YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 18

18
18 அதிகாரம்
1தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
2மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திருப்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,
3அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
4என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.
5மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
6எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
7அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்.
8பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
9 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:
10உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
11 கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;
12மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம்பண்ணினார்கள்.
13மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
14ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.
15அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.
16அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.
17அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
18நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.
19இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;
20கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
21ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
22அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.
23இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.
24மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
25மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்.
26அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
27பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யாத்திராகமம் 18