ஆதியாகமம் 5

5
ஆதாமின் குடும்ப வரலாறு
1இது ஆதாமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி. தேவன் மனிதரைத் தம் சாயலிலேயே படைத்தார். 2தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார்.
3ஆதாமுக்கு 130 வயது ஆன பிறகு இன்னொரு குமாரன் பிறந்தான். அவன் ஆதாமைப்போலவே இருந்தான். ஆதாம் அவனுக்கு சேத் என்று பெயர் வைத்தான். 4சேத் பிறந்த பிறகும் ஆதாம் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் ஆதாமுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 5எனவே ஆதாம் மொத்தமாக 930 ஆண்டுகள் வாழ்ந்து, மரணமடைந்தான்.
6சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோஸ் என்ற குமாரன் பிறந்தான். 7ஏனோஸ் பிறந்த பிறகு சேத் 807 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 8சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான்.
9ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற குமாரன் பிறந்தான். 10கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 11ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தான்.
12கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற குமாரன் பிறந்தான். 13மகலாலேயேல் பிறந்த பிறகு கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 14ஆகவே கேனான் 910 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
15மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற குமாரன் பிறந்தான். 16யாரேத் பிறந்த பின் மகலாலேயேல் 830 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 17மகலாலேயேல் 895 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
18யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற குமாரன் பிறந்தான். 19ஏனோக் பிறந்த பின் யாரேத் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 20யாரேத் மொத்தம் 962 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
21ஏனோக்குக்கு 65 வயதானபோது அவனுக்கு மெத்தூசலா என்ற குமாரன் பிறந்தான். 22மெத்தூசலா பிறந்தபின் ஏனோக் 300 ஆண்டுகள் தேவனோடு வழிநடந்தான். அக்காலத்தில் அவன் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். 23அவன் மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான். 24ஒரு நாள் ஏனோக் தேவனோடு நடந்துகொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
25மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான். 26லாமேக் பிறந்தபின் மெத்தூசலா 782 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 27மெத்தூசலா 969 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
28லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்கு ஒரு குமாரன் பிறந்தான். 29அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். அவன், “நாம் விவசாயிகளாக பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியைச் சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்றான்.
30நோவா பிறந்தபின், லாமேக் 595 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவன் ஆண் பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். 31லாமேக் மொத்தம் 777 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
32நோவாவுக்கு 500 வயதானபின் அவனுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் ஆண்பிள்ளைகள் பிறந்தனர்.

Markering

Deel

Kopiëren

None

Wil je jouw markerkingen op al je apparaten opslaan? Meld je aan of log in