4
அத்தியாயம் 4
சமாரியா நாட்டுப் பெண்
1யோவானைவிட இயேசு அநேகம்பேரைச் சீடர்களாக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டதை இயேசு அறிந்தபோது, 2யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார். 3இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள். 4அப்பொழுது அவர் சமாரியா நாட்டின்வழியாகப் போகவேண்டியதாக இருந்தபடியால், 5யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 6அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார். 7அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். 8அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார். 9யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். 10இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும். 12இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள். 13இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். 14நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். 15அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். 16இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். 17அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். 18எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். 19அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன். 20எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள். 21அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது. 22நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது. 23உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார். 25அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். 26அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
சீடர்கள் இயேசுவோடு இணைதல்
27அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. 28அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து: 29நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். 30அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். 31இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். 32அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார். 33அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள். 34இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது. 35அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 36விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். 37விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது. 38நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
சமாரியர்கள் அவரை விசுவாசித்தல்
39நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள். 40சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார். 41அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, 42அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
அதிகாரியின் மகனைச் சுகமாக்குதல்
43இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார். 44ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மரியாதை இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார். 45அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள். 46பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான். 47இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். 48அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். 49அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான். 50இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான். 51அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். 52அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள். 53உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள். 54இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்.