யோவான் 4

4
சமாரிய பெண்ணும் இயேசுவும்
1யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கின்றார் எனப் பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள். 2அந்தச் செய்தியை பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள் என்பதை இயேசு#4:2 இயேசு – சில பிரதிகளில் ஆண்டவர் என்றுள்ளது. அறிந்தபோது யூதேயாவைவிட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார். 3(ஆயினும் உண்மையில் ஞானஸ்நானம் கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடர்களே அதைச் செய்தார்கள்.)
4அவர் சமாரியா வழியாகப் போக வேண்டியிருந்தது. 5எனவே, அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு, தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தினருகே இருந்தது. 6அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு பிரயாணத்தினால் களைப்படைந்தவராய், கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்போது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.
7அவ்வேளையில், சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் அள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார். 8அப்போது அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்காக பட்டணத்திற்குள் போயிருந்தார்கள்.
9அந்தச் சமாரியப் பெண் அவரிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர்கள் சமாரியருடன் பழகுவதில்லை.
10அதற்கு இயேசு, “நீ இறைவனுடைய கொடையையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். அவர் உனக்கு வாழ்வளிக்கும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்று பதிலளித்தார்.
11அப்போது அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் அள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கின்றது. வாழ்வளிக்கும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்? 12எங்களுடைய தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இதிலிருந்து அவரும், அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள்.
13இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கின்ற ஒவ்வொருவனுக்கும் மீண்டும் தாகமெடுக்கும். 14ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கின்றவனுக்கோ ஒருபோதும் தாகம் எடுக்காது. உண்மையாகவே, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர், அவனுக்குள்ளே ஒரு நீரூற்றாய், நித்திய வாழ்வு வரை ஊற்றெடுக்கும்” என்றார்.
15அந்தப் பெண் அவரிடம், “ஐயா, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்; அப்போது நான் இனிமேல் தாகமடைய மாட்டேன். தண்ணீர் அள்ளுவதற்கு நான் இங்கு வரவேண்டிய அவசியமும் ஏற்படாது” என்றாள்.
16அப்போது அவர் அவளிடம், “நீ போய், உன் கணவனை அழைத்துக்கொண்டு வா” என்றார்.
17அதற்கு அவள், “எனக்குக் கணவன் இல்லை” என்றாள்.
இயேசு அவளிடம், “உனக்குக் கணவன் இல்லை என்று நீ சொல்வது சரிதான். 18ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்போது உன்னுடன் வாழ்கின்றவனும் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார்.
19அப்போது அந்தப் பெண், “ஐயா, நீர் ஒரு இறைவாக்கினர் என்பது எனக்குப் புரிகின்றது. 20சமாரியர்களான எங்களது முற்பிதாக்கள் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, எருசலேமிலேயே வழிபட வேண்டும் என்று சொல்கின்றீர்கள்” என்றாள்.
21அதற்கு இயேசு: “பெண்ணே, நீ என்னை நம்பு. நீங்கள் பிதாவை இந்த மலையிலும் எருசலேமிலும் வழிபடாத ஒரு காலம் வருகின்றது. 22சமாரியராகிய நீங்களோ அறியாததையே வழிபடுகின்றீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே வழிபடுகின்றோம். ஏனெனில், யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது. 23ஆனால், உண்மையாய் வழிபடுகின்றவர்கள், பிதாவை ஆவியிலும் உண்மையிலும் வழிபடும் ஒரு காலம் வருகின்றது, அது இப்பொழுதே வந்துவிட்டது. ஏனெனில், அவ்விதம் தன்னை வழிபடுகின்றவர்களையே பிதா தேடுகிறார். 24இறைவன் ஆவியாய் இருக்கின்றார். அவரை வழிபடுகின்றவர்கள், ஆவியிலும் உண்மையிலும் அவரை வழிபட வேண்டும்” என்றார்.
25அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வரவிருகின்றார். அவர் வரும்போது, எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
26அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகின்ற நானே அவர்” என்று அறிவித்தார்.
சீடர்கள் இயேசுவிடம் திரும்பி வருதல்
27அப்போது அவருடைய சீடர்கள் திரும்பி வந்து, அவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் யாரும் அவரிடம், “உமக்கு என்ன தேவை?” என்றோ “நீர் ஏன் அவளுடன் பேசுகின்றீர்?” என்றோ கேட்கவில்லை.
28அப்போது அந்தப் பெண் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு, பட்டணத்திற்குள்ளே போய் அங்குள்ள மக்களிடம், 29“வாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒருவரை வந்து பாருங்கள். ஒருவேளை அவர்தான் மேசியாவோ?” என்றாள். 30அவர்கள் பட்டணத்தைவிட்டு வெளியேறி, அவர் இருந்த இடத்திற்கு வந்தார்கள்.
31இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, உணவு அருந்துங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
32அதற்கு அவர் அவர்களிடம், “நான் உண்பதற்கு, நீங்கள் அறியாத உணவு என்னிடம் இருக்கின்றது” என்றார்.
33அப்போது அவருடைய சீடர்கள், “யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்து கொடுத்திருப்பார்களோ?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
34இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவாகும். 35‘இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதன்பின் அறுவடை வந்து விடும்’ என்று, நீங்கள் சொல்வதில்லையா? நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் உங்கள் கண்களை ஏறெடுத்து வயல்களை நோக்கிப் பாருங்கள்! அவை விளைந்து, அறுவடைக்கு ஆயத்தமாய் இருக்கின்றன. 36இப்போதும், அறுவடை செய்பவன் தன் கூலியைப் பெற்று, இப்பொழுதே நித்திய வாழ்வுக்கான விளைச்சலையும் அறுவடை செய்கின்றான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கின்றவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். 37இவ்விதம், ‘ஒருவன் விதைக்கிறான், இன்னொருவன் அறுவடை செய்கின்றான்’ என்ற பழமொழியும் உண்மையாகிறது. 38நீங்கள் வேலை செய்து பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் கடுமையாய் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்தீர்கள்” என்றார்.
சமாரியர்களில் பலர் இயேசுவை விசுவாசித்தல்
39அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர்களில் அநேகர், இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் இவர் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக் குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள். 40எனவே அந்தச் சமாரியர்கள் அவரிடம், தங்களுடன் வந்து தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அவர் அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கினார். 41அவருடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள்.
42அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நீ சொன்னதைக் கேட்டு நாங்கள் அவரை நம்ப வேண்டியதில்லை, அவர் சொன்னவற்றை நாங்களே இப்போது கேட்டோம். உண்மையிலேயே இவர் உலகத்தின் இரட்சகர் என்பதை அறிந்து கொண்டோம்” என்றார்கள்.
அதிகாரியின் மகன் குணமடைதல்
43இரண்டு நாட்களின் பின் இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். 44ஒரு இறைவாக்கினனுக்கு தனது சொந்த ஊரிலே மதிப்பு இல்லை என்று இயேசு தாமே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். 45அவர் கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். பஸ்கா பண்டிகையின்போது, அவர் எருசலேமில் செய்ததையெல்லாம் கலிலேயர்கள் கண்டிருந்தார்கள். ஏனெனில் பண்டிகையின்போது அவர்களும் அங்கே இருந்தார்கள்.
46இயேசு திரும்பவும் ஒருமுறை, கலிலேயாவிலுள்ள கானாவூருக்குச் சென்றார். அங்கேதான், முன்பு அவர் தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியிருந்தார். அப்போது ஒரு அரச அதிகாரியின் மகன் கப்பர்நகூம் என்ற ஊரிலே நோயுற்று இருந்தான். 47இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று இந்த அதிகாரி கேள்விப்பட்டதும், அவன் அவரிடம் சென்று, மரணத் தறுவாயில் இருக்கும் தனது மகனை இயேசு வந்து குணமாக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டான்.
48இயேசு அவனிடம், “நீங்கள் அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் கண்டாலொழிய, ஒருபோதும் விசுவாசிக்க மாட்டீர்கள்” என்றார்.
49அதற்கு அந்த அரச அதிகாரி, “ஐயா, எனது பிள்ளை மரணிக்கும் முன்னே வாருங்கள்” என்றான்.
50இயேசு அதற்குப் பதிலாக, “நீ திரும்பிப் போ. உன் மகன் உயிர் பிழைப்பான்” என்றார்.
அந்த மனிதன் இயேசுவின் வார்த்தையை நம்பி, புறப்பட்டுச் சென்றான். 51அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே அவனுடைய வேலைக்காரர் அவனைச் சந்தித்து, அவனுடைய மகன் குணமடைந்து உயிர் பிழைத்தான் என்ற செய்தியை அவனுக்கு அறிவித்தார்கள். 52தனது மகன் குணமடைந்த நேரத்தைப்பற்றி அவன் விசாரித்தபோது, அவர்கள் அவனிடம், “நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு, அவனுக்கிருந்த காய்ச்சல் நீங்கியது” என்றார்கள்.
53இயேசு தன்னிடம், “உனது மகன் உயிர் பிழைப்பான்” என்று சொன்னதும், சரியாக அதே நேரம்தான் என்று, தகப்பன் புரிந்து கொண்டான். எனவே அவனும் அவனுடைய குடும்பத்தாரும் இயேசுவை விசுவாசித்தார்கள்.
54இது இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பின் செய்த இரண்டாவது அற்புத அடையாளம் ஆகும்.

S'ha seleccionat:

யோவான் 4: TRV

Subratllat

Comparteix

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió