YouVersion Logo
Search Icon

மல்கியா 3

3
3 அதிகாரம்
1இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
3அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய்க் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
4அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
5நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்றபிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
6நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
7நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.
8மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.
9நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.
10என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
11பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
12அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள், தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
13நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள்.
14தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?
15இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்? தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரீட்சை பார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.
16அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
17என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.
18அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in