3
வீழ்ச்சி
1இறைவனாகிய கர்த்தர் உருவாக்கியிருந்த காட்டுமிருகங்கள் எல்லாவற்றையும்விட, பாம்பு அதிக தந்திரமுள்ளதாய் இருந்தது. பாம்பு அப்பெண்ணிடம், “ ‘நீங்கள் சோலையில் உள்ள மரங்களில், ஒரு மரத்தின் பழத்தைக்கூட உண்ண வேண்டாம்’ என்று இறைவன் உங்களுக்குச் சொன்னார் என்பது உண்மையா?” எனக் கேட்டது.
2பாம்பு கேட்டதற்கு அப்பெண் மறுமொழியாக, “சோலையில் உள்ள மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்; 3ஆனால், ‘சோலையின் நடுவிலுள்ள மரத்திலிருந்து பழத்தை நீங்கள் உண்ணக் கூடாது; அதைத் தொடவும் கூடாது, மீறினால் மரணிப்பீர்கள்’ என்று இறைவன் கூறியிருக்கின்றார்” என்று கூறினாள்.
4ஆனால் பாம்போ அந்தப் பெண்ணிடம், “இல்லை, நீங்கள் நிச்சயமாக மரணிப்பதில்லை. 5அந்த மரத்திலிருந்து உண்ணும் நாளிலே, உங்கள் கண்கள் திறக்கப்படும்.#3:5 உங்கள் கண்கள் திறக்கப்படும் – நீங்கள் நன்மையையும் தீமையையும் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் இறைவனைப் போலாகி,#3:5 இறைவனைப் போலாகி – வானவர்களைப் போலாகி என்றும் மொழிபெயர்க்கலாம். நன்மையையும் தீமையையும் அறிவீர்கள் என்பது இறைவனுக்குத் தெரிந்த விடயம்” என்றது.
6அப்போது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் உண்பதற்கு நல்லதாகவும், பார்வைக்குக் கவர்ச்சியாகவும் இருந்ததுடன், அது அறிவைப் பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருக்கக் கண்டு, அவள் அதைப் பறித்து உண்டாள். தன்னுடன் இருந்த கணவனுக்கும் கொடுத்தாள், அவனும் உண்டான். 7உடனே அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டு, தாம் நிர்வாணமாக இருப்பதை அறிந்துகொண்டார்கள்; எனவே அவர்கள் அத்தியிலைகளைக் கோர்த்து தங்களை மூடிக்கொண்டார்கள்.
8அன்று மாலை, தென்றல் காற்று வீசும் வேளையில், இறைவனாகிய கர்த்தர் சோலையில் நடமாடுகின்ற சத்தத்தை மனிதனும் அவன் மனைவியும் கேட்டார்கள்; உடனே அவர்கள் சோலையிலிருந்த மரங்களுக்கு இடையில் இறைவனாகிய கர்த்தரிடமிருந்து ஒளிந்துகொண்டார்கள். 9ஆனாலும் இறைவனாகிய கர்த்தர் மனிதனை அழைத்து, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
10அதற்கு அவன், “நான் சோலையில் உமது சத்தத்தைக் கேட்டேன்; நான் நிர்வாணமாக இருந்தபடியால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான்.
11அதற்கு இறைவனாகிய கர்த்தர்#3:11 இறைவனாகிய கர்த்தர் – எபிரேய மொழியில் அவர் என்றுள்ளது., “நீ நிர்வாணமாக இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? உண்ண வேண்டாமென்று நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
12அதற்கு மனிதன், “ஆம். என்னுடன் இருப்பதற்கு நீர் எனக்குத் தந்த பெண்ணே அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள்; நான் உண்டேன்” என்றான்.
13அப்போது இறைவனாகிய கர்த்தர் அந்தப் பெண்ணிடம், “நீ செய்ததென்ன, ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, அதனால்தான் நான் உண்டேன்” என்று சொன்னாள்.
14எனவே இறைவனாகிய கர்த்தர் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்திருக்கின்றபடியால்,
“வளர்ப்பு மிருகங்கள், காட்டுமிருகங்கள்
எல்லாவற்றைப் பார்க்கிலும் நீ அதிகமாய் சபிக்கப்பட்டிருப்பாய்!
நீ வயிற்றினால் ஊர்ந்து திரிவாய்;
உன் உயிருள்ள நாளெல்லாம்
நீ புழுதியை சாப்பிடுவாய்.
15உனக்கும் பெண்ணுக்கும் இடையில் நான் பகையை ஏற்படுத்துவேன்,
உன்னுடைய சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் இடையிலும் நான்
பகையை ஏற்படுத்துவேன்;
அவர் உன் தலையை நசுக்குவார்#3:15 நசுக்குவார் – எபிரேய மொழியில் தாக்குவார்,
நீ அவரது குதிகாலைத் தாக்குவாய்”
என்றார்.
16அதன் பின்னர் அவர் பெண்ணிடம்,
“உனது மகப்பேற்றினை அதிக வேதனை உடையதாக்குவேன்;
நீ வேதனையோடு பாடுபட்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பாய்;
நீ உன் கணவன்மீது ஆசை கொண்டிருப்பாய்,
அவனோ உன்னை ஆட்சி செய்வான்”
என்றார்.
17அவர் ஆதாமிடம், “ ‘இந்த மரத்திலிருந்து உண்ண வேண்டாம்’ என்று நான் உனக்குக் கட்டளையிட்டு இருக்கையில், நீ உன் மனைவியின் குரலுக்கு செவிசாய்த்து அந்த மரத்திலிருந்து உண்டதனால்,
“உன் பொருட்டு மண்ணானது சபிக்கப்பட்டிருக்கும்;
உன் வாழ்நாளெல்லாம்
நீ வேதனையோடு பாடுபட்டு உழைத்தே மண்ணின் பலனை உண்பாய்.
18மண்ணானது முட்களையும் முட்புதர்களையும் உனக்கு விளைவிக்கும்,
வெளியிலுள்ள நிலத்தின் பயிர்களை நீ உண்பாய்.
19நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்,
நீ மீண்டும் அங்கு திரும்பும்வரை,
நெற்றி வியர்வை சிந்துமளவுக்கு உழைத்தே
உன் உணவைப் பெற்று உண்பாய்.
நீ மண் துகள்களால் ஆனவன்;
நீ மீண்டும் மண் துகள்களாக மாறுவாய்”
என்றார்.
20வாழ்வோருக்கெல்லாம் தாயாவாள் என்பதால், ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள்#3:20 ஏவாள் என்பதற்கு வாழ்வு தருபவள் என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினான்.
21இறைவனாகிய கர்த்தர் தோலினால் உடைகளைச் செய்து, ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் அணிவித்தார். 22அதன் பின்னர் இறைவனாகிய கர்த்தர், “மனிதன் இப்போது நன்மையையும் தீமையையும் அறிந்து, நம்மில் ஒருவரைப் போல் ஆகிவிட்டான். அவன் தன் கையை நீட்டி, வாழ்வளிக்கும் மரத்திலிருந்து பறித்து உட்கொண்டு, என்றென்றும் உயிர் வாழ அவனுக்கு இடமளிக்கக் கூடாது” என்றார். 23எனவே எந்த மண்ணிலிருந்து அவன் உருவாக்கப்பட்டானோ, அந்த மண்ணைப் பண்படுத்தி பயிர்செய்யும்படி, இறைவனாகிய கர்த்தர், அவனை ஏதேன் சோலையிலிருந்து வெளியேற்றினார். 24அவர் மனிதனை வெளியே துரத்திவிட்ட பின்னர், வாழ்வளிக்கும் மரத்துக்குப் போகும் வழியைக் காவல் காக்கும்படி, ஏதேன் சோலையின் கிழக்குப் பக்கமாக கேருபீன்களையும்#3:24 கேருபீன்களையும் – இறைவனின் பிரசன்னத்தில் வாழ்கின்ற விசேட உயிரினம், சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.