மத்தேயு 1

1
இயேசுவின் வம்ச வரலாறு
1ஆபிரகாமின் மகனான, தாவீதின் மகன் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் பெயர் அட்டவணை:
2ஆபிரகாம், ஈசாக்கின் தகப்பன்.
ஈசாக்கு, யாக்கோபின் தகப்பன்.
யாக்கோபு, யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்.
3யூதா, பாரேஸ் மற்றும் சாராவின் தகப்பன். அவர்களின் தாய் தாமார்.
பாரேஸ், எஸ்ரோமின் தகப்பன்.
எஸ்ரோம், ஆராமின் தகப்பன்.
4ஆராம், அம்மினதாபின் தகப்பன்.
அம்மினதாப், நகசோனின் தகப்பன்.
நகசோன், சல்மோனின் தகப்பன்.
5சல்மோன், போவாஸின் தகப்பன். போவாஸினுடைய தாய் ராகாப்.
போவாஸ், ஓபேத்தின் தகப்பன். ஓபேத்தினுடைய தாய் ரூத்,
ஓபேத், ஈசாயின் தகப்பன்.
6ஈசாய், தாவீது அரசனின் தகப்பன்.
தாவீது, சாலொமோனின் தகப்பன். சாலொமோனுடைய தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள்.
7சாலொமோன், ரெகொபெயாமின் தகப்பன்.
ரெகொபெயாம், அபியாவின் தகப்பன்.
அபியா, ஆஷாவின் தகப்பன்.
8ஆஷா, யோசபாத்தின் தகப்பன்.
யோசபாத், யோராமின் தகப்பன்.
யோராம், உசியாவின் தகப்பன்.
9உசியா, யோதாமின் தகப்பன்.
யோதாம், ஆகாஸின் தகப்பன்.
ஆகாஸ், எசேக்கியாவின் தகப்பன்.
10எசேக்கியா, மனாசேயின் தகப்பன்.
மனாசே, ஆமோனின் தகப்பன்.
ஆமோன், யோசியாவின் தகப்பன்.
11யோசியா, எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
12பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட பின்:
எகோனியா, சலாத்தியேலின் தகப்பன்.
சலாத்தியேல், சொரொபாபேலின் தகப்பன்.
13சொரொபாபேல், அபியூத்தின் தகப்பன்.
அபியூத், எலியாக்கீமின் தகப்பன்.
எலியாக்கீம், ஆசோரின் தகப்பன்.
14ஆசோர், சாதோக்கின் தகப்பன்.
சாதோக், ஆகீமின் தகப்பன்.
ஆகீம், எலியூத்தின் தகப்பன்.
15எலியூத், எலியேசரின் தகப்பன்.
எலியேசர், மாத்தானின் தகப்பன்.
மாத்தான், யாக்கோபின் தகப்பன்.
16யாக்கோபு, யோசேப்பின் தகப்பன். யோசேப்பு, மரியாளின் கணவன். மரியாளிடம் கிறிஸ்து#1:16 கிறிஸ்து – கிரேக்க மொழியில் “கிறிஸ்து” என்பதற்கும் எபிரேய மொழியில் “மேசியா” என்பதற்கும் அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும் எனப்படுகின்ற இயேசு பிறந்தார்.
17இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீது வரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும் வரை பதினான்கு தலைமுறைகளும், நாடு கடத்தப்பட்டதிலிருந்து கிறிஸ்து வரையிலும், பதினான்கு தலைமுறைகளும் இருந்தன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: அவரது தாய் மரியாள், யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேரும் முன்பே, அவள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து உருவான ஒரு குழந்தையைச் சுமக்கிறாள் எனத் தெரியவந்தது. 19அவளது கணவன் யோசேப்பு, நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன் பகிரங்கமாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக ரத்துச் செய்துவிட நினைத்தான்.
20அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனே, யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதைக் குறித்துப் பயப்படாதே; ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியானவரினால் உருவான ஒரு குழந்தையைச் சுமக்கிறாள். 21அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு ‘இயேசு’#1:21 இயேசு என்பதன் பொருள் இரட்சிக்கிறவர் அல்லது இரட்சகர் எனப்படும். என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களது பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான்.
22கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாய் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன: 23“ஒரு கன்னிப்பெண் கருவுற்று ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுவேல் என அழைப்பார்கள்.”#1:23 ஏசா. 7:14 இம்மானுவேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்முடன் இருக்கின்றார்” என்பதே.
24யோசேப்பு தூக்கம் கலைந்து எழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றான். 25ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் வரை, யோசேப்பு அவளுடன் தாம்பத்திய உறவுகொள்ளவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு எனப் பெயரிட்டான்.

Subratllat

Comparteix

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió