், வீட்டில் வாழாதவனுமாய், கல்லறைகளிலேயே தங்கியிருந்தான். 28அவன் இயேசுவைக் கண்டபோது, கூச்சலிட்டு அவருடைய பாதத்தில் விழுந்து அவரிடம், “இயேசுவே, அதி உன்னதமான இறைவனின் மகனே, என்னிடமிருந்து உமக்கு என்ன வேண்டும்? நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன், என்னைத் துன்புறுத்த வேண்டாம்” என்று உரத்த சத்தமிட்டுச் சொன்னான். 29ஏனெனில், அவனைவிட்டு வெளியே வரும்படி, இயேசு அந்தத் தீய ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். பல முறை அது அவனை முற்றாகப் பிடித்திருந்தது. அதனால் அவனுடைய கையையும் காலையும் சங்கிலியால் கட்டி, காவலில் வைத்திருந்த போதும்கூட, அவன் சங்கிலிகளை உடைத்து விடுவான். அந்தப் பேய், தனிமையான இடங்களுக்கு அவனை இழுத்துக்கொண்டு போனது.
30இயேசு அவனிடம், “உனது பெயர் என்ன?” என்று கேட்டார்.
அவன் அதற்குப் பதிலாக, “நாங்கள் ஒரு படையணி”#8:30 படையணி – கிரேக்க மொழியில் லேகியோன். இது ரோம இராணுவத்தின் படைப் பிரிவைக் குறிக்கும் ஒரு சொல். இந்த வசனத்தில் இது பெரும் எண்ணிக்கையைக் குறிக்கிறது. என்றான். ஏனெனில், பல பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன. 31அவை அவரிடம், தங்களை பாதாளத்துக்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக் கேட்டன.
32அங்கிருந்த மலைப் பக்கத்திலே, பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. அந்தப் பேய்கள், தாங்கள் அந்தப் பன்றிகளுக்குள்ளே போவதற்கு இயேசு அனுமதிக்க வேண்டும் என்று அவரைக் கெஞ்சிக் கேட்டன. அப்படியே அவர் அவற்றிற்கு அனுமதி கொடுத்தார். 33அப்போது, அந்தப் பேய்கள் அவனைவிட்டு வெளியேறி பன்றிகளுக்குள்ளே புகுந்துகொள்ளவே, அந்தப் பன்றிகள் மலைச்சரிவினூடாக, கூட்டமாய் கீழே விரைந்து ஓடி ஏரியில் விழுந்து மூழ்கின.
34பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பன்றிகளுக்கு நடந்ததைக் கண்டபோது, ஓடிப் போய் பட்டணத்திலுள்ளவர்களுக்கும், நாட்டுப் புறத்திலுள்ளவர்களுக்கும் அதை அறிவித்தார்கள். 35என்ன நடந்தது என அறிவதற்கு மக்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய்களிலிருந்து விடுதலை பெற்றவன் புத்தி தெளிந்தவனாய், உடை அணிந்து, இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்தார்கள். 36சம்பவித்ததைக் கண்டவர்கள், பேய் பிடித்திருந்தவன் எவ்விதமாய் குணமடைந்தான் என்று அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். 37அப்போது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும், தங்களைவிட்டுப் போகும்படி இயேசுவை வேண்டிக் கொண்டார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தார்கள். எனவே, அவர் படகில் ஏறி அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார்.
38பேய்களிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவோடு இணைந்து போக விரும்பி, அவரைக் கெஞ்சிக் கேட்டான். ஆனால் அவரோ அதற்கு மறுத்து, 39“நீ உன் வீட்டிற்குத் திரும்பிப் போய், இறைவன் உனக்கு செய்த எல்லாவற்றையும் எடுத்துக்கூறு” என்றார். அப்படியே அவன் புறப்பட்டு, இயேசு தனக்குச் செய்த எல்லாவற்றையும் பட்டணத்திலுள்ள எல்லோருக்கும் அறிவித்தான்.
இறந்த சிறுமியும் நோயுற்ற பெண்ணும்
40இயேசு திரும்பி வந்தபோது, கூடியிருந்தவர்கள் அவரை வரவேற்றார்கள்; ஏனெனில், அவர்கள் எல்லோரும் அவரை எதிர்பார்த்து, காத்துக் கொண்டிருந்தார்கள். 41அப்போது ஜெபஆலயத் தலைவனான யவீரு என்னும் பெயருடைய ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கெஞ்சினான். 42ஏனெனில், அவனுடைய ஒரே மகளான பன்னிரண்டு வயதுடைய சிறுமி மரணத் தறுவாயில் இருந்தாள்.
இயேசு அவனுடன் போய்க் கொண்டிருக்கையில், ஒன்றுகூடிச் சென்ற மக்கள் அவரை நெருக்கியபடி வந்தார்கள். 43அக்கூட்டத்தில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் தன் சொத்து முழுவதையும் மருத்துவர்களிடம் செலவழித்தும்,#8:43 சில பிரதிகளில் அவள் தன் சொத்து முழுவதையும் மருத்துவர்களிடம் செலவழித்தும் என்ற வசனம் காணப்படுவதில்லை அவளை ஒருவராலும் குணமாக்க முடியவில்லை. 44அவள் அவருக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலாடையின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது.
45அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
எல்லோரும் அதை மறுத்தபோது, பேதுரு அவரிடம், “ஐயா, மக்கள் கூட்டமாய்க் கூடி உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே” என்றான்.
46ஆனால் இயேசுவோ, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டிருக்கிறார்; ஏனெனில், என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிவேன்” என்றார்.
47அப்போது அந்தப் பெண், தான் மறைந்திருக்க முடியாதென்று கண்டு, நடுங்கிக் கொண்டு அவருடைய பாதத்தில் வந்து விழுந்தாள். தான் அவரைத் தொட்ட காரணத்தையும், தான் எவ்விதமாய் உடனடியாக குணமடைந்தாள் என்பதையும் அவள் எல்லா மக்களுக்கும் முன்பாகச் சொன்னாள். 48அப்போது இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, சமாதானத்தோடு போ” என்றார்.
49இயேசு தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவன் யவீருவின் வீட்டில் இருந்து ஒருவன் வந்தான். அவன் யவீருவிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றான்.
50இயேசு இதைக் கேட்டதும் யவீருவிடம், “பயப்பட வேண்டாம்; நம்பிக்கையாயிரு, அவள் குணமடைவாள்” என்றார்.
51அவர் யவீருவினுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது பேதுரு, யோவான், யாக்கோபு மற்றும் அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தவிர, வேறு ஒருவரையும் தன்னுடன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. 52இதற்கிடையில், அங்கிருந்த மக்கள் எல்லோரும் இறந்த சிறுமிக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழுவதை நிறுத்துங்கள். அவள் இறந்து போகவில்லை, தூங்குகிறாள்” என்றார்.
53அவள் இறந்து போனதை அறிந்திருந்த அவர்கள், அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். 54ஆனால் இயேசுவோ அவளுடைய கையைப் பிடித்து, “பிள்ளையே, உயிரோடு எழுந்திரு!” என்றார். 55அப்போது, அவளுடைய உயிர் அவளுக்குள் திரும்பவும் வந்தது. உடனே அவள் எழுந்தாள். இயேசு அவர்களிடம், அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார். 56அவளுடைய பெற்றோர் வியப்படைந்தார்கள். அவர் அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்று கட்டளையிட்டார்.

Currently Selected:

லூக்கா 8: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in