யோவான் 10
10
மேய்ப்பனும் மந்தையும்
1மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், செம்மறியாட்டுத் தொழுவத்திற்குள்ளே வாசல் வழியாய் உள்ளே போகாமல், வேறு வழியாய் ஏறி உள்ளே வருகின்றவன் திருடனும் கொள்ளைக்காரனுமாய் இருக்கின்றான். 2வாசல் வழியாய் உள்ளே போகின்றவனே செம்மறியாடுகளின் மேய்ப்பனாய் இருக்கின்றான். 3காவலாளி, மேய்ப்பனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். செம்மறியாடுகளும் அவனது குரலைக் கேட்கின்றன. அவன் தன்னுடைய செம்மறியாடுகளைப் பெயர் சொல்லி அழைத்து, அவைகளை வெளியே வழிநடத்திச் செல்கிறான். 4அவன் தனக்குச் சொந்தமான எல்லா செம்மறியாடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்ததும், அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய செம்மறியாடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப் பின்னே செல்கின்றன. 5செம்மறியாடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்ல மாட்டாது; ஒரு அந்நியனது குரலானது யாருடையது என அவைகளினால் அடையாளம் காண முடியாததால், அந்த அந்நியனை விட்டு அவை ஓடிப் போகும்” என்றார். 6இயேசு இதை உவமையாகப் பேசி அவர்களுக்குச் சொன்னபோது, அவர் தங்களுக்கு என்ன சொல்கின்றார் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
7எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஆடுகளுக்கு வாசல் நானே. 8எனக்கு முன்னே வந்த எல்லோரும் திருடரும் கொள்ளைக்காரருமாய் இருக்கின்றார்கள். ஆடுகள் அவர்களது குரலைக் காதுகொடுத்து கேட்கவில்லை. 9நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகின்றவன் எவனோ, அவன் இரட்சிக்கப்படுவான். அவன் சுதந்திரமாய் உள்ளே வந்தும் வெளியே சென்றும் தனக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்வான். 10திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகின்றான்; நானோ, அவர்கள் வாழ்வடையும்படியாக, அதை அவர்கள் நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாக வந்தேன்.
11“நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கின்றான். 12கூலிக்காக மேய்ப்பவனோ செம்மறியாடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகின்றதைக் காண்கின்றபோது, செம்மறியாடுகளை விட்டுவிட்டு ஓடிப் போகின்றான். அப்போது ஓநாயானது மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது. 13அப்படிப்பட்டவன் கூலிக்காகவே மேய்ப்பதால், செம்மறியாடுகளைக் குறித்து அக்கறை இல்லாதவனாய் ஓடிப் போகின்றான்.
14“நானே நல்ல மேய்ப்பன்; நான் என் செம்மறியாடுகளை அறிந்திருக்கிறேன். என்னுடைய செம்மறியாடுகள் என்னை அறிந்திருக்கின்றன. 15பிதா என்னை அறிந்திருப்பது போல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், நான் செம்மறியாடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கின்றேன். 16இந்தத் தொழுவத்திற்குள் இருக்காத வேறு செம்மறியாடுகளும் எனக்கு உள்ளன. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலைக் கேட்டு நடக்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும். 17நான் என் உயிரைக் கொடுக்கின்றபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக்கொள்வேன். 18என் உயிரை ஒருவரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கின்றேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டேன்” என்றார்.
19இந்த வார்த்தைகளை யூதர்கள் கேட்டபோது, அவர்களிடையே மீண்டும் பிரிவினை ஏற்பட்டது. 20அவர்களில் பலர், “இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது, பைத்தியமும் பிடித்துவிட்டது, இவன் பேச்சை ஏன் கேட்கின்றீர்கள்?” என்றார்கள்.
21மற்றவர்களோ, “இவை பேய் பிடித்தவனுடைய வார்த்தைகள் அல்லவே. பார்வையற்றவனுடைய கண்களைப் பிசாசினால் திறக்க முடியுமோ?” என்றார்கள்.
யூதர்களின் அவிசுவாசம்
22எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர் காலமாயிருந்தது. 23இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக் கொண்டிருந்தார். 24அப்போது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “எவ்வளவு காலத்துக்கு ஒரு முடிவெடுக்க முடியாதபடி எங்களைச் சந்தேகத்தில் வைத்திருக்கப் போகின்றீர்? நீர் மேசியாவானால், அதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்றார்கள்.
25அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் பெயரினால், நான் செய்கின்ற செயல்களே நான் யார் என்பதை உறுதி செய்கின்றன. 26ஆயினும், நீங்கள் விசுவாசிக்காமல் இருக்கின்றீர்கள்; ஏனெனில் நீங்கள் என்னுடைய மந்தையைச் சேர்ந்த செம்மறியாடுகள் அல்ல. 27எனது செம்மறியாடுகள் என் குரலைக் கேட்கின்றன. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவை என்னைப் பின்பற்றுகின்றன. 28நான் அவைகளுக்கு நித்திய வாழ்வைக் கொடுக்கின்றேன். அவை ஒருபோதும் கெட்டழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்தெடுக்கவும் முடியாது. 29அவைகளை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது. 30நானும் பிதாவும் ஒன்றே” என்றார்.
31அப்போது யூதர்கள், அவரைக் கல்லெறிந்து கொல்லும் நோக்கில், மீண்டும் கற்களை எடுத்துக் கொண்டார்கள். 32ஆனால் இயேசுவோ அவர்களிடம், “என் பிதாவிடம் இருந்து பல நல்ல செயல்களை நான் உங்களுக்குக் காண்பித்தேன். இவைகளில் எதன் காரணமாக நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார்.
33அதற்கு யூதர்கள், “நல்ல செயல்களுக்காக அல்ல, ஒரு சாதாரண மனிதனாகிய நீ, உன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கின்றாயே! அவ்விதம் நீ இறைவனை நிந்தித்துப் பேசியதற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்” என்றார்கள்.
34இயேசு அவர்களிடம், “நீங்கள் ‘தெய்வங்களாய்’ இருக்கின்றீர்கள் என்று உங்கள் நீதிச்சட்டத்தில் எழுதியிருக்கிறதல்லவா?#10:34 சங். 82:6 35இறைவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களை, ‘தெய்வங்கள்’ என்று இறைவன் சொல்லியிருக்கின்றாரே. வேதவசனமும் தவறாக இருக்க முடியாதே. 36அப்படியானால் பிதாவினால் தனக்கென வேறுபிரித்து, இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? நான் என்னை ‘இறைவனுடைய மகன்’ என்று சொன்னதால், நான் இறைவனை நிந்திக்கிறேன் என்று நீங்கள் எப்படி என்னில் குற்றம் காணலாம்? 37நான் என் பிதா செய்தவற்றைச் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. 38ஆனால் அவைகளை நான் செய்தால், நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும்கூட, என் செயல்களையாவது விசுவாசியுங்கள். அப்போது பிதா என்னில் இருக்கின்றார் என்பதையும், நான் பிதாவில் இருக்கின்றேன் என்பதையும், நீங்கள் அறிந்து விளங்கிக்கொள்வீர்கள்” என்றார். 39எனவே அவர்கள் திரும்பவும் அவரைக் கைது செய்ய முயன்றார்கள். ஆனால் அவரோ அவர்களுடைய பிடியில் அகப்படாமல் தப்பிச் சென்றார்.
40பின்பு இயேசு, திரும்பவும் யோர்தானைக் கடந்து, ஆரம்ப நாட்களிலே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு போய், அங்கே தங்கினார். 41அநேகர் அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அற்புத அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக் குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கின்றது” என்றார்கள். 42அவ்விடத்திலே அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள்.
Zur Zeit ausgewählt:
யோவான் 10: TRV
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.