லூக்கா 20

20
இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிய கேள்வி
1ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டும் இருந்தபோது தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களுடன் ஒன்றுசேர்ந்து அவரிடம் வந்து, 2“நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கின்றீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.
3அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். 4யோவானின் ஞானஸ்நானம் பரலோகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார்.
5அவர்கள் தங்களுக்குள்ளே அதைக் குறித்து கலந்து பேசி, “ ‘அது பரலோகத்திலிருந்து வந்தது’ என்று நாம் சொல்வோமானால், ‘நீங்கள் ஏன் யோவானை விசுவாசிக்கவில்லை?’ என்று இவர் நம்மைக் கேட்பார். 6‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், எல்லா மக்களும் நம்மைக் கல்லால் அடிப்பார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்களே” என்று சொன்னார்கள்.
7எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
8அதற்கு இயேசு, “எந்த அதிகாரத்தினால் நான் இதைச் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.
பொல்லாத குத்தகைக்காரர்களின் உவமை
9இயேசு தொடர்ந்து, மக்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணம் சென்றான். 10அறுவடைக் காலத்தின்போது திராட்சைத் தோட்டத்திலிருந்து, தனது பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை குத்தகைக்காரர்களிடம் அனுப்பினான். ஆனால் அந்த குத்தகைக்காரர்களோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள். 11தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். 12மூன்றாவது முறையும் வேறொருவனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
13“அப்போது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கின்ற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.
14“ஆனால் குத்தகைக்காரர்கள், மகனைக் கண்டபோது, ‘இவனே உரிமையாளனின் வாரிசு, இவனைக் கொலை செய்வோம்; அப்போது இந்த உரிமைச் சொத்து நம்முடையதாகும்’ என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 15அவ்வாறே, அவர்கள் அவனைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, கொலை செய்தார்கள்.
“அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்? 16அவன் வந்து, அந்த குத்தகைக்காரர்களைக் கொலை செய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார்.
மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள்.
17அப்போது இயேசு அவர்களை உற்று நோக்கி, “அப்படியானால்,
“ ‘கட்டடம் கட்டுகின்றவர்கள் நிராகரித்த கல்லே,
மூலைக்குத் தலைக்கல் ஆயிற்று’#20:17 சங். 118:22
என்று, எழுதியிருப்பதன் அர்த்தம் என்ன? 18அந்தக் கல்லின் மேல் விழுகின்ற ஒவ்வொருவனும், துண்டு துண்டாகச் சிதறிப் போவான். அந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அது அவனை நசுக்கிப் போடும்” என்றார்.
19அவர் இந்த உவமையை தங்களுக்கு எதிராகவே சொன்னார் என்று நீதிச்சட்ட ஆசிரியர்களும், தலைமை மதகுருக்களும் அறிந்து, அவரைக் கைது செய்ய வழி தேடினார்கள். ஆனாலும், அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.
ரோம பேரரசனுக்கு வரி
20இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், நீதிமான்களைப் போல் பாசாங்கு செய்யும் ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். அவர்களோ இயேசு சொல்லும் வார்த்தையினால் அவரைக் குற்றம் சாட்டி, ஆளுநரின் சட்ட வரையறைக்குள்ளான அதிகாரத்திற்கு ஒப்படைக்க நினைத்தார்கள். 21எனவே அந்த ஒற்றர்கள் அவரிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகின்றீர் என்றும், போதிக்கின்றீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை உண்மையின்படியே போதிக்கிறீர் என்றும் அறிவோம். 22நாங்கள், ரோம பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள்.
23அவர் அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம், 24“ஒரு தினாரி நாணயத்தை எனக்குக் காட்டுங்கள். இந்த நாணயத்திலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார்.
அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.
25அவர் அவர்களிடம், “அப்படியானால் சீசருக்குரியதை சீசருக்கும், இறைவனுக்குரியதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
26மக்களுக்கு முன்பாக அவர் சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவர்மீது குற்றம் காண முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் கேட்டு, வியப்புற்று மௌனமானார்கள்.
உயிர்த்தெழுதலும் திருமணமும்
27உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். 28அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாய் இறந்துபோனால், இறந்தவனின் மனைவியை, அவனது சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்காக சந்ததியை உருவாக்க வேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். 29இப்படியாக, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்து போனான். 30இரண்டாவது சகோதரனும், 31பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்து போனார்கள். அப்படியே ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்து போனார்கள். 32இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள். 33அப்படியானால், இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
34இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கின்றார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். 35ஆனால் வரப் போகின்ற காலத்தையும் இறந்தோரின் உயிர்த்தெழுதலையும் அடைந்து, அதை அனுபவிக்க தகுதியுள்ளவர்களாய் கருதப்படுகின்றவர்களோ, அப்போது திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை. 36அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில் அவர்கள் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள். 37இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும்கூட முட்புதரைப் பற்றிய அவரது பதிவிலே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவர் கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கின்றார்.#20:37 யாத். 3:6 38அவர் இறந்தவர்களின் இறைவனல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கின்றார். ஏனெனில், இறைவனைப் பொறுத்தவரையில் அவர்கள் எல்லோரும் உயிருள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்” என்றார்.
39நீதிச்சட்ட ஆசிரியர்களில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள். 40அதன்பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
மேசியா யாருடைய மகன்
41இயேசு அவர்களிடம், “மேசியாவை தாவீதின் மகன் என்று சொல்கின்றார்களே, அது எப்படி? 42சங்கீதப் புத்தகத்தில் தாவீதும்,
“கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னதாவது:
‘நீர் எனது வலது பக்கத்தில் அமர்ந்திரும்,
43நான் உமது பகைவரை உமது கால்களுக்கு
பாதபடி ஆக்கும்வரை அமர்ந்திரும்.’#20:43 சங். 110:1
44தாவீது அவரை ஆண்டவர் என்று அழைக்கின்றபடியால், அவர் எப்படி தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்றார்.
எச்சரிக்கைகள்
45மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு தமது சீடர்களிடம், 46“நீதிச்சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து திரிவதையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துதல்களைப் பெறுவதையும் விரும்புகிறார்கள். ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், விருந்துகளிலே மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். 47அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளையடிப்பதுடன், மற்றவர்கள் காண வேண்டும் என்பதற்காக நீண்ட மன்றாடுதலைச் செய்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

Zur Zeit ausgewählt:

லூக்கா 20: TRV

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.