லூக்கா எழுதிய சுவிசேஷம் 24
24
இயேசு உயிர்த்தார்.
(மத்தேயு 28:1-10; 16:1-8; 20:1-10)
1வாரத்தின் முதல் நாளில் அதிகாலைப் பொழுதில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குப் பெண்கள் வந்தார்கள். தாம் தயாரித்த மணமிக்க பொருட்களை அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். 2ஒரு பெருங்கல் கல்லறையின் நுழை வாசலில் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல் உருண்டு போயிருந்ததை அப்பெண்கள் கண்டார்கள். 3அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை. 4அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள். 5அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள். அந்த இரு மனிதரும் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருக்கிற ஒருவரை ஏன் இங்கு தேடுகிறீர்கள்? இது இறந்தோருக்குரிய இடம். 6இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார். 7தீயோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார் எனவும், மூன்றாம் நாளில் மரணத்தின்று எழுவார் எனவும் இயேசு கலிலேயாவில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?” என்றார்கள். 8அப்போது இயேசு கூறியவற்றை அப்பெண்கள் நினைவுகூர்ந்தார்கள்.
9அப்பெண்கள் கல்லறையை விட்டுப் போய், பதினொரு சீஷர்களும், மற்றவர்களும் இருக்கும் இடத்துக்குச் சென்றார்கள். கல்லறையின் அருகே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அப்பெண்கள் அவர்களுக்குக் கூறினார்கள். 10அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர். அப்பெண்கள் நடந்த அனைத்தையும் சீஷர்களுக்குச் சொன்னார்கள். 11அப்பெண்கள் கூறியவற்றை சீஷர்கள் நம்பவில்லை. அது விசித்திரமான பேச்சாக இருந்தது. 12ஆனால் பேதுரு எழுந்து அது உண்மையா எனப் பார்க்கக் கல்லறைக்கு ஓடினான். அவன் உள்ளே பார்த்து இயேசுவின் உடலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டான். இயேசுவைக் காணவில்லை. இயேசு சென்றுவிட்டிருந்தார். நடந்தவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டவனாகப் பேதுரு தனித்திருக்க விரும்பிச் சென்றான்.
எம்மாவூர் சென்ற சீஷர்கள்
(மாற்கு 16:12-13)
13எம்மா என்னும் ஊருக்கு அதே நாள் இயேசுவின் இரண்டு சீஷர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அந்த ஊர் இருந்தது. 14நடந்தவை அனைத்தையும் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். 15அவர்கள் இவற்றை விவாதித்துக்கொண்டிருக்கும்போது இயேசு அருகே வந்து அவர்களோடு நடந்தார். 16(இயேசுவை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து ஏதோ ஒன்றால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள்) 17“நீங்கள், நடக்கும்போது பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் என்ன?” என்று இயேசு கேட்டார்.
இருவரும் நின்றார்கள். அவர்கள் முகங்கள் சோகத்தால் நிரம்பி இருந்தன. 18கிலேயோபாஸ் என்பவன், “கடந்த சில நாட்களாக அங்கே நிகழ்ந்தவற்றை அறியாத மனிதர் எருசலேமில் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என்றான்.
19அவர்களை நோக்கி, இயேசு, “நீங்கள் எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.
அம்மனிதர்கள் அவரை நோக்கி, “நாசரேத்தில் உள்ள இயேசுவைக் குறித்துப் பேசுகிறோம். தேவனுக்கும் மக்களுக்கும் அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசி. அவர் பல ஆற்றல் மிக்க காரியங்களைச் சொல்லியும் செய்தும் வந்திருக்கிறார். 20ஆனால் தலைமை ஆசாரியரும் நம் தலைவர்களும் அவர் நியாயந்தீர்க்கப்பட்டுக் கொல்லப்படுமாறு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். 21இஸ்ரவேல் மக்களை விடுவிப்பவர் இயேசு ஒருவரே என நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடந்துள்ளது. இயேசு கொல்லப்பட்டு மூன்று நாட்களாகிவிட்டன. 22இன்று எங்கள் பெண்களில் சிலர் எங்களுக்குச் சில ஆச்சரியமான தகவல்களைச் சொன்னார்கள். இன்று அப்பெண்கள் அதிகாலையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றார்கள். 23ஆனால் அவரது உடலை அங்கே காணவில்லை. அவர்களுக்கு ஒரு காட்சியில் தரிசனமான இரண்டு தேவதூதர்களைப் பார்த்தார்கள். ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ என அவர்கள் சொன்னார்கள் என்று அப்பெண்கள் வந்து எங்களிடம் சொன்னார்கள். 24அதன் பின்பு எங்களில் சிலரும் கல்லறைக்குச் சென்றார்கள். பெண்கள் சொன்னபடியே இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவைப் பார்க்கவில்லை” என்றார்கள்.
25பின்பு இயேசு இருவரிடமும், “நீங்கள் அறிவற்றவர்கள். உண்மையை மிகவும் தாமதமாக உணர்ந்துகொள்கிறீர்கள். தீர்க்கதரிசிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்பவேண்டும். 26கிறிஸ்து தன் மகிமையில் நுழையும்முன்பு இவ்வாறு துன்புற வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் கூறி இருந்தார்கள்” என்றார். 27பிற்பாடு சுவடிகளில் தன்னைப்பற்றி எழுதிய ஒவ்வொன்றைப்பற்றியும் இயேசு விளக்க ஆரம்பித்தார். மோசேயின் புத்தகங்கள் தொடங்கி தீர்க்கதரிசிகள் வரைக்கும் இயேசுவைக் குறித்துக் கூறியவற்றை அவர் சொன்னார்.
28அவர்கள் எம்மாவூர் என்னும் ஊரை அடைந்தார்கள். தன் பயணத்தைத் தொடர விரும்பியது போல இயேசு நடித்தார். 29ஆனால் அவர்கள் அவர் அங்கே தங்கவேண்டுமென விரும்பினார்கள். அவர்கள் இயேசுவை “எங்களுடன் தங்குங்கள். மிகவும் தாமதமாகிவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது” என்று கெஞ்சிக் கேட்டார்கள். எனவே அவர் அவர்களோடு தங்கச் சென்றார்.
30அவர்களோடு சேர்ந்து இயேசு உணவுண்ண உட்கார்ந்திருந்தார். உணவுக்காக நன்றி சொல்லிவிட்டு, உணவைப் பகிர்ந்தார். 31அப்போது அம்மனிதர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் யார் என அவர்கள் உணர்ந்துகொண்டதும், அவர் மறைந்துவிட்டார். 32இருவரும் தமக்குள்ளாக, “பாதையில் நம்முடன் இயேசு பேசிக்கொண்டு வந்தபோது ஏதோ எரிவதுப்போல் ஓர் உணர்வு இதயத்தில் எழுந்தது. வேதாகமத்தின் பொருளை அவர் விளக்கியபோது மிகவும் பரவசமாக இருந்தது” என்று பேசிக்கொண்டார்கள்.
33பின்பு அவர்கள் எழுந்து திரும்பி எருசலேமை நோக்கிச் சென்றார்கள். எருசலேமில் இயேசுவின் சீஷர்கள் ஒன்றாகக் கூடியிருக்கக் கண்டார்கள். பதினொரு சீஷர்களும் அவர்களோடிருந்த மக்களும் 34“மரணத்தினின்று உண்மையாகவே அவர் மீண்டும் எழுந்தார்” சீமோனுக்கு (பேதுருவுக்கு) அவர் காட்சியளித்தார் என்றார்கள்.
35அப்போது பாதையில் நடந்த விஷயங்களை இரு மனிதர்களும் கூறினார்கள். உணவைப் பங்கிட்டபோது எவ்வாறு இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள் எனச் சொன்னார்கள்.
சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி
(மத்தேயு 28:16-20; மாற்கு 16:14-18; யோவான் 20:19-23; அப்போ. 1:6-8)
36அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார்.
37சீஷர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் பயந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு ஆவியைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எண்ணினார்கள். 38ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்? 39என் கைகளையும் என் பாதங்களையும் பாருங்கள். உண்மையாகவே நான்தான். என்னைத் தொடுங்கள். எனக்கு உயிருள்ள உடல் இருப்பதைப் பார்க்க முடியும். ஓர் ஆவி இப்படிப்பட்ட உடல் கொண்டிருக்காது” என்றார்.
40இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார். 41சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். எனினும் கூட தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களை நோக்கி இயேசு, “உங்களிடம் இங்கே ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார். 42அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள். 43சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார்.
44அவர்களை நோக்கி இயேசு, “நான் உங்களோடு இருந்த காலத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும், தீர்க்கதரிசிகளின் நூற்களிலும், சங்கீதத்திலும் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற அனைத்தும் நடந்தேயாக வேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார்.
45பின்பு இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தன்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார். 46பிறகு அவர்களை நோக்கி, “கிறிஸ்து கொல்லப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து எழுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. 47-48நீங்கள் நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அதைச் செய்தால் அவர்கள் தேவனால் மன்னிக்கப்படுவர். எருசலேமிலிருந்து நீங்கள் புறப்பட்டு என் பெயரில் இவற்றைப் போதிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தி கூறப்பட வேண்டும். 49கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார்.
இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்
(மாற்கு 16:19-20; அப்போ. 1:9-11)
50எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். 52சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். 53தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் தேவாலயத்தில் தங்கி இருந்தார்கள்.
S'ha seleccionat:
லூக்கா எழுதிய சுவிசேஷம் 24: TAERV
Subratllat
Comparteix
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International