மத்தேயு 17

17
இயேசுவின் மகிமையான தோற்றம்
1ஆறு நாட்களின் பின் பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்முடன் தனியாக அழைத்துக்கொண்டு இயேசு உயரமான ஒரு மலைக்குச் சென்றார். 2அங்கே அவர்களுக்கு முன்பாக அவருடைய தோற்றம் மாறி, அவருடைய முகம் சூரியனைப் போல் பிரகாசித்தது. அவருடைய உடைகள் வெளிச்சத்தைப் போல் வெண்மையாக மாறின. 3திடீரென எலியாவும் மோசேயும் அங்கு தோன்றி, இயேசுவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
4அப்போது பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக, நான் மூன்று கூடாரங்களை அமைக்கிறேன்” என்றான்.
5அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, இதோ பிரகாசமுள்ள ஒரு மேகம் அவர்களை மூடிக்கொண்டது. மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர்தான் என் அன்பு மகன், இவரில் நான் பெருமகிழ்ச்சியாய் இருக்கின்றேன். இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று சொன்னது.
6சீடர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் பயமடைந்து, தரையில் முகங்குப்புற விழுந்தார்கள். 7ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார். 8அவர்கள் தலை நிமிர்ந்து உற்றுப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லை.
9அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்போது, இயேசு அவர்களிடம், “மனுமகன் மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்படும் வரை, நீங்கள் கண்ட இந்த தரிசனத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
10சீடர்கள் அவரிடம், “அப்படியானால் முதலாவது எலியா வர வேண்டும் என்று நீதிச்சட்ட ஆசிரியர்கள் சொல்கின்றார்களே, அது ஏன்?” என்று கேட்டார்கள்.
11இயேசு அதற்குப் பதிலாக, “நிச்சயமாகவே எலியா வந்து எல்லாவற்றையும், சீர்படுத்தி முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. 12ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவர்கள் அவரை யாரென்று அறிந்துகொள்ளாமல் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அதைப்போலவே, மனுமகனும் அவர்களுடைய கைகளில் துன்பப்படப் போகின்றார்” என்று சொன்னார். 13அப்போது சீடர்கள், அவர் யோவான் ஸ்நானகனைப் பற்றியே பேசுகின்றார் என விளங்கிக் கொண்டார்கள்.
பேய் பிடித்தவன் குணமடைதல்
14மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழந்தாழிட்டு, 15“ஆண்டவரே, எனது மகன்மீது இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் விழுந்து விடுகிறான். 16நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான்.
17அப்போது இயேசு, “விசுவாசமில்லாத, இறைவழிக்கு மாறுபட்டு நடக்கும் தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைச் சகித்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். 18இயேசு அந்த சிறுவனைப் பிடித்திருந்த பேயை அதட்டினார், அது அவனைவிட்டு வெளியேறியது. அந்த வினாடியே அவன் குணமடைந்தான்.
19அப்போது சீடர்கள் இயேசுவிடம் தனிமையில் வந்து, “ஏன் அதை எங்களால் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
20அதற்கு அவர், “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் காரணம். உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்களுக்குக் கடுகு விதையளவு விசுவாசம் இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்ல முடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது. 21ஆயினும் இவ்விதமான பேய், ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியேறாது” என்றார்.#17:21 சில மூலபிரதிகளில் இந்த வசனம் காணப்படுவதில்லை. மாற். 9:29
இயேசு தமது மரணத்தை இரண்டாம் முறை அறிவிக்கிறார்
22அவர்கள் கலிலேயாவிலே ஒன்றுகூடி வந்தபோது இயேசு அவர்களிடம், “மனுமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு, மனிதருடைய கைகளிலே ஒப்புக்கொடுக்கப்படுவார். 23அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே அவர் உயிருடனே எழுப்பப்படுவார்” என்று சொன்னார். அப்போது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள்.
ஆலய வரி
24இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது, ஆலய வரியாக இரண்டு வெள்ளி நாணயங்களை#17:24 வெள்ளி நாணயங்களை – திராக்மா என அழைக்கப்பட்டது. ஒரு திராக்மா ஒரு நாள் கூலிக்குச் சமம் சேகரிக்கின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள்.
25“ஆம் செலுத்துவார்” என அவன் பதிலளித்தான்.
பின்பு பேதுரு வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசத் தொடங்குவதற்கு முன் இயேசு அவனிடம், “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார்.
26“அந்நியர்களிடமிருந்து” என பேதுரு பதில் சொன்னான்.
அப்போது இயேசு, “அப்படியானால் சொந்த மக்கள் அதற்கு உட்பட்டவர்களல்ல. 27ஆனாலும் நாம் அவர்கள் கோபம் அடையாதபடி, கடலுக்குப் போய் தூண்டிலைப் போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத் திற, அதற்குள் ஒரு வெள்ளி நாணயத்தைக்#17:27 ஒரு வெள்ளி நாணயத்தைக் – பிற்காலத்தில் நான்கு திராக்மாவுக்கு சமமாகக் கருதப்பட்டது. காண்பாய். அதை எடுத்து எனக்கும் உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு” என்றார்.

Subratllat

Comparteix

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió