Logo YouVersion
Ikona vyhledávání

மத்தேயு 9

9
இயேசு முடக்குவாதக்காரனைக் குணமாக்குதல்
1இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார். 2அப்போது சிலர், முடக்குவாதமுடைய ஒருவனை படுக்கையோடு அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார்.
3இதைக் கேட்ட சில நீதிச்சட்ட ஆசிரியர்கள், “இந்த மனிதன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
4அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் தீயவைகளைச் சிந்திக்கிறீர்கள்? 5‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது இலகுவானது? 6ஆனாலும் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை, நீங்கள் அறிய வேண்டும்” என்றார். பின்பு அவர் அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போ” என்றார். 7உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குச் சென்றான். 8கூடியிருந்த மக்கள் இதைக் கண்டபோது, இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதருக்குக் கொடுத்ததற்காக இறைவனைப் பயபக்தியுடன் துதித்தார்கள்.
மத்தேயு அழைக்கப்படுதல்
9இயேசு அங்கிருந்து போகையில், மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி சேகரிக்கும் இடத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான்.
10பின்பு இயேசு, மத்தேயுவின் வீட்டில் விருந்து உண்ணும்போது, வரி சேகரிப்போர் அநேகரும், பாவிகள் பலரும் வந்து, அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 11இதைப் பரிசேயர்கள் கண்டபோது, அவரது சீடர்களிடம், “ஏன் உங்கள் போதகர் வரி சேகரிப்போருடனும், பாவிகளுடனும் சாப்பிடுகிறார்?” எனக் கேட்டார்கள்.
12இதைக் கேட்டபோது இயேசு, “குணநலத்துடன் இருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார். 13மேலும் அவர், “ ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’#9:13 ஓசி. 6:6 என்ற இறைவாக்கின் கருத்து என்ன என்பதை, போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் நீதிமான்களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
உபவாசத்தைப்பற்றி இயேசுவிடம் கேட்டல்
14அதன்பின்பு யோவானின் சீடர்கள் அவரிடம் வந்து, “நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம்.#9:14 உபவாசிக்கிறோம் – சில பிரதிகளில், அடிக்கடி உபவாசிக்கிறோம். ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள்.
15அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, அவனுடைய விருந்தின நண்பர்கள் அவனுக்காகத் துக்கம் கொண்டாடுவது எப்படி? மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்று சொன்னார்.
16“ஒருவனும் இதுவரை சலவை செய்யாத புதிய துணித் துண்டை, பழைய உடையில் ஒட்டுப் போட்டுத் தைக்க மாட்டான். ஏனெனில் அப்படித் தைத்தால், புதிய துண்டு சுருங்கும்போது, பழைய உடையைக் கிழித்து விடும், கிழிசல் முன்னிருந்ததைவிட பெரிதாகி விடும். 17மனிதர்கள் புதிய திராட்சை ரசத்தைப் பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படி செய்தால், தோற்பைகள் வெடித்து விடும்; திராட்சை ரசமும் சிந்தி விடும். தோற்பைகளும் பாழாய்ப் போகும். ஆகவேதான், புது திராட்சை ரசத்தை இதுவரை பாவிக்காத புது தோற்பைகளில் ஊற்றி வைக்கிறார்கள். அப்போது, அவை இரண்டும் பாதுகாக்கப்படும்” என்றார்.
இறந்துபோன சிறுமியும் நோயுற்ற பெண்ணும்
18அவர் இதைச் சொல்லிக் கொண்டிருக்கையில், அதிகாரி ஒருவன் வந்து அவர் முன் முழந்தாழிட்டு, அவரிடம், “எனது மகள் சற்று நேரத்திற்கு முன் இறந்துவிட்டாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள் மீது வைப்பீராக. அப்போது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான் 19இயேசு எழுந்து, அவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின் சென்றார்கள்.
20அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண், அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலாடையின் ஓரத்தைத் தொட்டாள். 21அவள், “நான் அவரது மேலாடையைத் தொட்டால் போதும். நான் குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
22இயேசு அவளைத் திரும்பிப் பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். அந்த நொடியே அவள் குணமானாள்.
23பின்பு, இயேசு அந்த அதிகாரியின் வீட்டிற்குள் போனவுடன் மரணச் சடங்கிற்கு குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார். 24இயேசு அவர்களிடம், “வெளியே போங்கள். இந்த சிறுமி இறந்து போகவில்லை, தூக்கமாயிருக்கிறாள்” என்றார். அவர்களோ, அதைக் கேட்டு ஏளனமாக சிரித்தார்கள். 25மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பிய பின், அவர் உள்ளே சென்று, அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள். 26இச்செய்தி, அப்பிரதேசம் எங்கும் பரவியது.
இயேசு பார்வையற்றோரையும் வாய் பேச இயலாதவனையும் குணமாக்குதல்
27இயேசு அங்கிருந்து போகும்போது, பார்வையற்ற இரண்டு பேர் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள் மீது இரக்கம் காட்டும்” என்று சத்தமிட்டார்கள்.
28அவர் வீட்டிற்குள் சென்றபோது, பார்வையற்ற அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து, அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் இதைச் செய்ய முடியும் என நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா?” எனக் கேட்டார்.
“ஆம் ஆண்டவரே” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
29பின்பு அவர், அவர்களின் கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்” என்றார். 30உடனே அவர்களுக்குப் பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், “இதைக் குறித்து ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” என கண்டிப்புடன் எச்சரித்தார். 31ஆனால் அவர்களோ வெளியே போய், அவரைப்பற்றிய செய்தியை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.
32அவர்கள் வெளியே புறப்பட்டுப் போகும்போது, பேய் பிடித்ததனால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். 33அந்தப் பேய் துரத்தப்பட்டபோது, பேச இயலாது இருந்த அவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள்.
34ஆனால் பரிசேயரோ, “பேய்களின் தலைவனாலேயே, இவன் பேய்களை விரட்டுகிறான்” என்றார்கள்.
வேலையாட்கள் குறைவு
35இயேசு எல்லாப் பட்டணங்களுக்கும் கிராமங்களுக்கும் பிரயாணம் செய்து, அங்கே யூதருடைய ஜெபஆலயங்களில் போதித்து, இறையரசின் நற்செய்தியை அறிவித்தார்; அத்துடன் எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கினார். 36அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மீது மனம் உருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் துன்புறுத்தப்பட்டவர்களாயும், உதவியற்றவர்களாயும் இருந்தார்கள். 37அப்போது அவர் தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கின்றது, ஆனால் வேலையாட்களோ குறைவாக இருக்கின்றார்கள். 38ஆகையால் அறுவடை செய்ய வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையின் ஆண்டவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.

Zvýraznění

Sdílet

Kopírovat

None

Chceš mít své zvýrazněné verše uložené na všech zařízeních? Zaregistruj se nebo se přihlas