லூக்கா எழுதிய சுவிசேஷம் 19
19
சகேயு
1எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்றுகொண்டிருந்தார். 2எரிகோவில் சகேயு என்னும் பெயருடைய மனிதன் இருந்தான். அவன் செல்வந்தனும், முக்கியமானவனுமான ஒரு வரி வசூலிப்பவனாவான். 3அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான். 4எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான்.
5இயேசு அவ்விடத்துக்கு வந்தபோது, மேலே ஏறிட்டுப் பார்த்து சகேயு மரத்தின்மீது இருப்பதைக் கண்டார். இயேசு அவனை நோக்கி, “சகேயுவே, விரைந்து வா. கீழே இறங்கு. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும்” என்றார்.
6சகேயு விரைந்து கீழே இறங்கினான். தன் வீட்டில் இயேசுவை வரவேற்பதில் அவன் மிகவும் மகிழ்ந்தான். 7எல்லா மக்களும் இதைக் கண்டனர். அவர்கள், “எத்தகைய மனிதனோடு இயேசு தங்குகிறார் என்பதைப் பாருங்கள். சகேயு ஒரு பாவி” என்று புகார் கூறினார்கள்.
8சகேயு கர்த்தரை நோக்கி, “நான் நல்லதைச் செய்ய விரும்புகிறேன். என் பணத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன். நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அவனுக்கு நான்கு மடங்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பேன்” என்றான்.
9இயேசு, “இந்த மனிதன் நல்லவன். உண்மையில் ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு சகேயு அவனது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டான். 10மனித குமாரன் இழந்துபோன மனிதர்களைக் கண்டு அவர்களை மீட்கவே வந்தார்” என்றார்.
இருப்பதைப் பயன்படுத்துங்கள்
(மத்தேயு 25:14-30)
11எருசலேமை நெருங்கி இயேசு பயணம் செய்துகொண்டிருந்தார். தேவனின் இராஜ்யம் சீக்கிரம் வருமென்று சில மக்கள் எண்ணினார்கள். 12மக்களின் எண்ணத்தை இயேசு அறிந்தார். எனவே அவர்களுக்குப் பின்வரும் உவமையைச் சொன்னார்: “ஒரு உயர்ந்த கௌரவம்மிக்க மனிதன், மன்னனாக நியமனம் பெறும்படியாகத் தூர தேசப் பயணத்திற்காக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான். பின்னர் திரும்பி வந்து அவனது மக்களை அரசாள வேண்டுமென்று அவன் திட்டமிட்டான். 13எனவே அவன் தனது வேலைக்காரர்களில் பத்து பேரை அழைத்தான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் ஒரு பை நிறைய பணத்தைக் கொடுத்தான். ‘இந்தப் பணத்தைக்கொண்டு நான் வரும் வரைக்கும் வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். 14அந்த இராஜ்யத்தின் மக்கள் அம்மனிதனை வெறுத்தார்கள். எனவே அம்மக்கள் அவன் போகும் தேசத்துக்கெல்லாம் அவனைப் பின் தொடர்ந்து செல்லுமாறு ஒரு கூட்டத்தினரை அனுப்பினர். மற்ற தேசத்துக்கு அக்கூட்டத்தினர் சென்று ‘இந்த மனிதன் எங்களுக்கு ராஜா ஆவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்கள்.
15“ஆனால் அம்மனிதன் ராஜாவானான். அவன் தன் நாட்டுக்குத் திரும்பிய பின்பு, ‘நான் பணம் கொடுத்துள்ள அந்த வேலைக்காரரை அழையுங்கள். அதைக்கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்’ என்றான். 16முதல் வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் பத்து பை நிரம்பும் அளவுக்குப் பணம் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 17ராஜா அந்த வேலைக்காரனை நோக்கி, ‘நல்லது, நீ ஒரு நல்ல வேலைக்காரன். சிறிய காரியங்களில் உன்னை நம்பக் கூடும் என்று காண்கிறேன். ஆகவே இப்போது எனது பட்டணங்களில் பத்து பட்டணங்களை ஆளும்படியாக உன்னை நியமிப்பேன்’ என்றான்.
18“இரண்டாவது வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் ஐந்து பைகள் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 19மன்னன் வேலைக்காரனை நோக்கி, ‘நீ ஐந்து பட்டணங்கள் மேல் ஆட்சி செய்யலாம்’ என்றான்.
20“பின்பு மூன்றாவது வேலைக்காரன் வந்தான் அந்த வேலைக்காரன் ராஜாவை நோக்கி, ‘ஐயா, இதோ உங்களுடைய பணப் பை இருக்கிறது. நான் அதை ஒரு துணியில் பொதிந்து மறைத்து வைத்தேன். 21உங்கள் வலிமையைக் கண்டு நான் பயந்து போய் இருந்தேன். நீங்கள் கடினமான மனிதர் என்பதை அறிவேன். உங்களால் சம்பாதிக்கப்படாத பணத்தைக் கூட நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். உங்களால் பயிரிடப்படாத தானியத்தைக் கூட நீங்களே சேர்த்துக் கொள்கிறீர்கள்’ என்றான்.
22“ராஜா அந்த வேலைக்காரனை நோக்கி, ‘தீய வேலைக்காரனே, உனது சொந்த வார்த்தையாலேயே உன்னை நிராகரிப்பேன். நான் ஒரு கடினமான மனிதன் என்றாய். நான் சம்பாதிக்காத பணத்தை எடுத்துக்கொள்பவன் என்றும், நான் பயிரிடாத தானியத்தைச் சேர்த்துக்கொள்பவன் என்றும் கூறினாய். 23அது உண்மையென்றால் நீ என் பணத்தை வங்கியில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது நான் திரும்பி வந்தபோது என் பணத்துக்கு வட்டியாவது கிடைத்திருக்கும்’ என்றான். 24பின் அங்கு நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து பையை எடுத்து பத்து பைகள் நிரம்ப பணம் சம்பாதித்தவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
25“அந்த மனிதர்கள் ராஜாவிடம், ‘ஐயா, அந்த வேலைக்காரனிடம் ஏற்கெனவே பத்துப் பைகள் பணம் இருக்கின்றனவே,’ என்றார்கள்.
26“ராஜா, ‘தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்துகிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்தாத மனிதனிடம் இருப்பவையும் எடுத்துக்கொள்ளப்படும். 27இப்போது எனது பகைவர்கள் எங்கே? தமக்கு ராஜாவாக நான் ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன்’ என்றான்.”
எருசலேமுக்குள் இயேசு
(மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11; யோவான் 12:12-19)
28இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். 29ஒலிவ மலையருகே காணப்பட்ட பெத்பகே, பெத்தானியா ஆகிய ஊர்களருகே இயேசு வந்தபோது, அவர் இரண்டு சீஷர்களை அனுப்பினார். 30அவர், “நீங்கள் பார்க்கிற அந்த ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும்போதே அங்கு ஒரு கழுதைக் குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எந்த மனிதனும் அதன்மீது ஏறியதில்லை. அக்கழுதையை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். 31எந்த மனிதனாவது அக்கழுதையை ஏன் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் நீங்கள், ‘எங்கள் எஜமானருக்கு இக்கழுதை வேண்டும்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
32இரண்டு சீஷர்களும் ஊருக்குள் சென்றார்கள். இயேசு கூறியபடியே கழுதைக்குட்டியைக் கண்டார்கள். 33சீஷர்கள் கட்டப்பட்டிருந்த அக்கழுதையை அவிழ்த்தார்கள். கழுதையின் சொந்தக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் சீஷரை நோக்கி, “எதற்காகக் கழுதையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள்.
34சீஷர்கள், “ஆண்டவருக்குத் தேவையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்கள். 35சீஷர்கள் கழுதைக் குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து தம் மேலங்கியை அதன்மேல் போட்டார்கள். பின்பு இயேசுவைக் கழுதையின் மேல் அமர்த்தினார்கள். 36இயேசு எருசலேமுக்குச் செல்லும் பாதை வழியாகக் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். இயேசுவுக்கு முன்பாக சீஷர்கள் தம் அங்கிகளைப் பாதையில் விரித்தார்கள்.
37எருசலேமுக்கு அருகில் இயேசு வந்துகொண்டிருந்தார். அவர் ஒலிவமலை அடி நகரத்திற்கருகே வந்திருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் மகிழ்வோடு இருந்தார்கள். அவர்கள் உரத்த குரலில் களிப்புடன் தேவனை வாழ்த்தினார்கள். அவர்கள் தாம் பார்த்த எல்லா வல்லமையான செயல்களுக்கும் தேவனுக்கு நன்றி தெரிவித்தார்கள். 38அவர்கள்,
“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசரை தேவன் ஆசீர்வதிப்பாராக!#சங்கீ. 118:26
பரலோகத்தில் அமைதியும் தேவனுக்கு மகிமையும் உண்டாவதாக!”
என்றனர்.
39கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, இவற்றைக் கூறாதபடிக்கு சீஷருக்குச் சொல்லுங்கள்” என்றார்கள்.
40ஆனால் இயேசு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன். இக்காரியங்கள் சொல்லப்பட வேண்டியவை. என் சீஷர்கள் இவற்றைக் கூறாவிட்டால், இக்கற்கள் அவற்றைக் கூறும்” என்று பதிலுரைத்தார்.
எருசலேமுக்காக அழுதல்
41இயேசு எருசலேமுக்கு அருகே வந்தார். அவர் அப்பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழ ஆரம்பித்தார். 42இயேசு எருசலேமைப் பார்த்துப் பேசினார். அவர், “உனக்கு சமாதானத்தை எது வரவழைக்கும் என்று இன்றைக்கு நீ தெரிந்துகொண்டிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உனக்கு அது மறைக்கப்பட்டிருப்பதால் உன்னால் அதை அறிந்துகொள்ளமுடியாது. 43உன் பகைவர்கள் உன்னைச் சுற்றிலும் ஒரு மதிலை எழுப்பும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உன் பகைவர்கள் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வளைத்துக் கொள்வார்கள். 44அவர்கள் உன்னையும் உன்னிலுள்ள எல்லா மக்களையும் அழித்து விடுவார்கள். உன் கட்டிடங்களில் உள்ள கற்களில் ஒன்றும் ஒன்றின் மேல் ஒன்று நிலைத்திருப்பதில்லை. தேவன் உன்னை மீட்பதற்காக வந்த காலத்தை நீ அறியாததால் இவையெல்லாம் நடக்கும்” என்றார்.
தேவாலயத்திற்குச் செல்லுதல்
(மத்தேயு 21:12-17; மாற்கு 11:15-19; யோவான் 2:13-22)
45இயேசு தேவாலயத்திற்குள் சென்றார். பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்த மக்களை தேவாலயத்திற்குள் இருந்து துரத்த ஆரம்பித்தார். 46அவர்களிடம் இயேசு, “‘என் வீடு பிரார்த்தனைக் குரிய வீடாக இருக்கும்’#ஏசா. 56:7 என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதைத் திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக#எரே. 7:11 நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள்” என்றார்.
47ஒவ்வொரு நாளும் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். ஆசாரியரும், வேதபாரகரும் மக்களின் அதிகாரிகளும் இயேசுவைக் கொல்ல விரும்பினார்கள். 48ஆனால் எல்லா மக்களும் இயேசுவைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயேசு கூறிய விஷயங்களை மிகவும் உற்சாகமாகக் கவனித்தார்கள். எனவே தலைமை ஆசாரியருக்கும், வேதபாரகருக்கும், அதிகாரிகளுக்கும் இயேசுவை எவ்வாறு கொல்ல முடியும் என்பது தெரியவில்லை.
Zur Zeit ausgewählt:
லூக்கா எழுதிய சுவிசேஷம் 19: TAERV
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International