ஆதியாகமம் 4

4
முதல் குடும்பம்
1ஆதாமும் அவன் மனைவியும் பாலின உறவு கொண்டனர். அவள் கர்ப்பமுற்று காயீன் என்ற ஒரு குமாரனைப் பெற்றெடுத்து, நான், “கர்த்தரின் உதவியால் ஒரு மனிதனைப் பெற்றுள்ளேன்” என்றாள்.
2அதன் பிறகு ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவன் காயீனின் சகோதரனான ஆபேல். ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும், காயீன் ஒரு விவசாயியாகவும் வளர்ந்தனர்.
முதல் கொலை
3-4அறுவடைக் காலத்தில் காயீன் தன் வயலில் விளைந்த தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு போனான். ஆனால் ஆபேல் தன் மந்தையிலிருந்து சில சிறந்த ஆடுகளைக் கொண்டு போனான்.
கர்த்தர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். 5ஆனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் துக்கமும் கோபமும் கொண்டான். 6கர்த்தர் அவனிடம், “ஏன் நீ கோபமாயிருக்கிறாய்? ஏன் உன் முகத்தில் கவலை தெரிகிறது. 7நீ நன்மை செய்திருந்தால் எனக்கு விருப்பமானவனாக இருந்திருப்பாய். நானும் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் நீ தீமை செய்தால் பிறகு அந்தப் பாவம் உன் வாழ்வில் இருக்கும். உனது பாவம் உன்னை அடக்கி ஆள விரும்பும். நீயோ உன் பாவத்தை அடக்கி ஆளவேண்டும்”#4:7 நீ … அடக்கி ஆளவேண்டும் அல்லது, “நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசலண்டையே பதுங்கி இருக்கும். பாவம் உன்னை ஆளுகை செய்ய விரும்பும். ஆனால் நீ அதின் மேல் ஆட்சி செய்யவேண்டும்.” என்றார்.
8காயீன் தனது சகோதரன் ஆபேலிடம். “வயலுக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலுக்குப் போனார்கள். அங்கே காயீன் தன் தம்பியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டான்.
9பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான்.
10-11அதற்குக் கர்த்தர், “நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது இரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. இப்பொழுது அவனது இரத்தத்தை உன் கைகளிலிருந்து வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த, இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12கடந்த காலத்தில் நீ பயிர் செய்தவை நன்றாக விளைந்தன. ஆனால் இனிமேல் நீ பயிரிடுபவை விளையாதவாறு இந்த பூமி தடை செய்யும். இந்தப் பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக அலைந்துகொண்டிருப்பாய்” என்றார்.
13பிறகு காயீன், “என்னால் தாங்கிக்கொள்ள இயலாதவாறு இந்தத் தண்டனை அதிகமாக இருக்கிறது. 14எனது பூமியை விட்டுப் போகுமாறு நீர் என்னை வற்புறுத்துகின்றீர். நான் உமது பார்வையிலிருந்து மறைவேன். எனக்கென்று ஒரு வீடு இருக்காது. பூமியில் ஒவ்வொரு இடமாக அலையும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறேன். என்னைப் பார்க்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.
15பிறகு கர்த்தர் காயீனிடம், “அவ்வாறு நடக்குமாறு நான் விடமாட்டேன். எவராவது உன்னைக் கொன்றால் நான் அவர்களை மிகுதியாகத் தண்டிப்பேன்” என்றார். ஆகையால் கர்த்தர் காயீன்மீது ஒரு அடையாளம் இட்டார். அதனால் எவரும் அவனைக் கொல்லமாட்டார்கள் என்றார்.
காயீன் குடும்பம்
16காயீன் கர்த்தரைவிட்டு விலகிப்போய் ஏதேனின் கிழக்கிலிருந்த நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
17காயீன் தன் மனைவியுடன் பாலின உறவு கொண்டபோது அவள் ஏனோக் என்னும் பெயருள்ள குமாரனைப் பெற்றாள். காயீன் ஒரு நகரத்தை உருவாக்கி அதற்குத் தன் குமாரனின் பெயரை வைத்தான்.
18ஏனோக்குக்கு ஈராத் என்னும் குமாரன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் என்ற குமாரன் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் என்ற குமாரன் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான்.
19லாமேக் இரண்டு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதாள், இன்னொருத்தியின் பெயர் சில்லாள். 20ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான். 21ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு குமாரன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான். 22சில்லாள் தூபால்-காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் தந்தை ஆனான். தூபால் காயீனுக்கு, நாமாள் என்ற சகோதரி இருந்தாள்.
23லாமேக்கு தன் மனைவிகளிடம்,
“ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள்.
நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள்.
என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன்.
என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன்.
24காயீனின் கொலைக்காக கொடுக்கப்பட்ட தண்டனை மிகப்பெரியது.
என்னைக் கொல்வதால் கிடைக்கும் தண்டனையும் மிக அதிகமாகவே இருக்கும்” என்றான்.
ஆதாம்-ஏவாளுக்கு புதிய குமாரன் பிறந்தது
25ஆதாம் ஏவாளோடு பாலின் உறவு கொண்டான். ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சேத் என்று பெயரிட்டனர். ஏவாள், “தேவன் எனக்கு இன்னொரு குமாரனைக் கொடுத்திருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றான். ஆனால் நான் சேத்தைப் பெற்றேன்” என்றாள். 26சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பெயர் வைத்தான். அப்பொழுது மனிதர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர்.#4:26 மனிதர்கள் … ஆரம்பித்தனர் இலக்கிய வழக்கின்படி, மக்கள் தேவனை யெகோவா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

Markering

Deel

Kopiëren

None

Wil je jouw markerkingen op al je apparaten opslaan? Meld je aan of log in