YouVersion လိုဂို
ရွာရန္ အိုင္ကြန္

ஆதி 36

36
அத்தியாயம் 36
ஏசாவின் சந்ததி 1 நாளா 1:35-37.
1ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு: 2ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் மகளாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும், 3இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் திருமணம் செய்திருந்தான். 4ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள். 5அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த மகன்கள். 6ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான். 7அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது. 8ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர். 9சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியர்களுடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும், 10ஏசாவின் மகன்களுடைய பெயர்களாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகனுக்கு எலிப்பாஸ் என்று பெயர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய மகனுக்கு ரெகுவேல் என்று பெயர். 11எலிப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். 12திம்னாள் ஏசாவின் மகனாகிய எலிப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகன்கள். 13ரெகுவேலுடைய மகன்கள், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்கள். 14சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள். 15ஏசாவின் மகன்களில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலிப்பாசுடைய மகன்களில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு, 16கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள். 17ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள். 18ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள். 19இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள்.
20அந்த தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 21திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள். 22லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். 23சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள். 24சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்திரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கும்போது, சூடான தண்ணிரைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான். 25ஆனாகின் பிள்ளைகள் திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் மகள். 26திஷோனுடைய மகன்கள் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். 27ஏத்சேருடைய மகன்கள் பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள். 28திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள். 29ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு, 30திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
ஏதோமின் ராஜாக்கள்
31இஸ்ரவேல் வம்சத்தார்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன: 32பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர். 33பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். 34யோபாப் இறந்தபின், தேமானிய தேசத்தானாகிய ஊஷாம் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். 35ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர். 36ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான். 37சம்லா இறந்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். 38சவுல் இறந்தபின், அக்போருடைய மகனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். 39அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள். 40தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு, 41அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, 42கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, 43மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

လက္ရွိေရြးခ်ယ္ထားမွု

ஆதி 36: IRVTam

အေရာင္မွတ္ခ်က္

မၽွေဝရန္

ကူးယူ

None

မိမိစက္ကိရိယာအားလုံးတြင္ မိမိအေရာင္ခ်ယ္ေသာအရာမ်ားကို သိမ္းဆည္းထားလိုပါသလား။ စာရင္းသြင္းပါ (သို႔) အေကာင့္ဝင္လိုက္ပါ