லூக்கா எழுதிய சுவிசேஷம் 21
21
உண்மையான ஈகை
(மாற்கு 12:41-44)
1தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார். 2அப்போது இயேசு ஓர் ஏழை விதவையைக் கண்டார். பெட்டியினுள் அவள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள். 3இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை இரண்டு சிறிய நாணயங்களையே கொடுத்தாள். ஆனால், அச்செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அவள் உண்மையில் அதிகமாகக் கொடுத்தாள். 4செல்வந்தர்களிடம் மிகுதியான செல்வம் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையற்ற செல்வத்தையே அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் பெண்ணோ மிகவும் ஏழை. ஆனால் அவளுக்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். அவள் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது” என்றார்.
தேவாலயத்தின் அழிவு
(மத்தேயு 24:1-14; மாற்கு 13:1-13)
5சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர்.
6ஆனால் இயேசு, “இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது” என்றார்.
7சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள்.
8இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். 9யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார்.
10பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். 11பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்.
12“ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். ராஜாக்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 13நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். 14நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள். 15உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன். 16உங்கள் பெற்றோரும், சகோதரரும், உறவினரும், நண்பரும் கூட உங்களை ஏமாற்றுவார்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொல்வார்கள். 17எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள். 18ஆனால் இவற்றில் ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது. 19இக்காரியங்கள் மூலமாக உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதால் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும்.
எருசலேமின் அழிவு
(மத்தேயு 24:15-21; மாற்கு 13:14-19)
20“எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். 21அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள். 22தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும். 23அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார். 24வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள்.
அஞ்சாதீர்கள்
(மத்தேயு 24:29-31; மாற்கு 13:24-27)
25“சூரியன், சந்திரன், விண்மீன்களில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடக்கும். பூமியின் மக்கள் அகப்பட்டுக்கொண்டதாக உணர்வார்கள். சமுத்திரங்கள் கலக்கமடையும். ஏனென்று மக்கள் அறியமாட்டார்கள். 26மக்கள் அஞ்ச ஆரம்பிப்பார்கள். உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். வானிலுள்ள ஒவ்வொரு பொருளும் வித்தியாசப்படும். 27அப்போது மேகத்தில் மனித குமாரன் அவரது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வந்துகொண்டிருப்பதை மக்கள் காண்பார்கள். 28இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார்.
அழியாத தேவ வார்த்தை
(மத்தேயு 24:32-35; மாற்கு 13:28-31)
29பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம். 30அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள். 31நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.
32“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.
33“உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை.
ஆயத்தமாயிருங்கள்
34“எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும். 35பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். 36எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
37பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார். 38ஒவ்வொரு காலையிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து தேவாலயத்தில் இயேசு கூறுவதைக் கேட்பதற்காகச் சென்றார்கள்.
Zur Zeit ausgewählt:
லூக்கா எழுதிய சுவிசேஷம் 21: TAERV
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International