ஆதி 2
2
அத்தியாயம் 2
ஓய்வுநாள்
1இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. 2தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். 3தேவன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதாமும் ஏவாளும்
4தேவனாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. 5நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை. 6அப்பொழுது பூமியிலிருந்து நீரூற்று #2:6 மூடுபனிஎழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. 7தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான். 8தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார். 9தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார். 10தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது. 11முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு. 12அந்த தேசத்தின் பொன் நல்லது; அந்த இடத்திலே நறுமணப்பிசினும், விலையேறிய முத்துகளும்#2:12 கோமேதக கல்லும் உண்டு உண்டு. 13ஆற்றுக்கு கீகோன் என்று பெயர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
தேவன் கொடுத்த தண்டனை
14மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர். 15தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். 16தேவனாகிய யெகோவா மனிதனை நோக்கி: “நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம். 17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவேண்டாம்; அதை நீ சாப்பிடும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டார். 18பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார். 19தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது. 20அப்படியே ஆதாம்#2:20 மனிதன் அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. 21அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
22தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார். 23அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான். 24இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள். 25ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
Právě zvoleno:
ஆதி 2: IRVTam
Zvýraznění
Sdílet
Kopírovat
Chceš mít své zvýrazněné verše uložené na všech zařízeních? Zaregistruj se nebo se přihlas
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.