யோவான் 7

7
கூடாரப் பண்டிகை
1இதற்குப் பின்பு, இயேசுவைக் கொலை செய்வதற்கு யூதத் தலைவர்கள் வழி தேடிக் கொண்டிருந்ததால், அவர் யூதேயாவுக்குப் போக விரும்பாமல், கலிலேயாவுக்குள் பயணம் செய்து கொண்டிருந்தார். 2ஆயினும், யூதரின் வழிபாட்டுக் கூடாரப் பண்டிகை சமீபித்தபோது, 3இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், “நீர் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, யூதேயாவுக்குச் செல்லும். அப்பொழுதே நீர் செய்யும் செயல்களை, உமது சீடர்கள் காண்பார்கள். 4பிரபலமடைய விரும்புகின்ற எவனும் இரகசியமாக செயல்படுவதில்லை. நீரோ இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதனால், நீர் உம்மை உலகத்துக்கு வெளிப்படுத்தும்” என்றார்கள். 5ஏனெனில், அவருடைய சொந்தச் சகோதரர்களும் அவரை விசுவாசிக்கவில்லை.
6எனவே இயேசு அவர்களிடம், “எனது நேரம் இன்னும் வரவில்லை; ஆனால் உங்களுக்கோ எந்த நேரமும் ஏற்ற நேரமே. 7உலகம் உங்களை வெறுக்க முடியாது. ஆனால், அது என்னையே வெறுக்கிறது. ஏனெனில், உலகத்தின் செயல்கள் தீமையென்று நான் சாட்சி கொடுக்கின்றேன். 8இந்தப் பண்டிகைக்கு நீங்கள் போங்கள். நானோ இந்தப் பண்டிகைக்கு இப்போது போகப் போவதில்லை. ஏனெனில் எனக்கேற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார். 9இதைச் சொல்லிவிட்டு, அவர் கலிலேயாவிலேயே தங்கியிருந்தார்.
10ஆயினும் அவருடைய சகோதரர்கள் பண்டிகைக்குப் போன பின், அவரும் சென்றார். பகிரங்கமாக அல்ல, இரகசியமாகவே சென்றார். 11அந்தப் பண்டிகையிலே, யூதர்கள் அவரைத் தேடிக்கொண்டு, “அவர் எங்கே?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
12கூடியிருந்த மக்களுக்கிடையில் அவரைக் குறித்து கருத்து வேறுபாடு இருந்தது. சிலர், “அவர் ஒரு நல்ல மனிதர்” என்றார்கள்.
மற்றவர்களோ, “அப்படியல்ல, அவன் மக்களை ஏமாற்றுகிறான்” என்றார்கள். 13ஆயினும், அவர்கள் யூதருக்குப் பயந்ததனால், ஒருவரும் அவரைப்பற்றி பகிரங்கமாக எதையும் பேசவில்லை.
இயேசு பண்டிகையில் போதித்தல்
14பண்டிகையின் பாதி நாட்கள் முடிந்தபோது, இயேசு ஆலய முற்றத்திற்குப் போய் அங்கே போதிக்கத் தொடங்கினார். 15யூதரோ வியப்படைந்து, “படிக்காமலே இந்த மனிதனுக்கு, இவ்வளவு அறிவு எப்படி வந்தது?” என்று கேட்டார்கள்.
16இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “எனது போதனை என்னுடையது அல்ல, அது என்னை அனுப்பியவரிடமிருந்தே வருகின்றது. 17இறைவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறவன் எவனும், எனது போதனை இறைவனிடமிருந்து வருகின்றதா, அல்லது நான் என் சுயமாய் சொல்கின்றேனா என்பதை அறிந்துகொள்வான். 18தனது சுய சிந்தனையில் பேசுகின்றவன், தனக்கே மகிமையைத் தேட முயற்சிக்கிறான். ஆனால் தம்மை அனுப்பியவரின் மகிமைக்காகச் செயல்படுகின்றவன், உண்மையுள்ள மனிதனாய் இருக்கின்றான்; அவனில் பொய் எதுவுமில்லை. 19மோசே உங்களுக்கு நீதிச்சட்டத்தைக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும், உங்களில் ஒருவனும் நீதிச்சட்டத்தைக் கைக்கொள்வதில்லை. நீங்கள் ஏன் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறீர்கள்?” என்றார்.
20அப்போது கூடியிருந்த கூட்டம், “நீ பேய் பிடித்தவன். யார் உன்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?” என்றார்கள்.
21இயேசு அவர்களிடம், “நான் ஒரு அற்புதத்தையே#7:21 அற்புதத்தையே – கிரேக்க மொழியில் வேலை என்றுள்ளது. செய்தேன். அதனால் நீங்கள் எல்லோரும் வியப்படைந்திருக்கிறீர்கள். 22விருத்தசேதனத்தை மோசே உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். நீங்கள் ஓய்வுநாளிலும், ஒருவனுக்கு விருத்தசேதனம் செய்கின்றீர்கள். (உண்மையில் விருத்தசேதனம் மோசேக்கு முன்னரே, யூதர்களின் முற்பிதாக்களின் காலத்திலிருந்து வருகின்றது.) 23மோசேயின் நீதிச்சட்டம் மீறப்படாதபடி, ஒருவன் ஓய்வுநாளில் விருத்தசேதனம் பண்ணப்படலாம் என்கிறீர்கள். அப்படியானால், ஓய்வுநாளிலே ஒரு மனிதனை முழுவதும் குணமாக்கிய என்மேல் ஏன் கோபம்கொள்கின்றீர்கள்? 24வெளித் தோற்றத்தின்படி நியாயத்தீர்ப்பு செய்வதை நிறுத்துங்கள். நீதியாய் நியாயத்தீர்ப்பு செய்யுங்கள்” என்றார்.
இயேசுதான் மேசியாவா?
25அப்போது எருசலேமைச் சேர்ந்த மக்களில் சிலர், “இவரையல்லவா அவர்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்? 26இதோ இங்கே இவர் பகிரங்கமாய் பேசுகின்றார். அவர்கள் இவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாதிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரத்தில் உள்ளவர்கள், இவர்தான் மேசியா என்று உண்மையாய் அறிந்து கொண்டார்களோ? 27ஆயினும் இந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று நமக்குத் தெரியும்; ஆனால் மேசியா வரும்போது, அவர் எங்கிருந்து வருகின்றார் என்று ஒருவனும் அறிய மாட்டானே” என்று பேசத் தொடங்கினார்கள்.
28அப்போது ஆலய முற்றத்தில் தொடர்ந்து போதித்துக் கொண்டிருந்த இயேசு, சத்தமாய் சொன்னதாவது, “ஆம்! நீங்கள் என்னை அறிவீர்கள். நான் எங்கிருந்து வந்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் என் சுயவிருப்பத்தின்படி வரவில்லை. ஆயினும், என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவர். நீங்களோ அவரை அறியவில்லை. 29நானோ அவரை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவரிடமிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பியவர்” என்றார்.
30அப்போது அவர்கள் அவரைக் கைது செய்ய முயன்றார்கள். ஆனாலும் ஒருவரும் அவர்மீது கைவைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. 31ஆயினும் கூடியிருந்த மக்களில் பலர், அவர்மீது விசுவாசம் வைத்தார்கள். அவர்கள், “மேசியா வரும்போது, இவர் செய்ததைப் பார்க்கிலும் அதிகமான அற்புத அடையாளங்களை மேசியா செய்வாரோ?” என்றார்கள்.
32கூடியிருந்த மக்கள் அவரைக் குறித்து இப்படிப்பட்ட காரியங்களை தங்களுக்குள் மெதுவாய் பேசிக்கொண்டதை பரிசேயர்கள் கேட்டார்கள். எனவே தலைமை மதகுருக்களும், பரிசேயரும் அவரைக் கைது செய்யும்படி, ஆலயக் காவலரை அனுப்பினார்கள்.
33அப்போது இயேசு, “இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். பின்பு என்னை அனுப்பியவரிடம் நான் போய் விடுவேன். 34நீங்களோ என்னைத் தேடுவீர்கள். ஆயினும் என்னைக் காண மாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கும் உங்களால் வர முடியாது” என்றார்.
35அப்போது யூதர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, இவன் எங்கு போக இருக்கின்றான்? கிரேக்கருக்குள்ளே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களிடம் போய், அங்கே கிரேக்கருக்குப் போதிக்க போகின்றானா? 36‘நீங்களோ என்னைத் தேடுவீர்கள், ஆயினும் என்னைக் காண மாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வர முடியாது’ என்று சொல்கின்றானே. அதன் அர்த்தம் என்ன?” என்று பேசிக்கொண்டார்கள்.
37பண்டிகையின் கடைசி நாளான, அந்த முக்கியமான நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “எவனாவது தாகமுள்ளவனாய் இருந்தால், அவன் என்னிடம் வந்து பானம் அருந்தட்டும். 38வேதவசனத்தில் சொல்லியிருக்கின்றபடி, என்னை விசுவாசிக்கின்றவனுடைய உள்ளத்திலிருந்து, வாழ்வளிக்கும் தண்ணீரானது நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார். 39தம்மில் விசுவாசமாய் இருக்கின்றவர்கள், பின்னர் பெறப் போகின்ற பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே அவர் இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமையடையாது இருந்தபடியால், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை.
40அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களில் சிலர், “உண்மையிலேயே இவர் வர இருக்கின்ற இறைவாக்கினரே” என்றார்கள்.
41வேறு சிலரோ, “இவரே மேசியா” என்றார்கள்.
ஆனால் இன்னும் சிலர், “மேசியா எப்படி கலிலேயாவிலிருந்து வர முடியும்?” என்று கேட்டார்கள். 42“மேசியா தாவீதின் குடும்பத்திலிருந்தும், தாவீது வாழ்ந்த பெத்லகேம் பட்டணத்தில் இருந்தும் வருவார் என்று வேதவசனம் சொல்கின்றது அல்லவா?” என்றார்கள். 43இவ்வாறு இயேசுவின் பொருட்டு மக்கள் கருத்து வேறுபட்டார்கள். 44சிலர் அவரைக் கைது செய்ய விரும்பினார்கள். ஆனாலும் ஒருவரும் அவர்மீது கைவைக்கவில்லை.
யூத தலைவர்களின் அவிசுவாசம்
45பின்பு ஆலயக் காவலர், தலைமை மதகுருக்களிடமும் பரிசேயரிடமும் திரும்பி வந்தபோது, “நீங்கள் ஏன் அவனைப் பிடித்துக் கொண்டுவரவில்லை?” என்று ஆலயக் காவலரிடம் கேட்டார்கள்.
46அவர்கள் அதற்கு மறுமொழியாக, “அந்த மனிதன் பேசியது போல், ஒருவனும் ஒருபோதும் பேசியதில்லையே” என்றார்கள்.
47அப்போது பரிசேயர்கள் அவர்களிடம், “அவன் உங்களையும் ஏமாற்றிவிட்டானா? 48ஆளுநர்களில் எவராவது, அல்லது பரிசேயரைச் சேர்ந்த எவராவது அவனை விசுவாசிக்கின்றார்களா? 49இல்லையே! ஆனால் இந்த மக்களோ நீதிச்சட்டத்தை அறியாதவர்கள். இவர்கள் மேல் சாபம் உண்டு” என்றார்கள்.
50முன்பு இயேசுவிடம் போயிருந்தவனும், பரிசேயரைச் சேர்ந்தவனுமான நிக்கொதேமு அவர்களிடம், 51“ஒருவன் என்ன செய்கின்றான் என்று அறியும்படி முதலில் அவனை விசாரிக்காமல், அவனுக்கு நமது நீதிச்சட்டம் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கின்றதா?” என்று கேட்டான்.
52அதற்கு அவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவைச் சேர்ந்தவனா? வேதவசனத்தை ஆராய்ந்து பார். கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் எவரும் வருவதில்லை என்பதை அப்போது கண்டுகொள்வாய்” என்றார்கள்.
53பின்பு ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.#7:53 சில மூலபிரதிகளில் 7:53–8:11 ஆம் வசன பகுதி காணப்படுவதில்லை.

S'ha seleccionat:

யோவான் 7: TRV

Subratllat

Comparteix

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió