லூக்கா எழுதிய சுவிசேஷம் 9
9
சீஷர்கள் அனுப்பப்படுதல்
(மத்தேயு 10:5-15; மாற்கு 6:7-13)
1பன்னிரண்டு சீஷர்களையும் இயேசு ஒருங்கே வருமாறு அழைத்தார். நோய்களைக் குணமாக்கும் வல்லமையையும், பிசாசுகளை விரட்டும் அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்தார். 2தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், நோயுற்றோரைக் குணமாக்கவும் இயேசு சீஷர்களை அனுப்பினார். 3அவர் சீஷர்களை நோக்கி, “நீங்கள் பயணம் செய்யும்போது கைத்தடியை எடுக்காதீர்கள். பையையோ, உணவையோ, பணத்தையோ எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 4ஒரு வீட்டினுள் நுழைந்தால், புறப்படும் நாள்வரைக்கும் அங்கேயே தங்கி இருங்கள். 5ஏதாவது நகரத்து மக்கள் உங்களை வரவேற்காவிடில், அந்த நகரத்திற்கு வெளியே போய் உங்கள் பாதத்தில்பட்ட தூசிகளை உதறிவிடுங்கள். இது அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.
6பின்பு சீஷர்கள் அங்கிருந்துச் சென்றனர். பல நகரங்கள் வழியாகப் பயணம் செய்தனர். எல்லா இடங்களிலும் நற்செய்தியைக் கூறி மக்களைக் குணப்படுத்தினர்.
ஏரோதுவின் குழப்பம்
(மத்தேயு 14:1-12; மாற்கு 6:14-29)
7இவ்வாறு நடந்துகொண்டிருந்த எல்லாச் செய்திகளையும் ராஜாவாகிய ஏரோது கேள்விப்பட்டான். சிலர் “யோவான் ஸ்நானகன் இறந்த பின்பு மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளான்” எனவும், 8வேறு சிலர், “எலியா மீண்டும் வந்துள்ளான்” எனவும் வேறு சிலர், “பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுள் ஒருவர் உயிரோடு எழுந்துள்ளார்” எனவும் கூறியதால் அவன் குழப்பமடைந்திருந்தான். 9ஏரோது, “யோவானின் தலையை வெட்டினேன். நான் கேள்விப்படும் இக்காரியங்களைச் செய்கின்ற மனிதன் யார்?” என்று சொன்னான். ஏரோதும் இயேசுவைப் பார்க்கத் தொடர்ந்து முயன்று வந்தான்.
5,000 க்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு
(மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; யோவான் 6:1-14)
10சீஷர்கள் திரும்பி வந்ததும் தம் பயணத்தின்போது அவர்கள் செய்த செயல்கள் அனைத்தையும் இயேசுவிடம் சொன்னார்கள். பின்னர், இயேசு அவர்களை பெத்சாயிதா என்னும் நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இயேசுவும் சீஷர்களும் தனிமையில் ஒருமித்திருக்க முடிந்தது. 11ஆனால் இயேசு சென்ற இடத்தை மக்கள் அறிய நேர்ந்தது. அவர்கள் அவரைப் பின்பற்றி வந்தனர். இயேசு அவர்களை வரவேற்று தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து அவர்களுக்குக் கூறினார். நோயுற்றிருந்த மக்களைக் குணப்படுத்தினார்.
12மதியத்திற்குப் பின்பு பன்னிரண்டு சீஷர்களும் இயேசுவிடம் வந்து, “இது மக்கள் வசிக்கிற இடம் அல்ல. மக்களை அனுப்பிவிடுங்கள். அவர்கள் உணவைத் தேடவும், இரவைக் கழிப்பதற்காக அக்கம் பக்கத்து நகரங்களிலும், பண்ணைகளிலும் இடம் தேடவும் வேண்டும்” என்றார்கள்.
13ஆனால் இயேசு சீஷர்களை நோக்கி, “அவர்கள் உண்ணும்படியாக எதையாவது நீங்கள் கொடுங்கள்” என்றார்.
சீஷர்கள் “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே உள்ளன. இங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாங்கள் உணவு வாங்கி வர முடியுமா?” என்று கேட்டனர். 14(அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தனர்.)
இயேசு தன் சீஷர்களிடம், “மக்களிடம் ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக அமரும்படி கூறுங்கள்” என்றார்.
15சீஷர்களும் அவ்வாறே கூற எல்லா மக்களும் அதன்படியே அமர்ந்தனர். 16அப்போது இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்தார். இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்னர் இயேசு உணவைப் பகிர்ந்து தன் சீஷர்களிடம் கொடுத்து, அவ்வுணவை மக்களுக்குக் கொடுக்குமாறு கூறினார். 17எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். நிரம்ப உணவும் எஞ்சியது. சாப்பிடாது எஞ்சியதை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.
இயேசுவே கிறிஸ்து
(மத்தேயு 16:13-19; மாற்கு 8:27-29)
18ஒருமுறை இயேசு தனிமையாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் அங்கே வந்தனர். இயேசு அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று பேசிக்கொள்கிறார்கள்” எனக் கேட்டார்.
19சீஷர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் எனக் கூறுகின்றனர். பிறர் எலியா என்கிறார்கள். மற்றும் சிலர் நீங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து உயிரோடு எழுந்துள்ள ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கின்றனர்.” எனப் பதில் கூறினர்.
20அப்போது இயேசு அவரது சீஷர்களை நோக்கி “நீங்கள் என்னை யார் என நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
பேதுரு, “நீர் தேவனிடமிருந்து வந்த கிறிஸ்து” என்று பதிலளித்தான்.
21பிறருக்கு இதனைச் சொல்லாதபடிக்கு இயேசு அவர்களை எச்சரித்தார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்
(மத்தேயு 16:21-28; மாற்கு 8:31–9:1)
22பின்பு இயேசு, “மனிதகுமாரன் பல விஷயங்களில் துன்புற வேண்டும். மூத்த யூதத் தலைவர்களும், முக்கியமான போதகர்களும், வேதபாரகரும் அவரை நிராகரிப்பர். மனித குமாரன் கொல்லப்படுவார். ஆனால் மூன்று நாட்களுக்குப் பின்னர் மரணத்தினின்று உயிர்த்தெழுவார்” என்றார்.
23தொடர்ந்து அவர்களிடம் இயேசு, “என்னைப் பின்பற்றிவர யாரேனும் விரும்பினால், அவன் தனக்கு விருப்பமான செயல்களுக்கு மறுப்புச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் துயரங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும். 24தனது உயிரைக் காப்பாற்ற விரும்பும் மனிதன் அதை இழந்துபோவான். தனது உயிரை எனக்காகக் கொடுக்கிற ஒவ்வொரு மனிதனும் அதைக் காப்பாற்றிக்கொள்வான். 25ஒருவன் அழிந்துபோன நிலையில் இருந்தால் உலகம் முழுவதும் அவனுடையதாக இருந்தாலும் அதனால் எந்தப் பயனுமில்லை. 26ஒருவன் என்னைக் குறித்தோ, அல்லது என் போதனையைக் குறித்தோ வெட்கப்பட்டால், நான் எனது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களின் மகிமையோடும் வருகைதரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன். 27உங்களுக்கு நான் உண்மையைச் சொல்கின்றேன். இங்கு நிற்பவர்களில் சிலர் தாம் மரணமடைவதற்கு முன் தேவனுடைய இராஜ்யத்தைக் காண்பார்கள்” என்றார்.
மோசே, எலியாவுடன், இயேசு
(மத்தேயு 17:1-8; மாற்கு 9:2-8)
28இச்செய்திகளை இயேசு கூறினதற்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்வதற்காக ஒரு மலையின்மீது ஏறினார். 29இயேசு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது அவரது முகம் மாற்றமடைந்தது. அவரது ஆடைகள் ஒளி விடும் வெண்மையாக மாறின. 30பின்னர் இரண்டு மனிதர்கள் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசேயும், எலியாவும் ஆவர். 31மோசேயும் எலியாவும் கூட ஒளி பொருந்தியோராக காணப்பட்டனர். எருசலேமில் நிகழவிருக்கும் இயேசுவின் மரணத்தைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 32பேதுருவும் மற்றவர்களும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் விழித்து இயேசுவின் மகிமையைக் கண்டனர். இயேசுவோடுகூட நின்றுகொண்டிருந்த அந்த இரண்டு மனிதர்களையும் அவர்கள் பார்த்தனர். 33மோசேயும், எலியாவும் பிரிந்து செல்லும்போது பேதுரு, “குருவே, நாம் இங்கிருப்பது நல்லது. நாங்கள் இங்கு மூன்று கூடாரங்களை, ஒன்று உமக்காகவும் ஒன்று மோசேக்காகவும், ஒன்று எலியாவுக்காகவும், அமைப்போம்” என்று கூறினான். (பேதுரு தான் சொல்லிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கவில்லை)
34இவ்வாறு பேதுரு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் அவர்களைச் சூழ்ந்தது. மேகம் சூழ்ந்ததும் பேதுரு, யாக்கோபு, யோவான், ஆகியோர் பயந்தனர். 35மேகத்தினின்று ஒரு அசரீரி, “இவர் எனது குமாரன். நான் தேர்ந்துகொண்டவர் இவரே, இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றது.
36அசரீரி முடிந்ததும் இயேசு மட்டுமே அங்கிருந்தார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் எதுவும் பேசவில்லை. அவர்கள் பார்த்தவற்றைக் குறித்து ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை.
சிறுவன் குணமாக்கப்படுதல்
(மத்தேயு 17:14-18; மாற்கு 9:14-27)
37மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர். 38ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே குமாரன். 39பிசாசிடம் இருந்து ஓர் அசுத்த ஆவி என் மகனைப் பற்றிக்கொள்ளும்போது அவன் கத்துகிறான். அவன் தனது நிலையை இழக்கும்போது வாயிலிருந்து நுரைதள்ளுகிறது. அசுத்த ஆவி அவனைக் காயப்படுத்தி, அவனை எப்போதும் விடாமல் துன்புறுத்துகிறது. 40உங்கள் சீஷர்களிடம் என் மகனை விட்டு அந்த அசுத்த ஆவி நீங்குமாறு செய்யக் கெஞ்சினேன். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று உரக்கக் கூறினான்.
41இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார்.
42அந்தப் பையன் வந்துகொண்டிருக்கும் போது அசுத்த ஆவி அவனைக் கீழே தள்ளிற்று. அந்தப் பையன் தனது நிலையையிழந்து நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இயேசு அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறக் கண்டிப்புடன் கட்டளையிட்டார். அப்பையன் நலம் பெற்றான். இயேசு பையனைத் தந்தையிடம் ஒப்படைத்தார். 43தேவனின் மகத்துவத்தையும் பெருமையையும் கண்டு எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள்.
தன் மரணத்தைப் பற்றிப் பேசுதல்
(மத்தேயு 17:22-23; மாற்கு 9:30-32)
இயேசு செய்த எல்லா செயல்களையும் கண்டு இன்னும் மக்கள் மிகுந்த ஆச்சரியமுற்றனர். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நோக்கி, 44“நான் உங்களுக்கு இப்போது கூறப்போகிற செய்திகளை மறவாதீர்கள். மனிதகுமாரன் சில மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொடுக்கப்படுவார்” என்றார். 45ஆனால் அவர்களோ அவர் கூறியதன் பொருளை உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளாதபடி அதன் பொருள் அவர்களுக்கு மறைமுகமானதாய் இருந்தது. அவர்களோ இயேசு கூறியதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பயந்தார்கள்.
முக்கியமானவர் யார்?
(மத்தேயு 18:1-5; மாற்கு 9:33-37)
46இயேசுவின் சீஷர்கள் தமக்குள் மிகவும் முக்கியமானவர் யார் என்பதைக் குறித்து விவாதிக்கத் தொடங்கினார்கள். 47அவர்கள் என்ன எண்ணிக்கொண்டிருந்தார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு ஒரு சிறிய குழந்தையை எடுத்துத் தன்னருகே, அதனை நிறுத்தினார். 48பின்பு தனது சீஷர்களை நோக்கி, “என் பெயரினால் ஒருவன் ஒரு சிறிய குழந்தையை இதுபோல ஏற்றுக்கொண்டால் அவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்ளும்போது அம்மனிதன் என்னை அனுப்பினவரை (தேவனையும்) ஏற்றுக்கொள்கிறான். உங்களில் மிகவும் தாழ்மையுள்ள மனிதன் எவனோ, அவனே மிகவும் முக்கியமான மனிதன் ஆவான்” என்றார்.
இயேசுவைச் சேர்ந்தவன் யார்?
(மாற்கு 9:38-40)
49“குருவே, மனிதர்களை விட்டு வெளியேறும்படியாக உம்முடைய பெயரினால் ஒரு மனிதன் பிசாசுகளை வற்புறுத்திக்கொண்டிருந்தான். அவன் நம் கூட்டத்தைச் சாராதவனாகையால் அவன் அதைச் செய்யாதபடி நிறுத்த நாங்கள் கூறினோம்” என்றான் யோவான்.
50இயேசு யோவானை நோக்கி, “அவனைத் தடுக்காதீர்கள். ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக இல்லையென்றால் அவன் உங்களைச் சார்ந்தவன்” என்றார்.
ஒரு சமாரிய நகரம்
51இயேசு உலகை விட்டு பரலோகத்திற்குச் செல்லும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் எருசலேமுக்கு போக முடிவெடுத்தார். 52இயேசு சில மனிதர்களை அவருக்கு முன்பாக அனுப்பினார். இயேசுவுக்கு எல்லாவற்றையும் ஆயத்தம் செய்வதற்காக அம்மனிதர்கள் சமாரியாவிலுள்ள ஒரு நகரை அடைந்தனர். 53இயேசு எருசலேமுக்குச் செல்ல விரும்பியதால் அந்நகரத்து மக்கள் இயேசுவை வரவேற்க விரும்பவில்லை. 54இயேசுவின் சீஷராகிய யாக்கோபும், யோவானும் இதைக் கண்டார்கள். அவர்கள், “ஆண்டவரே,#9:54 சில கிரேக்க பிரதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது: “எலியா செய்ததுபோல்.” வானிலிருந்து நெருப்பு வரவழைத்து, அம்மக்களை நாங்கள் அழிப்பதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டனர்.
55ஆனால் இயேசு திரும்பி அவர்களைக் கண்டித்தார்.#9:55 சில கிரேக்க பிரதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது: “அதற்கு இயேசு, நீங்கள் எப்படிப்பட்ட ஆவியை பெற்றீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை. மனிதகுமாரன் மனிதர்களின் ஆத்துமாவை அழிப்பதற்கல்ல, அவற்றைக் காப்பாற்றுவதற்கே வந்துள்ளார்.” 56பின்பு இயேசுவும், அவரது சீஷர்களும் மற்றொரு நகரத்துக்குச் சென்றனர்.
இயேசுவைப் பின்பற்றுதல்
(மத்தேயு 8:19-22)
57அவர்கள் எல்லாரும் பாதை வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஒருவன் இயேசுவை நோக்கி, “எந்த இடத்துக்கு நீங்கள் சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றி வருவேன்” என்றான்.
58இயேசு பதிலாக, “நரிகள் வசிப்பதற்குக் குழிகள் உண்டு. பறவைகள் வசிப்பதற்குக் கூடுகள் உண்டு. ஆனால் மனித குமாரன் தனது தலையைச் சாய்ப்பதற்குக் கூட எந்த இடமும் இல்லை” என்று கூறினார்.
59இயேசு இன்னொரு மனிதனை நோக்கி, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அம்மனிதன், “ஆண்டவரே, நான் போய் முதலில் எனது தந்தையை அடக்கம் செய்த பின்னர் வருவேன்” என்றான்.
60ஆனால் இயேசு அவனை நோக்கி, “மரித்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான மரித்தோரைப் புதைக்கட்டும். நீ போய் தேவனின் இராஜ்யத்தைப் பற்றிக் கூற வேண்டும்” என்றார்.
61மற்றொரு மனிதன், “ஆண்டவரே, நான் உம்மை பின்பற்றுவேன். ஆனால் நான் போய் முதலில் என் குடும்பத்தாரிடம் விடை பெற்று வருவேன்” என்றான்.
62இயேசு, “ஒருவன் வயலை உழ ஆரம்பித்துப் பின்னோக்கி பார்த்தால் அவன் தேவனின் இராஜ்யத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்தாதவன் ஆவான்” என்றார்.
Zur Zeit ausgewählt:
லூக்கா எழுதிய சுவிசேஷம் 9: TAERV
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International