லூக்கா 23

23
1பின்பு கூடியிருந்த கூட்டத்தார் அனைவரும் எழுந்து, அவரைப் பிலாத்துவினிடம் கொண்டுபோனார்கள். 2அங்கே அவர்கள், “இவன் மக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்த முயன்றதை நாங்கள் கண்டோம். ரோமப் பேரரசனாகிய சீசருக்கு வரி செலுத்துவதை இவன் எதிர்ப்பதோடு, தானே மேசியாவாகிய அரசன் என்றும் சொல்லிக்கொள்கின்றான்” என அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.
3எனவே பிலாத்து இயேசுவிடம், “நீ யூதர்களுடைய அரசனா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நீர் சொல்கின்றபடியேதான்” என்றார்.
4பிலாத்து தலைமை மதகுருக்களையும், கூடியிருந்த மக்களையும் பார்த்து, “இவனுக்கு விரோதமாய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை” என்றான்.
5ஆனால் அவர்களோ, “இவன் யூதேயா முழுவதிலும், கலிலேயா தொடங்கி இங்கு வரையிலும், தனது போதனையினாலே மக்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான்” என்றார்கள்.
6அதைக் கேட்ட பிலாத்து, “இவன் ஒரு கலிலேயனா?” என்றான். 7இயேசு, ஏரோதுவின் நீதிச்சட்ட அதிகாரத்துக்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்தபோது, அவன் அவரை ஏரோதுவினிடத்திற்கு அனுப்பி வைத்தான். அவ்வேளையில் ஏரோதுவும் எருசலேமுக்கு வந்திருந்தான்.
8ஏரோது, இயேசுவைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டான். ஏனெனில், நீண்ட காலமாக அவன் அவரைப் பார்க்க விரும்பியிருந்தான். அவன் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்ததனால், அவரால் செய்யப்படும் சில அற்புதங்களைப் பார்க்க விரும்பினான். 9அவன் அவரிடம், அநேக கேள்விகளைக் கேட்டான். ஆனால் இயேசுவோ அவனுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. 10தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் அங்கே நின்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்கள். 11அப்போது ஏரோதுவும், அவனுடைய படைவீரரும் அவரை அவமதித்து, அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் அவருக்கு அலங்காரமான ஒரு மேலாடையை அணிவித்து, அவரைத் திரும்பவும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். 12அன்று முதல், ஏரோதுவும் பிலாத்துவும் நண்பர்கள் ஆனார்கள். அதற்கு முன் அவர்கள் இருவரும் பகைவர்களாய் இருந்தார்கள்.
13பிலாத்து, தலைமை மதகுருக்களையும் ஆளுநர்களையும் மக்களையும் ஒன்றாக அழைத்து, 14அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனை, மக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டும் ஒருவனாக என்னிடம் கொண்டுவந்தீர்கள். உங்கள் முன்பாகவே இவனை விசாரித்தேன். ஆனால், இவனுக்கு விரோதமாக நீங்கள் சாட்டும் குற்றத்திற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. 15ஏரோதுவும் இவன்மேல் குற்றம் எதையும் காணவில்லை. ஏனெனில், அவர் இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரணதண்டனை பெறக் கூடிய குற்றம் எதையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. 16எனவே நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான். 17ஏனெனில், பண்டிகையின்போது அவர்களுக்காக அவன் ஒரு கைதியை விடுதலை செய்ய வேண்டியிருந்தது.#23:17 சில மூலப் பிரதிகளில் 17 ஆம் வசனம் காணப்படுவதில்லை.
18அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். 19பரபாஸ் என்பவன், பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலை செய்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
20பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி, திரும்பவும் அவர்களிடம் பேசினான். 21ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
22மூன்றாவது தடவையாகவும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.
23ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேலோங்கியது. 24எனவே பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான். 25எனவே, அவர்கள் கேட்டுக் கொண்டபடி, கிளர்ச்சி செய்ததற்காகவும் கொலை செய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸ் என்பவனை விடுதலை செய்தான்; இயேசுவையோ அவர்களுடைய விருப்பப்படி செய்ய ஒப்படைத்தான்.
இயேசு சிலுவையில் அறையப்படுல்
26அவர்கள் இயேசுவை அழைத்துக்கொண்டு போகையில், நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியே சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவன் வந்து கொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பிடித்து, சிலுவையை அவன்மீது வைத்து, இயேசுவுக்குப் பின்னாக அதைச் சுமந்து போகும்படி செய்தார்கள். 27மக்கள் பெரும் கூட்டமாய் அவருக்குப் பின்னே போனார்கள். அந்த மக்கள் கூட்டத்தில், அவருக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள். 28இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்து, “எருசலேம் பெண்களே, எனக்காக அழ வேண்டாம்; நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள். 29ஏனெனில், ‘கருத்தரிக்க முடியாத பெண்களும், குழந்தையை பெறாத பெண்களும், பாலூட்டாத பெண்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும்.
30“ ‘அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும்,
குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும் சொல்வார்கள்.’#23:30 ஓசி. 10:8
31ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்னதான் செய்ய மாட்டார்கள்?” என்றார்.
32குற்றவாளிகளான வேறு இரண்டு பேரும், மரணதண்டனைக்காக அவருடனேகூட கொண்டுபோகப்பட்டார்கள். 33அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலது பக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். 34அப்போது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். அவர்களோ, அவருடைய ஆடைகளைச் சீட்டுப் போட்டு பங்கிட்டுக் கொண்டார்கள்.
35இவைகளையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு நின்றபோது, ஆளுநர்களோ அவரை ஏளனம் செய்து, “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிவு செய்யப்பட்ட அவருடைய மேசியாவாக இருந்தால், தன்னைத் தானே இரட்சித்துக்கொள்ளட்டும்” என்றார்கள்.
36இராணுவ வீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் அவருக்கு புளித்த திராட்சை ரசத்தைக் கொடுத்து, 37“நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.
38அவருக்கு மேலாக இருந்த ஒரு அறிவிப்புப் பலகையில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது:
இவர் யூதருடைய அரசன்.
39அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் மேசியா அல்லவா? உன்னையும், எங்களையும் காப்பாற்று” என்று அவரை பழித்துரைத்தான்.
40ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே. 41நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். ஆனால் இவரோ, எந்தத் தவறும் செய்யவில்லை” என்றான்.
42பின்பு அவன், இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான்.
43அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட பரதீசில்#23:43 பரதீசில் – இதை இறைவனின் மக்களாகிய நீதிமான்களின் மகிமையான இருப்பிடம் அல்லது அழகிய தோட்டம் என்றும் அர்த்தம்கொள்ளலாம். இருப்பாய்” என்றார்.
இயேசுவின் மரணம்
44அப்போது நடுப்பகல் வேளையாயிருந்தது, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் மூடியிருந்தது. 45சூரியன் ஒளி கொடுக்கவில்லை. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. 46இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக் கொடுக்கின்றேன்”#23:46 சங். 31:5 என்று சத்தமிட்டு அழைத்தார். இதைச் சொல்லிவிட்டு, அவர் தமது இறுதி மூச்சை விட்டார்.
47நூற்றுக்குத் தளபதி நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான். 48இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த மக்கள் எல்லோரும் அங்கு நடந்ததைக் கண்டபோது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள். 49ஆனால் அவரை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும் தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்படல்
50நியாயசபையின் உறுப்பினர்களில் ஒருவனான, யோசேப்பு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானுமாய் இருந்தான். 51யூதேயாவின் ஒரு பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்த அவன் இறைவனுடைய அரசுக்காகக் காத்திருந்தான். அவன் அவர்களுடைய தீர்மானத்திற்கோ, அவர்களுடைய செயலுக்கோ உடன்பட்டிருக்கவில்லை. 52அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான். 53பின்பு அவன் உடலைக் கீழே இறக்கி, அதை விலையுயர்ந்த ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கற்பாறையில் குடையப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். அக்கல்லறையில் இதுவரை எவருடைய உடலும் வைக்கப்படவில்லை. 54அது சபத் ஓய்வுநாளுக்கு முந்திய நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது.
55கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னே சென்று, கல்லறையையும், அதில் அவருடைய உடல் எப்படி கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள். 56பின்பு அவர்கள் வீட்டுக்குப் போய், நறுமணப் பொருட்களையும், வாசனைத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள்.#23:56 வாசனைத் தைலங்களையும் – மரணித்த உடல் சிதைவடைவதால் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க, யூதர்களின் முறைமையின்படி இயேசுவின் உடலுக்குப் பூசுவதற்காக இவற்றை ஆயத்தம் செய்தார்கள். ஆனால், ஓய்வு நாளானபடியினாலே, யூத நீதிச்சட்ட கட்டளையின்படியே, அவர்கள் ஒன்றும் செய்யாதிருந்தார்கள்.

Zur Zeit ausgewählt:

லூக்கா 23: TRV

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.